நரேந்திர மோதி அமைச்சரவை 2.0: ஓரங்கப்பட்ட மூத்த அமைச்சர்கள், புத்துயிரூட்டுமா புதிய முகங்கள்?

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளவர்களுடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
    • எழுதியவர், பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில் 15 கேபினட் அமைச்சர்களும் 28 இணை அமைச்சர்களும் புதன்கிழமை மாலையில் பதவிப்பிரமாணம் ஏற்றிருக்கிறார்கள்.

கொரோனா கால சவால்கள், தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க கையாளப்படும் புதிய முயற்சிகள், பொருளாதார மந்த நிலையில் இருந்து நாட்டை மீள்கட்டியெழுப்ப தீட்டப்படும் திட்டங்கள் போன்ற கடுமையான சவால்களுக்கு மத்தியில் அடுத்த இரு வாரங்களில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு மோதி அரசாங்கம் ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், தமது அமைச்சரவையில் மாற்றம் செய்ய முற்பட்ட பிரதமர் மோதி, அதை புதன்கிழமை செயல்படுத்தியும் காட்டினார். இந்த அமைச்சரவை மாற்றம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்கொள்ளும் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசம், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தராகண்ட், 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர், 40 தொகுதிகளைக் கொண்ட கோவா ஆகியவற்றை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல். முருகனுக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்தனைக்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக எல். முருகனை பாஜக மேலிடம் நியமித்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட முருகன் தோல்வியைத் தழுவியிருந்தார்.

இந்த நிலையில், அவரை மத்திய இணை அமைச்சராக்கியிருப்பதன் மூலம், அவர் அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக மத்திய அமைச்சர் பதவியில் தொடர ஏதேனும் ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் அல்லது மாநிலங்களவை உறுப்பினராக இருக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி வாய்ப்பு மாநிலத்தில் ஆளும் திமுகவுக்கே சாதகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் நடத்தப்பட்டால் இரண்டு இடங்களில் திமுகவும் ஒரு இடம் அதிமுகவும் செல்லலாம் என்று அந்த கட்சியினர் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுகவுக்கு ஒரு இடம் கிடைக்கும்பட்சத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் தங்களுக்காக ஒரு இடத்தை பாஜக கேட்டுப் பெறுவது மட்டுமே தற்போது பாஜகவுக்கு இருக்கும் எளிதான வெற்றி வாய்ப்பு. ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மாநிலங்களவை இடம் தரப்படாமல் போனால், பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து முருகனை மாநிலங்களவை உறுப்பினராக்க அக்கட்சி மேலிடம் முயலலாம்.

எப்படியிருந்தாலும், முருகனுக்கு அமைச்சரவையில் சேர பிரதமர் மோதி வாய்ப்பு அளித்திருப்பதன் மூலம் மாநில பாஜகவில் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், எச். ராஜா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு அதிகார ரீதியிலான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு அந்த கட்சியின் கீழ்நிலை தொண்டர்கள் அளவில் எதிரொலிக்கிறது.

எனவே, மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெறும் சிக்கலையும், சொந்த மாநிலத்தில் உள்கட்சியினரின் அதிருப்தியையும் ஒருசேர சமாளிப்பது முருகனுக்கு இனி வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மகாராஷ்டிரா முதல்வராக பதவி வகித்த நாராயண் டாடு ராணே, அசாம் முதல்வராக பதவி வகித்த சர்பானந்த சோனவால் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

நாராயண் டாடு ராணே: 69 வயதாகும் இவர், மகராஷ்டிரா மாநிலத்தின் கொன்கன் பகுதியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியிருக்கிறார். இதுதான் நாடாளுமன்றத்தில் இவரது முதல் பதவிக்காலம். ஆனால், சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் இவர் ஆறு முதல் எம்எல்ஏ, ஒரு முறை எம்எல்சி. அந்த மாநிலத்தின் முதல்வராகவும் மாநில கேபினட் அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இவர் 1971 முதல் 1984ஆம் ஆண்டுவரை வருமான வரித்துறையில் பணியாற்றினார்.

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

சர்பானந்த சோனவால்: 58 வயதாகும் இவர் அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியைச் சேர்ந்தவர். இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராகியிருக்கிறார். அதற்கு முன்பு இரு முறை எம்எல்ஏ மற்றும் 2016-21வரை அசாம் மாநில முதல்வராக பதவி வகித்திருக்கிறார். மோதியின் முதலாவது ஆட்சியில் ஆரம்ப காலத்தில் இவர் தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர் பதவியை வகித்திருக்கிறார். அப்போது அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டிருந்தது.

விரேந்திர குமார்: 67 வயதாகும் இவர் மத்திய பிரதேசத்தின் திகம்கார் பகுதியைச் சேர்ந்தவர். ஏழாவது முறையாக எம்.பி பதவியை வகிக்கும் இவர், மத்தியில் முந்தைய மோதி ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். பொதுவாழ்வில் இவரது அனுபவம் 40 ஆண்டுகள்.

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

ஜோதிர்ஆதித்ய சிந்தியா: 50 வயதாகும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இது இவரது ஐந்தாவது முறை பதவிக்காலம்.மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் இவர் வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை இணை அமைச்சர் பதவியை கவனித்து வந்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அவர், சமீபத்திய மாதங்களில்தான் அதிகாரபூர்வமாக பாஜகவில் சேர்ந்தார். குவாலியர் மகாராஜாவின் பேரனான இவர், ராஜ குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அதற்குரிய மரியாதை மற்றும் சமூக செல்வாக்கையும் தமது சொந்த மாநிலத்தில் பெற்றிருக்கிறார்.

ஆர்.பி. சிங்: 63 வயதாகும் இவர், பிகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார். 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர், அரசுப் பணியில் இருந்து விலகிய பிறகு பாஜகவில் சேர்ந்தார்.

அஷ்வினி வைஷ்ணவ்: 50 வயதாகும் இவர், ஒடிஷா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார். 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர், 15 ஆண்டுகால அரசுப் பணியில் பல்வேறு பொதுத்துறை தனியார் கூட்டுடன் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். அரசுப் பணியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த இவருக்கு அமைச்சரவையில் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பஷுபதி குமார் பராஸ்: 68 வயதாகும் இவர் பிகாரின் ஹாஜிபூரில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். ஏழு முறை எம்எல்ஏ, ஒரு முறை எம்எல்சி ஆக இருந்துள்ளார். பிகார் அரசில் ஒருமுறை இவர் அமைச்சராகவும் இருந்துள்ளார். லோக் ஜன சக்தி கட்சியின் ராம்விலாஸ் பாஸ்வானின் உறவினரான இவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரப்படுவதற்கு எதிராக பஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கொடி பிடித்ததையும் மீறி பஷுபதிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

பூபேந்தர் யாதவ்: 52 வயதாகும் இவர், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார். இது இவரது இரண்டாவது முறை பதவிக்காலம். அரசியலுக்குள் நுழையும் முன்பு இவர் முழு நேர உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். முக்கிய விசாரணை ஆணையங்களில் அரசு தரப்பு வழக்கறிஞராக இவர் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, கிரண் ரிஜிஜு

கிரண் ரிஜிஜு, ஆர்.கே. சிங், ஹர்தீப் சிங் பூரி, மன்சூக் மாண்டவியா, பர்ஷோத்தம் ரூபாலா, ஜி. கிஷண் ரெட்டி, அனுராக் தாக்குர் ஆகியோர் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இம்முறை மத்திய இணை அமைச்சர் அந்தஸ்தில் இருந்து கேபினட் அந்தஸ்துக்கு இவர்களின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, ஹர்தீப் பூரி

மத்திய இணை அமைச்சர்கள்

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, அனுப்ரியா படேல்

பங்கஜ் செளத்ரி: 56 வயதாகும் இவர், உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் தொகுதி மக்களவை உறுப்பினரான இவர் ஆறாவது முறை எம்.பி ஆக இருக்கிறார். கடந்த காலத்தில் இவர் கோரக்பூர் மேயர் ஆகவும் இருந்துள்ளார்.

அனுப்ரியா சிங் படேல்: 40 வயதாகும் இவர், உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூர் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர். இவர், இரண்டாவது முறை எம்.பி ஆக பதவி வகிக்கிறார். மோதியின் முதலாவது அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இவர் பதவி வகித்தார். உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையில் இவர் எம்எல்ஏ ஆகவும் இருந்துள்ளார்.

சத்யபால் சிங் பாகெல்: 61 வயதாகும் இவர், உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா தொகுதி மக்களவை உறுப்பினர். இவர் ஐந்தாவது முறை எம்பி ஆக பதவி வகிக்கிறார். உத்தர பிரதேச மாநில அரசில் கேபினட் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

ராஜீவ் சந்திரசேகர்: 57 வயதாகும் இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியிருக்கிறார். எம்.பி. ஆக இவர் பதவி வகிப்பது இது மூன்றாவது முறை. தொழில்துறை உலகில் தொழில்முனைவோராக அறியப்படுகிறார்.

ஷோபா கரண்ட்லஜே: 54 வயதாகும் இவர், கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி சிக்மகலூர் தொகுதி மக்களவை உறுப்பினர். இரண்டாவது முறை எம்.பி ஆக பதவி வகிக்கிறார். கர்நாடகா அமைச்சரவையில் இவர் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த மாநிலத்தில் ஒரு முறை எம்எல்ஏ, எம்எல்சி பதவியை வகித்திருக்கிறார்.

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, மீனாக்ஷி லேகி

மீனாக்ஷி லேகி: 54 வயதாகும் இவர், புதுடெல்லி மக்களவை தொகுதியில் இருந்து இரண்டாவது முறை உறுப்பினராக தேர்வானார். இவர் பாஜகவின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் சமூக சேவகராகவும் அறியப்பட்டு வந்தார்.

இவர்களைத் தவிர தமிழகத்தின் முருகன் உள்பட மேலும் 22 பேர் மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, முருகன்

இந்த அமைச்சரவை விரிவாக்கம், பல மாநில தேர்தல்களை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், இது 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மத்தியில் ஆளும் பாஜக இருப்பதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

காரணம், அமைச்சரவை விரிவாக்கத்தில் ஆறு அமைச்சர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கதாக அனுப்ரியா படேலின் நியமனம் உள்ளது. காரணம், அவர் வகித்து வரும் அப்னா தளம் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியாக உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் தமது அமைச்சரவையில் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் நரேந்திர மோதி.

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, பிரகாஷ் ஜாவடேகர், ரவிசங்கர் பிரசாத்

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஹர்ஷ்வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்பட 12 பேர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

இதில் கொரோனா பெருந்தொற்று காலத்தின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டவர் ஹர்ஷ் வர்தன். சுகாதார அமைச்சர் பதவி வகித்த இவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டங்களை நிறைவேற்றுவதில் மெத்தனம் காட்டியதாக விமர்சிக்கப்பட்ட வேளையில், தமது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.

ரவிசங்கர் பிரசாத், மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி எப்போதெல்லாம் ஆட்சியில் அமருகிறதோ அப்போதெல்லாம் அமைச்சராக பதவி வகித்தவர். இம்முறை சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்டவை மீது மத்திய அரசு கெடுபிடி காட்டிய சர்ச்சையில் சிக்கினார். டிஜிட்டல் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கை விவகாரங்களுக்கு எதிராக ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவை நீதிமன்றம் வரை சென்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டது.இந்தப்பின்னணியில் ரவிசங்கர் பிரசாதின் பதவி விலகல் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

பிரகாஷ் ஜாவடேகர் இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை, சுற்றுச்சூழல் துறைகளை கவனித்து வந்தார். முந்தைய மோதி ஆட்சியில் இணை அமைச்சராக இருந்து கேபினட் அமைச்சராக தரம் உயர்த்தப்பட்ட இவர், இரண்டாவது ஆட்சியில் மோதியின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்டார். ஆனால், அவர் திடீரென பதவி விலகியிருப்பதும் பாஜகவில் பலரது புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. இவர்கள் வரிசையில் பதவி விலகியிருப்பவர் ரமேஷ் பொக்ரியால். இவரது பதவிக்காலத்தில்தான் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கல்வி அமைச்சகம் ஆக பெயர் மாற்றம் பெற்றது. நீட், பொது நுழைவுத்தேர்வு, ஒரே நாடு, ஒரே கல்வி, சமஸ்கிருத முன்னுரிமை போன்ற சர்ச்சைக்கு மத்தியில் இவர் கல்வித்துறை பணிகளை கவனித்து வந்தார்.

இந்த தலைவர்கள் அமைச்சரவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் பரப்புரை பணிகளை கவனிக்கவும் அரசு மற்றும் கட்சியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் பயன்படுத்திக் கொள்ளப்படுவர் என்று பாஜக மேலிட தலைவர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :