வாழ்: சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், vaazh official trailer
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: பிரதீப், டிஜே பானு பார்வதமூர்த்தி, ஆரவ் எஸ். கோகுல்நாத், திவா, நித்யா; ஒளிப்பதிவு: ஷெல்லி கலிஸ்ட்; இசை: பிரதீப் குமார்; இயக்கம்: அருண் பிரபு புருஷோத்தமன்.
வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு, அருவி என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம்தான் இந்த 'வாழ்'.
ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்யும் சாதாரண இளைஞனான பிரகாஷின் (பிரதீப்) வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளம்பெண்ணாலும் (டிஜே பானு) அதனால் அவன் மேற்கொள்ளும் பயணங்களாலும் அவனது வாழ்க்கையே திசைமாறிப் போகிறது.
பயணத்தின் முடிவில் நாயகன் என்னவாக ஆகிறான் என்பதே கதை. 'நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நாம் வாழ்வை மாற்றுகிறார்கள்' என்ற ஒன் லைன்தான் படம்.
படத்தின் துவக்கம் சற்று தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும், சிறிது நேரத்தில் சூடுபிடிக்கிறது. யாத்ராம்மாவைக் கூட்டிக்கொண்டு கதாநாயகன் மேற்கொள்ளும் பயணம் ஒரு கட்டம்வரை சுவாரஸ்யமாகவே செல்கிறது. நன்னிலத்தில் ஒரு பெரியவரைச் சந்தித்த பின் நடக்கும் சம்பவங்கள் இதன் உச்சகட்டமாக அமைகின்றன. ஆனால், அதற்குப் பிறகு படம் வீழ்ச்சியைச் சந்திக்கிறது.

பட மூலாதாரம், vaazh official trailer
கதாநாயகி என்ன செய்ய நினைத்தாள் என்பதில் ஒரு தெளிவு இல்லை. அவளது பாத்திரம் முடிந்ததும் அறிமுகமாகும் தான்யாவின் பாத்திரத்திலும் தெளிவு இல்லை. தான் காதலிக்கும் பெண் அடிக்கடி அழைக்கிறாள், தொந்தரவு செய்கிறாள் என்பதற்காகவே அவளது உறவையே துண்டிக்கும் கதாநாயகன், அடுத்தடுத்து பெரிய பெரிய சவால்களை எடுத்துக்கொண்டே செல்வது முரணானதாக இருக்கிறது.
சாதாரண பெண்ணாக அறிமுகமாகும் யாத்ராம்மா, கணவனைக் கொலைசெய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு, சமீபத்தில் மீண்டும் அறிமுகமான பழைய நண்பனை அழைத்துக்கொண்டு ஒரு யாத்திரையை மேற்கொள்வதற்கான காரணம் புதிராக இருக்கிறது.
குழந்தையை கதாநாயகனின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டுமென நினைத்திருந்தால், அதை சென்னையிலேயே செய்திருக்கலாமே என்ற கேள்வியெழுகிறது. அந்த பயணத்தில் நிகழும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் சிறிது நேரத்திற்கு இந்தக் கேள்விகள் எழுவதை தடுக்கின்றன. ஆனால், இதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் விரைவிலேயே படத்தை ஒரு பொருளற்ற பயணமாக மாற்றிவிடுகின்றன.

பட மூலாதாரம், vaazh official trailer
படத்தின் மிகப் பெரிய பலமாக ஷெல்லி கலிஸ்டின் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது. சாதாரண நிலக்காட்சிகளைக்கூட பிரமாதமான கோணங்களிலும் வண்ணங்களிலும் காட்டியிருக்கிறார் . அதேபோல, பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் நோக்கத்தை முழுமையாக உணர்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழில் இதுவரை வெளிவந்த பயணத் திரைப்படங்கள் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தியதில்லை. ஆனால், 'வாழ்' திரைப்படம் அந்தத் திசையில் சற்று மேம்பட்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- பிராசாந்த் கிஷோர் எதிர்காலம் என்ன? அரசியல் ஆலோசகரா? அரசியல்வாதியா?
- தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்?
- போதை ஊசிகள் வியாபாரம்: கோவை இளைஞர்கள் இலக்காவது எப்படி?
- 5 மணி நேரத்துக்கு ஒரு என்கவுன்டர்; லவ் ஜிகாத் கைதுகள் - உ.பி அரசை விமர்சித்து சிசிஜி திறந்த மடல்
- அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












