புதுச்சேரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் 50 சதவீதம் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு அவரவர் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென பிரத்யேகமாக நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை மாற்ற தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மக்களை ஊக்கப்படுத்த அடுத்தடுத்து தடுப்பூசி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
இதற்காக புதுச்சேரி முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய யூனியன் பிரதேசமாக புதுவையை மாற்றுவது மிக முக்கியமானது. அதற்கு அனைத்து விதமான உத்திகளும் கையாளப்படுகின்றன என்று புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் பிபிசி தமிழிடம் கூறினார்.
"சுகாதாரத்துறை சார்பாக புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு புறம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவிற்குள்ளேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும், வாதம், முடக்கம் காரணமாக நடமாட முடியாதவர்கள், படுத்த படுக்கையில் இருப்பவர்கள், பார்வை குறைபாடு கொண்டவர்களை தடுப்பூசி போடுவதற்கு அழைத்துவர முடியாது. மேலும், அவர்களை போன்றுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கும், அவர்களுக்காக சேவை செய்பவர்களுக்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆகவே அவர்களின் நலன் கருதி வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளோம்.

முன்னதாக இதுபோன்று வீட்டிற்கு வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களுக்கு இந்த சேவையை அளித்தோம். அவ்வாறு செய்தபோது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகவே இதை பிரத்யேக சேவையாக செய்ய முடிவெடுத்து, அதற்கென தனிக் குழு மற்றும் வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த சேவை தேவைப்படுவோர் இலவச அலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்த சேவையை உடல்நலமுடன் இருப்பவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது," என்கிறார் அருண்.
"18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். அடுத்து வரும் 30 நாட்களில் மீதமுள்ள 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது கடினமாக இருந்தாலும், தடுப்பூசி இருப்பிற்கு ஏற்ப செலுத்தி வருகிறோம்.
மேற்கொண்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அதற்கேற்ப தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்படும். இதுவரை மூன்று தடுப்பூசி திருவிழாக்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த திருவிழாவும் நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார் சுகாதாரத்துறை செயலர்.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதால், புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கென பிரத்யேகமாக தடுப்பூசி செலுத்தும் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக புதுச்சேரி அரசு கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி வருகிறது.

"பிற மாநிலங்களில் தடுப்பூசி செலுத்த மணி கணக்காக காத்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் புதுச்சேரியில் அதுபோன்று இல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி சுலபமாக கிடைக்கிறது. தடுப்பூசி செலுத்தப் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அருகாமையில் உள்ள முகாம் மற்றும் மையங்களில் சுலபமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். ஆகவே இதை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார் அருண்.
வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு பயனாளிகளிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாக நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவக்குழுவில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர் இரா.வெங்கடேஸ்வரன் தெரிக்கிறார்.
இதனால் பயனடைந்த 95 வயது மூதாட்டியின் மகள் ஷாமலா கூறுகையில், "எனது தாய்க்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். எங்கள் வீட்டில் அனைவருமே தடுப்பூசி எடுத்துக்கொண்ட சூழலில், எழுந்து உட்கார முடியாத நிலையில் உள்ள எனது தாய்க்கு எப்படி தடுப்பூசி செலுத்த அழைத்து செல்வது என்று கவலையாக இருந்தது. அவரை சக்கர நாற்காலியில் கூட அழைத்து செல்வது மிகவும் கடினமானது. இந்த நிலையில் வீட்டுக்கே வந்து தடுப்பூசி செலுத்தியது பயனுள்ளதாக இருக்கிறது," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- டேனிஷ் சித்திகி: ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் - என்ன நடந்தது?
- பிராசாந்த் கிஷோர் எதிர்காலம் என்ன? அரசியல் ஆலோசகரா? அரசியல்வாதியா?
- வாழ்: சினிமா விமர்சனம்
- தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்?
- ஆடியோ ரிலீஸ்.. ஜெயலலிதா பாசம்.. அ.தி.மு.கவை அசைக்குமா சசிகலாவின் அஸ்திரம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












