சந்திர பிரியங்கா: 31 வயது புதுச்சேரி பெண் அமைச்சர் பேட்டி - '15 வயது வரை குடிசை வீட்டிலேயே வாழ்ந்தேன்'

சந்திர பிரியங்கா
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதுபோன்ற நிலை இனி இருக்கக்கூடாது" என கூறுகிறார் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து அதற்கான புதிய அமைச்சரவை அண்மையில் பதவியேற்றது.

இந்த அமைச்சரவையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது, ரேணுகா அப்பாத்துரை என்பவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார்.

தற்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா (31) அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் புதுச்சேரியின் இரண்டாவது பெண் அமைச்சர் மற்றும் காரைக்கால் மாவட்ட வரலாற்றில் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சந்திர பிரியங்காவின் தந்தை சந்திரகாசு தொடர்ந்து 6 முறை நெடுங்காடு தொகுதியில் இருந்து தேர்வானதோடு, சபாநாயகர், துணை சபாநாயகர், பல துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர். தந்தை மறைவுக்கு பின்னர், என்.ஆர்.காங்கிரசின் சார்பில் முதல் முறையாக 2016ம் ஆண்டு நெடுங்காடு தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்விலும் அரசியலிலும் கடந்து வந்த பாதை மற்றும் அனுபவங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் சந்திர பிரியங்கா.

"40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதை, கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினர் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதுமே இந்த நிகழ்வை கொண்டாடுவது பெருமைக்குரியது. பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதானது. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலிலும், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து இரண்டு முறை பெண்களுக்கு முதல்வர் ரங்கசாமி தேர்தலில் வாய்ப்பளித்திருக்கிறார்.

சந்திர பிரியங்கா

40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர் ஒருவர் அமைச்சராகிறார் என்பது கேட்கவே பிரம்மிப்பாக இருந்தாலும், மற்றொருபுறம் வருத்தமாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டு காலம் எந்த பெண்களுமே அரசியலுக்கு வரவில்லையா? அல்லது அதற்கு உண்டான வாய்ப்பு இல்லையா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது," என்கிறார்.

கே: சட்டமன்ற உறுப்பினரில் தொடங்கி அமைச்சர் வரை நீங்கள் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது?

"அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இந்த வாய்ப்பு எனக்கு இரண்டாவது முறையாக கிடைத்துள்ளது. நான் 2016 சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிடும்போது 26 வயது, அதற்கு முந்தைய ஆட்சியில் எனது தந்தை அமைச்சராக இருந்த சமயத்தில் அரசியலுக்கு வந்தேன். ஆனால் அப்போது யாருமே என்னை வரவேற்கவில்லை. ஒரு பெண்ணாக வெளியே வரும்போது பலரும் என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் பெண்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்தனர்.

புதுச்சேரியை பொருத்தவரை ஒவ்வொரு தொகுதியிலும் பாதிக்கு மேல் பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆகவே எனது தேர்தல் வெற்றி புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்த பெண்களில் வெற்றியாக பார்க்கப்பட்டது. பெண்கள் மத்தியில் நம்மை போன்றொரு பெண் அரசியலில் வருகிறார் என்ற ஆதரவு அதிகமாக இருந்தது.

அதே சூழலில், நான் அரசியலுக்கு வந்த நேரத்தில் பெரிய அளவில் வரவேற்போ, ஊக்கமோ யாரும் கொடுக்கவில்லை. இவ்வளவு சிறிய வயதில் எப்படி அரசியலுக்கு வர முடியும், இவங்க தேர்தலுக்கு சரிவர மாட்டாங்க போன்ற வார்த்தைகளை என் காதுபடவே கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அனைத்தையும் கேட்டு துவண்டு விடவில்லை, அப்படி யோசிக்கவுமில்லை.

இப்படி இருக்கின்றவர்களுக்கு மத்தியில் நாம் எப்படிப்பட்டவர் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. என்னால் முடியாது, முடியாது என்று சொன்னவர்களுக்கு மத்தியில் என்னால் முடியும் என்பதை காட்ட வேண்டும். எதனால் நம்மால் இந்த துறையில் சாதிக்க முடியாது என்கின்றனர். அதிலிருந்து எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்," என்கிறார் சந்திர பிரியங்கா.

கே: உங்களுடைய அரசியல் ஆர்வத்துக்கு தூண்டுதலாக இருந்தது என்ன?

சந்திர பிரியங்கா

"ஒவ்வொரு அரசியல்வாதிகக்கும் கடந்து வந்த பாதை என ஒன்று இருக்கும். சிறிய வயதில் இருந்தே சாதாரண குடும்பத்தில் தான் வளர்த்தேன். எனது 15 வயது வரை குடிசை வீட்டில்தான் இருந்தேன்..

"எனது தந்தை புதுச்சேரி அரசியலில் மிகவும் மூத்தவர், 1980களில் இருந்து அரசியலில் இருந்தார். குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை சபாநாயகர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஒரு காலத்தில் எனது தந்தை அமைச்சராக இருந்த நேரத்திலும், இல்லாத நேரத்திலும் கூட பள்ளிக்கு கட்டணம் செலுத்த முடியாமல் வகுப்பிற்கு வெளியே நின்று இருக்கிறேன். எங்களது தந்தை கஷ்டப்பட்டு தான் எங்களை வளர்த்தார், விவசாயத்தில் வரும் வருமானம் மட்டுமே எங்களது குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்ததே தவிர அரசியலை எந்த ஆதாயத்திற்கும் பயன்படுத்தியதில்லை.

அரசியல் வெற்றி, மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டம் எப்போதும் எங்களுடன் இருப்பதையும், தோல்விக்கு பிறகு யாருமே இல்லாமலும் இருப்பதையும் பார்த்து வளர்த்தேன். இவை அனைத்திற்கும் மத்தியில் என்னை அரசியலுக்கு வர தூண்டியது. அரசியலில் இருந்து கொண்டு மக்களுக்கு என் தந்தை செய்த நல்ல காரியங்கள் தான்.

கடவுளுக்கு அடுத்து ஒரு மனிதன் தனக்கு ஒன்று வேண்டும் என்று தேடி வருவது அரசியல்வாதிகளிடம் மட்டும் தான் என்பது எனது நம்பிக்கை. ஏனென்றால் தனக்கு ஒன்று இல்லை அதை கொடுங்கள், கடவுளே எனக்கு இதை செய்யுங்கள் என கேட்பார்கள். அப்படி மற்றவர்களுக்கு கொடுக்கின்ற வாழ்க்கை யாருக்கும் அமையாது. ஆனால் பிறருக்கு செய்யும் இடத்தில் நாம் இருக்கிறோம்.

நம்மால் ஆயிரக்கணக்கான பேருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த அளவிற்கு 100 பேருக்கு உதவி செய்து, அவர்களை மகிழ்விக்கின்ற ஒரு வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது, விலை மதிப்பற்றது. கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால், எளிய மக்களின் தேவை என்ன என்பதை நான் அறிவேன்."

கே: புதுச்சேரி அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா? நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?

ஒரு அரசியல் வாதியாக நான் கடந்து வந்த பாதையில், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அதிகாரிகள் தரப்பில் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. மக்களை பொருத்தவரை ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ சொன்னால் அதிகாரிகள் கேட்க மாட்டார்களா என்று யோசிப்பார்கள். ஆனால் எப்படிப்பட்ட அரசியல்வாதிகளாக இருந்தாலும் பெண் என்ற விஷயத்தில் தாக்கம் இருப்பதாக அமைச்சர் கருதுகிறார்.

சந்திர பிரியங்கா

"ஒரு அதிகாரி ஆண் அரசியல்வாதியிடம் நடந்து கொள்வதிற்கும், பெண் அரசியல்வாதியிடம் நடந்து கொள்ளும் விதத்தில் வேறுபாடு இருக்கிறது. குறிப்பிட்டு சொன்னால், நாம் சொல்லும் வேலையை உடனே செய்து கொடுக்க மாட்டார்கள். ஒரு வேலை செய்வதில், நம்மிடம் அதிகாரிகள் நேரடியா சரி என்று சொன்னாலும், ஆண்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கும், எங்களுக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நமக்கே இவ்வளவு கஷ்டங்கள் இருக்கும்போது, வெளியே செல்லும் பெண்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்று யோசிப்பதுண்டு. அப்படி இல்லாமல், அது எந்த துறையை இருந்தாலும் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இருவருமே சமமாக பார்க்கப்பட வேண்டும்

அவரவர் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைத்தால் அதை ஊக்குவித்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த வெற்றி என்னோடு முடிவடைந்துவிடாமல் வருங்காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களை சாதிக்க வைக்க வேண்டும் என்பதே எனது கனவு," என்கிறார் சந்திர பிரியங்கா.

கே: புதுச்சேரியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் எப்படி இருக்கும்?

"எனது தந்தை காலத்தில் இருந்தே அரசியலையும் தேர்தலையும் உற்று நோக்கியுள்ளேன். தேர்தலை பொறுத்தவரை அது எந்த தேர்தலாக இருந்தாலும் பெண்களுடைய ஈடுபாடு தான் அதிகமாக இருக்கும். அது வெளியே தெரிவதில்லை. ஆனால் இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் பங்கு அதிக அளவு இருக்கும். ஒரு பெண்ணாக முக்கிய பொறுப்பில் இருக்கின்ற காரணத்தினால் அதற்கான முயற்சியில் உறுதியாக ஈடுபடுவேன்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் என் தொகுதி மட்டுமின்றி புதுச்சேரி முழுவதுமே பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்துவேன். பெண்களுடைய வளர்ச்சியில் முதல்வர் அதிக ஈடுபாடு கொண்டவர், அவரும் அதற்கான முயற்சியை செய்வார்," என தெரிவித்தார்.

கே: அதிகாரத்தில் இருக்கும் பெண்ணை அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஏதாவதொரு ஆண் இயக்குவதாக கூறப்படுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? உங்களுக்கு பின்னால் அப்படி யாராவது உள்ளாரா?

"ஒரு பெண் வெளியே வருவதற்கு அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் தான் அதிக அளவில் ஊக்கப்படுத்துகின்றனர். அதாவது பெண்கள் ஒருவரை சார்ந்து இருந்தாகானும். பெண்ணியம் பேசும் பலர் பெண்கள் ஒருவரை சார்ந்து இருக்கக்கூடாது, பெண்கள் வெளியே வரவேண்டும் என்று கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. எப்போதுமே பெண்கள் ஆண்களை சார்ந்து இருக்கும்போது தான் அந்த உறவு அழகாக இருக்கும். அதாவது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.

புதுவை

பட மூலாதாரம், Getty Images

ஒரு பெண் ஒவ்வொரு கால கட்டத்திலும் தந்தை, சகோதரன், கணவர், மகன் என்று ஒவ்வொருவரை சார்ந்து இருக்க வேண்டும். இப்படி இருக்கும்போது மட்டுமே நம்முடைய வாழ்க்கை முறையும் மென்மையாக இருக்கும். அவர்கள் உடன் இருப்பது நமக்கு பாதுகாப்பு வளையம் போன்றது, நம்மை ஊக்குவிப்பார்கள். அவர்களுடைய ஊக்குவிப்பு இல்லையென்றால் நம்மால் வெளியே வருவது கடினமானது.

தனிப்பட்ட முறையில் பல பெண்கள் சாதித்து இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் தந்தையாக, சகோதரனாக ஒரு ஆண் துணையாக இருந்திருப்பார். இன்று நான் இந்த நிலைக்கு வந்ததில் முக்கிய காரணமாகவும், என்னுடைய பலமாக என் கணவர் இருக்கிறார் என்பதை பெருமையாக சொல்லுவேன்."

கே: பெண்கள் வளர்ச்சியில் உங்களது பங்களிப்புகள் என்ன?

"புதுச்சேரியில் உள்ள பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தேவையானதை செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் நாம் இருக்கிறோம். இளம் அமைச்சர் என்பதால் என் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாக இருக்கும். ஆகவே என்னால் முடிந்தவரை மக்களுக்கு தேவையானதை செய்வேன்.

இந்த சிறிய வயதில் அமைச்சர் பதவி கொடுத்துட்டாங்களே என்ற குறை நீங்கி, இந்த இளம் வயதிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்ற பெயர் எடுக்கவேண்டும். இந்த வயதில் ஒவ்வொருக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். நான் வகிக்கும் துறையில் லட்சியத்தை அடைவதற்கான அடித்தளம் எனக்கு கிடைத்திருக்கிறது, அதை முறையாக பயப்படுத்துவேன்," என்கிறார் அமைச்சர் சந்திரா பிரியங்கா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :