நரேந்திர மோதி அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்கள் விலக்கப்பட்டது ஏன்? - விரிவான பின்னணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி நிருபர்
நரேந்திர மோதி அரசில் புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இது வரையிலான அனைத்து அரசாங்கங்களிலும் மிகப்பெரிய அமைச்சரவை விரிவாக்கம் இது.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 12 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
'குறைவான அரசின் தலையீடு அதிக நிர்வாகம்' என்ற முழக்கத்தை முன்னெடுத்த நரேந்திர மோதியின் அரசாங்கத்தில் 36 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசியல் ஆய்வாளர்கள் இதற்குப் பின்னால் இரண்டு பெரிய காரணங்கள் இருப்பதாகக் கருதுகின்றனர் - ஒன்று நடைமுறை அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் பெருந்தொற்றுக் காலத்தில் பொதுமக்களுக்கு கள நிலவரங்களை நிரூபிக்க வேண்டியதன் அவசியம்.
"இது அரசியல் எதார்த்தம் தான். அரசாங்கத்திற்கு அரசியல் நிர்பந்தங்களும் உள்ளன. இதற்கு முன்னர் பிரதமர் பல அமைச்சகங்களை ஒருங்கிணைத்திருந்தார் என்பது உண்மைதான். பல அமைச்சகங்களை ஒன்றாக்கினார். இந்த முறையும் அது போன்ற நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது' என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏராளமான அமைச்சர்களைச் சேர்த்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த, மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங்
"நீங்கள் என்ன கோஷத்தை முன்வைத்தீர்கள், உங்கள் சித்தாந்தம் என்ன, கொள்கை என்ன இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. இறுதியாகச் செயல்பாடு எப்படி, அதன் விளைவு என்ன என்பது தான் முக்கியம். உங்கள் செயல்பாடு எப்படி இருந்தது என்பதைப் பொருத்துத் தான் பொதுமக்கள் வாக்களிப்பார்கள். களத்தில் என்ன விளைவு ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தைத் தான் இந்த அமைச்சரவை விரிவாக்கம் காட்டுகிறது."
பிரதமர் நரேந்திர மோதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுவாகும். இதில் மொத்தம் 43 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
பிரதமர் மோதி ஜூன் மாதத்தில் அனைத்து அமைச்சகங்களையும் பரிசீலித்திருந்தார். அனைவரின் பணியும் எல்லா கோணத்திலும் முழுமையாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், எந்த அமைச்சரை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோதி முடிவு செய்தார் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். முதலில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஐந்து முக்கிய அமைச்சர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
1. ஹர்ஷ்வர்தன்

பட மூலாதாரம், ANI
கோவிட் தொற்றுக் காலத்தில் இந்திய சுகாதார அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் கூடப் பதவி விலகியுள்ளார். அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான பிரதீப் சிங் கூறுகையில், "பிரதமர் இவரது பணியில் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
பிரதமர் நரேந்திர மோதி ஜூன் மாதம் அனைத்து அமைச்சகங்களின் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மூத்த ஊடகவியலாளர் அதிதி ஃபட்னிஸ், "சுகாதார அமைச்சகம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுக்காலத்தில் மக்கள் சந்தித்த கஷ்டங்கள் அல்லது சேதங்கள் எதுவாக இருந்தாலும், அவை மீண்டும் நடக்க அனுமதிக்கப்படாது என்பதை அரசாங்கம் தெரிவிக்க விரும்புகிறது." என்றார்.
சுகாதார அமைச்சரை நீக்குவது, தொற்றுநோய்க் காலத்தை அவர் திறமையாக நிர்வகிக்க தவறிவிட்டாரா, உயிர்களைக் காக்கத் தவறிவிட்டாரா என்கிற கேள்விகளை எழுப்பக்கூடும். ஆனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பிரதமர் மோதி அதிகம் பொருட்படுத்துவதில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரதீப் சிங் கூறுகிறார், "சுகாதார அமைச்சரை நீக்குவது என்பது அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அவரை நீக்குவதன் மூலம், கொரோனா தொற்றுநோயை நிர்வகிப்பதில் அரசாங்கம் தவறிவிட்டதா என்ற கேள்வி எழும். பிரதமருக்கும் இது தெரியாமல் இருக்காது. ஆனால் அவர் செயல்படும் முறை இதுதான், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அவர் அதிகம் பொருட்படுத்துவதில்லை." என்று கூறுகிறார்.
இது குறித்து, அதிதி ஃபட்னிஸ், "கோவிட் கால நிர்வாகத்தில் மக்களைக் கைதட்டச் சொல்லிய ஒரு காலகட்டம் இருந்தது. பின்னர், பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி அழும் காலகட்டம் வந்தது. இப்போது, இனி அழுது புலம்பும் வேலை இல்லை. களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக் காட்டும் கட்டம்" என்று கூறுகிறார்.
2. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்

பட மூலாதாரம், ANI
புதிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, கல்வி அமைச்சரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மலைப்பகுதிகளின் பிரதிநிதியாக அமைச்சரவையை அலங்கரித்தார்.
இந்தியாவின் புதிய கல்வி கொள்கை அவரது காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் நிஷாங்கின் தோல்வி தான் அவரை நீக்குவதற்குக் காரணம் என பிரதீப் சிங் கருதுகிறார்.
"புதிய கல்விக் கொள்கையில் நிஷாங்கின் பணிகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி கோபமடைந்தார். அரசாங்கம் கல்விக் கொள்கையில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, ஆனால் அது பற்றி விவாதிக்கப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை என்ன மாற்றங்களைக் கொண்டு வரும், அதன் சிறப்பம்சம் என்ன என்பது செய்தியாகவில்லை. கல்விக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல நிஷாங்க் தவறிவிட்டார். ஒருவேளை இது குறித்துக் கூடப் பிரதமர் கோபமடைந்திர்க்கலாம்." என்கிறார் அவர்.
கொரோனா காரணமாக மத்தியக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
"புதிய கல்விக் கொள்கை இந்த அமைச்சரின் காலத்தில் தான் வடிவமைக்கப்பட்டது. சிபிஎஸ்இயின் 12 மற்றும் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதிகளைப் பற்றிய குழப்பம் மக்களுக்குப் பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. அரசின் நிலைப்பாடு என்ன, தேர்வு நடக்குமா இல்லையா என்பது ஒரு மாதம் முன்னர் வரை புரியாத புதிராகவே இருந்தது." என்று விளக்குகிறார் அதிதி.
3. ரவிசங்கர் பிரசாத்

பட மூலாதாரம், ANI
ட்விட்டர் விவகாரத்தில் சிக்கியுள்ள ரவிஷங்கர் பிரசாத் இதே ட்விட்டர் சிக்கலால் தான் விலக்கப்பட்டிருக்கிறார் என அதிதி கருதுகிறார்.
"ரவிசங்கர் பிரசாத்தின் ராஜினாமாவிற்கு ட்விட்டர் சர்ச்சை ஒரு காரணம். உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை இவர் கையாண்ட விதம் காரணமாக, அமெரிக்கா கூட இந்தியா மீது குற்றம் கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. எந்தவொரு உலகளாவிய பிரச்சனைகளிலும் ஈடுபடுவதை இந்தியா விரும்பவில்லை. இது இந்தியாவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது." என்கிறார் அதிதி.
மக்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான தரவுப் பாதுகாப்புச் சட்டத்தையும் இந்தியா கொண்டு வருகிறது. இது குறித்துக் கூட்டு நாடாளுமன்றக் குழு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஆனால் ரவிசங்கர் பிரசாத் இந்த அறிக்கையை வழங்குவதற்கு முன்பே தான் இந்த அறிக்கையில் மிகவும் திருப்தியடைவதாக அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
"தரவுக் கொள்கை குறித்த பணிகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட அதே தீவிரத்தோடு இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன." என்று அதிதி கூறுகிறார்.
4. பிரகாஷ் ஜாவ்டேகர்

பட மூலாதாரம், ANI
பிரதமர் நரேந்திர மோதி, சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரையும் வெளியேற்றியிருக்கிறார். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் திறம்படப் பணிகள் ஆற்றப்படவில்லை. இரண்டாவதாக, கட்சிக்குள் பிரகாஷ் ஜவடேகரின் ஆதரவும் குறைந்துள்ளது.
"சுற்றுச்சூழல் அமைச்சின் வலைத்தளத்தைப் பார்த்தால், 2020க்குப் பிறகு இந்த அமைச்சகம், எந்தவொரு புதிய முயற்சியையும் எடுக்கவில்லை என்பது தெரியும்" என்கிறார் அதிதி.
தற்போதைய சூழலில், இந்தியா பல சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டுள்ளது. டிசம்பர் மாதம் கான்பெர்ராவில் சிஓபி -26 கூட்டம் நடைபெற உள்ளது, இதில் சுற்றுச்சூழல் குறித்துப் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அப்படியிருந்தும், சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த திசையில் எந்த சிறப்புச் செயல்பாட்டையும் முன்னெடுக்கவில்லை" என்று அதிதி கூறுகிறார்.
"அடுத்த ஆண்டுக்குள் இந்தியா ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடும் என்று ஒரு முழக்கத்தைப் பிரதமர் வழங்கியுள்ளார், ஆனால் சுற்றுச்சூழல் அமைச்சின் வலைத்தளத்திலோ, அவ்வமைச்சகத்தில் பணிகளிலோ இவ்வளவு பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதனால் பிரதமர் அதிருப்தி அடைந்திருக்கலாம்"
5. சந்தோஷ் கங்வார்

பட மூலாதாரம், ANI
சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்த சந்தோஷ் கங்வாரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கொரோனாவின் முதல் அலை இந்தியாவைத் தாக்கியபோது,ஏராளமான வெளி மாநிலத் தொழிலாளர்கள், நகரங்களிலிருந்து கிராமங்களுக்குச் சென்றனர். இதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.
புலம்பெயர்ந்தோர் நெருக்கடி காரணமாக, மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, மேலும் இந்தியாவின் பிம்பமும் உலக அளவில் பாதிக்கப்பட்டது.
"சந்தோஷ் கங்வார் நீக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மிகப்பெரிய காரணம் அவர் புலம்பெயர்ந்தோர் நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்பதே என்று நம்பப்படுகிறது. மத்திய அரசும் மாநில அரசுகளும் கலந்து ஒரு கொள்கையை உருவாக்கியிருக்க வேண்டும். தொழிலாளர் துறை அமைச்சருக்கு முழுப்பொறுப்பு இல்லை. ஆனாலும் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்." என்கிறார் அதிதி.
கங்வாரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான மற்றொரு காரணம் யோகி ஆதித்யநாத்துக்கு அவரால் எழுதப்பட்ட கடிதமாக இருக்கலாம் என்று அதிதி கருதுகிறார்.
"சந்தோஷ் கங்க்வாரை அகற்றுவதற்கான உண்மையான காரணம் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் எழுதிய கடிதம், அதில் அவர் கோவிட்டின் இரண்டாவது அலையின் போது அரசாங்கத்தின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்தார். சந்தோஷ் கங்வார் முக்கியமான கேள்விகளை எழுப்பினார். ஆனால் அரசாங்கம், யோகி ஆதித்யநாத்தின் மீதான விமர்சனம் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற செய்தியை உணர்த்துகிறது. உ.பி.யில் யோகி ஆதித்யநாத்தின் செயல்திறன் குறித்த விமர்சனங்கள் எதிர்வரும் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பாஜக அரசு அறிந்திருக்கிறது."
ராஜினாமா செய்த மற்ற அமைச்சர்கள்

பட மூலாதாரம், ANI
இந்த அமைச்சர்களைத் தவிர, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோவும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் கட்சியின் மோசமான செயல்திறன் காரணமாக அவர் நீக்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது.
"மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகளுக்கு பாபுல் சுப்ரியோ பொறுப்பேற்க வேண்டியிருந்தது. மேலும் அவர் ஒரு நட்சத்திரத்தைப் போலவே நடந்து கொண்டார், இது ஒரு அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கப்படவில்லை" என்று பிரதீப் சிங் கூறுகிறார்.
இவர்களைத் தவிர, தாவர்சந்த் கெஹ்லோட் (சமூக நீதி அமைச்சர்), தேபோஸ்ரீ சவுத்ரி (மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்), சதானந்த கவுடா (உரங்கள் மற்றும் ரசாயன அமைச்சர்), சஞ்சய் தோத்ரே (கல்வித்துறை அமைச்சர்), பிரதாப் சாரங்கி மற்றும் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நீக்குவதற்கு ஒரு காரணம், அரசாங்கத்தில் புதிய அமைச்சர்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே. "வேலை செய்தால் இருக்கலாம், இல்லையென்றால் வீட்டுக்குப் போகலாம்" என்ற தனது கொள்கையை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது" என்று கூறுகிறார் பிரதீப்.
பிரதீப் சிங் கூறுகிறார், "ஒவ்வொரு அமைச்சின் பணிகளையும் பிரதமர் மதிப்பாய்வு செய்துள்ளார். இந்த அரசாங்கத்தில் இது ஒரு நல்ல விஷயம் என்றும் கருதலாம். பிரதமர் தான் வேலை கொடுக்கும் முதலாளி, மற்றவர்கள் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. ஈடு கொடுக்க முடியாதவர்கள், மெது மெதுவாக விலக்கப்படுகிறார்கள். இப்போது விலக்கப்பட்ட அமைச்சர்கள் விஷயத்திலும் இது தான் நடந்துள்ளது"
பிரதமர் மோதி அமைச்சகப் பணிகளில் நேரடியாக தலையிடுபவர். "பிரதமர் தான் தங்கள் அமைச்சகத்தை நடத்துவதாகப் பல அமைச்சர்கள் கூட உணர்வார்கள். அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் பிரதமரிடம் வாட்ஸ்அப்பில் பணி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்." என்று கூறுகிறார் பிரதீப் சிங்.
பதவியேற்ற புதிய அமைச்சர்கள்

பட மூலாதாரம், ANI
காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு வந்த ஜோதிராதித்யா சிந்தியா கேபினட் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவலும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
இது தவிர, அனுப்ரியா படேலுக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மோதி அரசின் எட்டாம் ஆண்டில் முதல்முறையாக அதிகபட்சமாக பெண் அமைச்சர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது மோதி அரசில் 11 பெண் அமைச்சர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை மாலை, 15 அமைச்சரவை அமைச்சர்களும், 28 மாநில அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் லோக் ஜனசக்தி கட்சியின் பசுபதி பராஸ் மற்றும் ஜே.டி.யுவின் ஆர்.சி.பி சிங் ஆகியோரும் அடங்குவர்.
உத்தரப்பிரதேசத் தேர்தல் கவனத்தில் கொள்ளப்பட்டதா?

பட மூலாதாரம், Getty Images
உத்தரபிரதேசத்திலிருந்து அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏழு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. பங்கஜ் சவுத்ரி இணை அமைச்சராகப் பதவியேற்றார்.
அப்னா தள் கட்சியின் அனுப்ரியா சிங் படேலும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மோதி அரசின் முதல் பதவிக்காலத்திலும் அனுப்ரியா படேலுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இவர்களைத் தவிர, பாஜகவின் ஆக்ரா எம்.பி. எஸ்.பி. சிங் பாகேல் இணை அமைச்சராகச் சேர்க்கப்பட்டுள்ளார். பாகேல் பாஜகவில் சேருவதற்கு முன்பு எஸ்பி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில், கட்சி அனைத்துச் சாதியினரின் வாக்குகளையும் பெற முயற்சிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அதிதி ஃபட்னிஸ் கூறுகையில், "புதிய அமைச்சர்களில் பெரும்பாலானோர் உ.பி.யைச் சேர்ந்தவர்கள், உ.பி. தேர்தலில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்பது தெளிவாகிறது. உதாரணமாக, அனுப்ரியா படேல் முதல் பதவிக்காலத்தில் திறம்படப் பணியாற்றவில்லை. ஆனால் அவர் மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் காரணங்களே இருக்க முடியும்" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"இதன் அரசியல் அர்த்தம் மிகவும் தெளிவாக உள்ளது. 2014 ஆம் ஆண்டில் பாஜக தொடங்கிய சமூகக் கட்டமைப்புத் திட்டம் மேலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. 2014 பொதுத் தேர்தல், 2017 உபி தேர்தல், 2019 பொதுத் தேர்தல் ஆகியவற்றில், பாஜகவுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய சமூகத்தினரை இன்னும் வலுவாக ஒருங்கிணைக்கும் நோக்கில் பணிகள் மும்முரமாகத் தொடங்கிவிட்டன." என்கிறார் பிரதீப் சிங்.
பிரதீப் சிங் கூறுகையில், "ஜாதவ் அல்லாத தலித்துகள் மற்றும் யாதவ் அல்லாத ஓபிசி சமூகத்தினருக்கு அதிகாரத்தில் அதிக பங்கை வழங்க பாஜக விரும்புகிறது. 2014 முதல் இந்தச் சாதிகள் மீது கட்சி கவனம் செலுத்தியுள்ளது, இப்போது இந்த சாதிகளை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டவர்களின் பாதுகாவலன் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளும் தலைவர்களும் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்து காட்டுவதாகக் கூறிக்கொள்ள விரும்புகிறது பாஜக." என விவரித்தார்.
பிரதமர் மோதியின் புதிய அமைச்சரவையில் நான்கு முன்னாள் அதிகாரிகளும் உள்ளனர். இது பிரதமர் மோதியின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் என அதிதி நம்புகிறார். இப்போது அவர் நடைமுறைவாதியாக மாறிவருகிறார்..
அதிதி ஃபட்னிஸ், இது குறித்து, "பிரதமர் மோதி தனது முதல் பதவிக்காலத்தில் சிவில் சேவைக் காலத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்து தேர்தலில் வென்றவர்களை அமைச்சரவையில் சேர்க்கவில்லை.. இவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்து வந்ததாகவும் இனியும் அது முடியாது என்றும் கூறினார். ஆனால் இப்போது அத்தகைய நான்கு முன்னாள் அதிகாரிகளை அமைச்சரவையில் சேர்த்துள்ளார். அதாவது, மோதி 360 டிகிரி திருப்பத்தை எடுத்துள்ளார், அவர் தொடங்கிய அதே இடத்திற்கு வந்துள்ளார். ஒவ்வொரு மூன்றாவது நபரும் ஒன்று தொழில்முறை வல்லுநர், ஒரு தொழில்முனைவோர் அல்லது அதிகாரியாக இருக்கிறார்." என்று கூறுகிறார்.
அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பழைய அமைச்சர்களை நீக்குவது குறித்து எதிர்க்கட்சி அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இதை மோதி அரசு பொருட்படுத்தாது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அதிதி சொல்வது போல், இது ஒரு தைரியமான முடிவு தான். எதிர்க்கட்சிகள், நீக்கப்பட்டிருக்கும் இவர்கள் சரிவரப் பணியாற்றாதவர்கள் என்பது குறித்து விளக்கம் கோரும். ஆனால் இன்றைய தேதியில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பில்லை என்று மோதிக்குத் தெரியும்.
பிற செய்திகள்:
- இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?
- '15 வயது வரை குடிசை வீட்டிலேயே வாழ்ந்தேன்' - 31 வயது புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா பேட்டி
- சீமான் vs லிங்குசாமி: மீண்டும் வெடித்த 'பகலவன்' கதை சர்ச்சை
- ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோதி இடம்பெற்றது ஏன்?
- டோக்கியோ ஒலிம்பிக்: சானியா மிர்சா இந்த முறை சாதிப்பாரா?
- அன்டார்டிகாவில் புதிய தாவரத்தின் பெயர் 'பாரதி'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












