அண்ணாமலையும் ஆறு சர்ச்சைகளும்: `தூக்கிப் போட்டு மிதிச்சேன்னா' முதல் `கொங்கு முதல்வரே' வரை!

பட மூலாதாரம், ANNAMALAI
- எழுதியவர், விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு பா.ஜ.கவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ஜூலை 16 ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கிறார். இந்த கட்சியில் சேர்ந்த ஓராண்டுக்குள்ளாகவே அவருக்கு மாநில தலைவர் பதவி கிடைத்திருக்கிறது. இடைப்பட்ட நாட்களில் பொது இடங்களில் அண்ணாமலை வெளியிடும் கருத்துகள், வரவேற்பைப் பெற்றதை விட சர்ச்சைகளுக்கே அதிகம் வழிவகுத்தது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர் அண்ணாமலை. கோவையில் கல்லூரி படிப்பை முடித்தவுடன் லக்னெளவில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உயர் படிப்பை நிறைவு செய்தார்.
பின்னர், இந்திய காவல் பணிக்கு தேர்வாகி கர்நாடக மாநில பிரிவு ஒதுக்கப்பட்டதால் அந்த மாநிலத்தில் பணியாற்றினார். அங்கு தனது அதிரடி நடவடிக்கைகளால் `சிங்கம்' என்று அழைக்கப்பட்டார். காவல் பணியில் ஒன்பதாண்டுகளை நிறைவு செய்த பிறகு, பணியில் இருந்து விலகுவதாக 2018இல் திடீரென அறிவித்தார் அண்ணாமலை. பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பியவர் விவசாயி ஆக அவதாரம் எடுத்தார்.
அதேநேரம், அரவக்குறிச்சியில் `வீ த லீடர்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பில் மாரத்தான் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தி மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். இதே காலட்டத்தில், அரசியலில் இறங்கப் போவதாக ரஜினி அறிவித்தார்.
ஆனால், `தான் முதல்வர் வேட்பாளர் அல்ல' என ரஜினி கூறியதும், `முதல்வர் வேட்பாளர் ஐ.பி.எஸ் அண்ணாமலைதான்' என சமூக வலைதளங்களில் விவாதங்கள் பறந்தன. ஆனால், இதற்கு அண்ணாமலை தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. இதேவேளை, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவில் இணைந்தார் அண்ணாமலை. அடுத்து வந்த நாள்களில் தமிழ்நாடு பா.ஜ.கவின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஐ.பி.எஸ் பதவியில் இருந்து விலகிய பிறகு விவசாயி, தன்னார்வ அமைப்பு, பா.ஜ.க என படிப்படியாக அண்ணாமலை பயணம் சென்று கொண்டிருந்தாலும் அவரைச் சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை.
"எனக்கு இன்னொரு முகம் இருக்கு"
சர்ச்சை 1 :
சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இளங்கோவை எதிர்த்து அண்ணாமலை போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் பேசிய அண்ணாமலை, ` செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துரும். நான் எவ்வளவோ பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டுத்தான் வந்திருக்கேன். நான் வன்மத்தைக் கையில் எடுப்பதற்குத் தயாராக இல்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அகிம்சைவாதியா அரசியல் போராட்டம் நடத்திட்டு இருக்கேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடக முகம். அதை இங்கே காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் இல்லை' என அதிர்ச்சி கொடுத்தார்.
அண்ணாமலையின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, ` அண்ணாமலை என்றால் அவருக்கு ரஜினி என்ற நினைப்பு போல. செந்தில் பாலாஜியை அடிச்சிருவேன்னு சொல்றாரு. செந்தில் பாலாஜி மேல் கை வச்சுப் பாரு தம்பி. உடன்பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது; இது தமிழ்நாடு. இங்கு வச்சுக்க வேண்டாம். எங்கே, யார், எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும்' என கொதித்தார்.
இதன் தொடர்ச்சியாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் (153), கொலை மிரட்டல் (506/1), தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பள்ளப்பட்டி இந்தியாவில்தானே இருக்கு?
சர்ச்சை 2:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி, சின்ன தாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினர் அதிகப்படியாக வசிக்கின்றனர். இதில், பள்ளப்பட்டியில் மட்டும் 29,000 இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது, பள்ளப்பட்டி ஜமாத்துக்கும் அண்ணாமலைக்கும் இடையே உரசல்கள் வெளிப்பட்டன.
இதுபற்றி பேசிய அண்ணாமலை, `பள்ளப்பட்டிக்குள் பா.ஜ.க வாகனம் செல்லும். எங்களுக்கு ஜமாத் உள்பட யாருடைய அனுமதியும் வேண்டாம். நாங்கள் பிரசாரம் செய்வோம். பள்ளபட்டி இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கு ஜமாத்தில் உள்ள 8 பேர் கையெழுத்து போட்டு யார் உள்ளே வர வேண்டும், வரக் கூடாது எனச் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இஸ்லாம் மதத்தைப் பற்றித் தெரிந்த நபர் என்னோடு பொதுமேடையில் விவாதம் செய்யட்டும். எந்த ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது எனப் பேசுவோம். இதைப் பற்றியெல்லாம் தெரியாத 8 பேர் கையெழுத்து போடுகிறார்கள். அதுக்கு ஜமாத்தை தி.மு.க என்று பெயர் மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே. குரானைப் பற்றி நான் 42 நிமிடங்கள் பேசியுள்ளேன். அதையெல்லாம் அவர்கள் கேட்கட்டும். இதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் நான் இல்லை. பள்ளபட்டிக்கும் பா.ஜ.க வாகனம் செல்லும். பள்ளபட்டி இருப்பது இந்தியாவில்தான். அதில் அனைத்து சமூக மக்களும் சமம். தி.மு.க இதுநாள் வரையில் செய்த நாடகத்தை எல்லாம் அடித்து நொறுக்குவோம்' என்றார்.
ஜெயலலிதா ஆசி பெற்ற வேட்பாளர்
சர்ச்சை 3:
அரவக்குறிச்சியில் அண்ணாமலை தரப்பினர் மேற்கொண்ட பிரசாரத்திலும் மாற்றங்கள் தென்பட்டன. பொதுவாக, பா.ஜ.கவினர் எழுப்பும் `பாரத் மாதா கி ஜே' என்ற முழக்கங்கள் எழுப்பப்படவில்லை. சில இடங்களில் வரையப்பட்ட சுவர் விளம்பரங்களில், `ஜெயலலிதா ஆசிபெற்ற வேட்பாளர்' என வரையப்பட்டிருந்தது, சர்ச்சையானது.

பட மூலாதாரம், ANNAMALAI
அதிலும், குறிப்பிட்ட ஒரு சுவர் விளம்பரத்தில் மோதியின் பெயர் அழிக்கப்பட்டிருந்தது. `தேர்தல் பிரசாரத்தில் மோடி, அமித் ஷா பெயரை கூறினால் வாக்குகள் வராது' என்பதால் பா.ஜ.கவினர் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியானது.
சர்ச்சை 4:
தமிழ்நாடு பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, `வரவேற்புகளில் பிரமாண்டம் காட்டப்பட வேண்டும்' எனக் கூறியதால் கரூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளைக் கொடுத்தும் கொண்டாடினர். அப்போது அந்த வழியாகச் சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், "கொரோனா காலத்தில் உரிய அனுமதியை பெற்றுத்தான் பட்டாசு வெடிக்கிறார்களா," என விசாரித்துவிட்டு, பா.ஜ.கவினரை கைது செய்யுமாறு உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
`செந்தில் பாலாஜி பட்டாசு வெடித்தால் மௌனமாகத்தானே இருக்கிறீர்கள். அண்ணாமலைக்காக வெடித்தால் கைது செய்வீர்களா?' எனக் கேட்டு தகராறில் ஈடுபடவே, அவர்களை போலீசார் கைது செய்யாமல் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
பெரிய சங்கி.. சின்ன சங்கி
சர்ச்சை :5
மாநில தலைவரான பிறகு திருப்பூர் பேருந்து நிலையம் அருகே நடந்த வரவேற்பு நிகழச்சியில் பேசிய அண்ணாமலை`` தி.மு.க ஆட்சியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீட் வேண்டாம்; புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்கிறது தி.மு.க. சரியாக ஆட்சி செய்கிறார்களா என்றால், அதுவும் கிடையாது. இன்றைக்கு பிரதமர் மோடி வழங்கும் தடுப்பூசியைக்கூட தி.மு.கவினர் மொத்தமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் தி.மு.கவினர் கட்சித் துண்டை போட்டுக்கொண்டு தடுப்பூசி டோக்கனை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சாதாரண மக்களுக்கு தடுப்பூசி வருகிறதா என்றால் இல்லை. தி.மு.க குடும்பத்துக்குத் தடுப்பூசி செல்கிறது. அடுத்த 4 மாதத்தில் திமுகவின் ஒவ்வொரு பொய்யையும், முள்ளையும் வேரறுப்போம். நீட் வேண்டாம், புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்றும், எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என்றும் தி.மு.க. சொல்கிறது. ஆட்சியை சரியாக நடத்துகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. மற்றவர்கள் குடும்பத்திற்காக கட்சி நடத்துகின்றனர்.
இது உண்மையான தொண்டர்கள், தலைவர்கள் உள்ள கட்சி. இனியும் நாம் பொறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்தாக வேண்டும்" என்றார். `தி.மு.க குடும்பத்துக்கு தடுப்பூசி செல்கிறது' என்ற அண்ணாமலையின் வார்த்தையால், உடன்பிறப்புகள் கொந்தளித்தார்கள்.
அதேநாளில், அண்ணாமலையை வரவேற்றுப் பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல், `அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்தி இந்த சின்ன சங்கி அண்ணாமலை. திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும் இன்னாள் சங்கியுமான அண்ணாமலையை வரவேற்கிறேன்' எனப் பேசவே, `இவர் பாராட்டுகிறாரா.. கிண்டல் செய்கிறாரா?' என பா.ஜ.கவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
கொங்கு நாட்டு முதல்வரா?

பட மூலாதாரம், ANNAMALAI
சர்ச்சை: 6
சேலத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, `பொய்யை மட்டும் நம்பி ஆட்சி நடத்தும் தி.மு.கவை மக்கள் பார்த்துவிட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னுடைய எதிரியாக பா.ஜ.கவை தி.மு.க அறிவித்து வருகிறது. இதனை நாங்களும் ஏற்கிறோம். எங்களின் எதிரி என்று தெரிந்த பிறகு அவர்களை வீழ்த்துவது சுலபம். அவர்கள் பா.ஜ.கவின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்த்து அரசியல் செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் 4 பேர் கிடைத்துள்ளனர். இது 150 ஆக உயர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பேரில் ஒருவர் மத்திய அரசின் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர். இதை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்," என்றார்.
கோவை வ.உ.சி மைதானம் அருகே அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்களில், `கொங்கு நாட்டு முதல்வரே' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வரிசையில், சென்னையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளிலும், `நாளைய முதல்வரே' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது, பா.ஜ.க மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாக சென்னை வரும் வழியில் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, "நம்மைப் பற்றி ஊடகங்கள் சில தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இனி அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். தற்போது இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருப்பது எல். முருகன். அதனால் இனி யாராலும் தப்பான செய்தியை போட முடியாது. இந்த ஊடகங்கள் எல்லாம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்," என்று கூறினார். இவரது இந்த கருத்தும் சமீபத்திய சர்ச்சையாகி இருக்கிறது.
பிற செய்திகள்:
- 5 மணி நேரத்துக்கு ஒரு என்கவுன்டர்; லவ் ஜிகாத் கைதுகள் - உ.பி அரசை விமர்சித்து சிசிஜி திறந்த மடல்
- அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா?
- ராகுல், பிரியங்காவுடன் சந்திப்பு: பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைகிறாரா?
- ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் தங்கள் கொடியை ஏற்றிய தாலிபன்கள்
- தென்னாப்பிரிக்கா கலவரம்: 70க்கும் அதிகமானோர் பலி, நாடு முழுவதும் பதற்றம்
- தாலிபன் Vs அமெரிக்கா: ஆப்கானிஸ்தானை மாற்றிய 20 ஆண்டு யுத்தம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












