டோக்கியோ ஒலிம்பிக்: சானியா மிர்சா இந்த முறை சாதிப்பாரா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர்
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இதுவரை அவர் தனது டென்னிஸ்வாழ்க்கையில், ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவற்றில் மூன்று இரட்டையர் பிரிவிலும், மூன்று இரு பாலர் இரட்டையர் பிரிவிலும் அவருக்குக்கிடைத்தன.
மகளிர் டென்னிஸ் தரவரிசையில், அவர் இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும், ஒற்றையர் பிரிவில் 27 வது இடத்தையும் அடைந்துள்ளார். இது தவிர அவர் 40 க்கும் மேற்பட்ட பட்டங்களை கைப்பற்றியிருக்கிறார். ஆனால் இன்றும் அவர் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்திற்காக காத்திருக்கிறார்.
34 வயதான சானியா மிர்சாவின் நான்காவது மற்றும் கடைசி ஒலிம்பிக்காக இது இருக்கக்கூடும். இதில் பங்கேற்பது குறித்து சானியா மிகவும் உற்சாகமாக உள்ளார்.
"நான் ஒலிம்பிக்கில் மூன்று முறை விளையாடியது என் அதிர்ஷ்டம். இது எனது நான்காவது ஒலிம்பிக்காக இருக்கும். தாயான பிறகு ஒலிம்பிக்கில் விளையாடவேண்டும் என்பது எனது கனவு."என்று சானியா குறிப்பிடுகிறார்.
டோக்கியோவில் அங்கிதா ரெய்னாவுடன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா விளையாட உள்ளார். சானியா மிர்சா ஒன்பதாவது இடத்தையும், அங்கிதா ரெய்னா 95 வது இடத்தையும் பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றனர். இது, 28 வயதான அங்கிதா ரெய்னாவின் முதல் ஒலிம்பிக் ஆகும்.
அங்கிதா ரெய்னாவின் முதல் ஒலிம்பிக்

பட மூலாதாரம், Getty Images
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிறந்த அங்கிதா ரெய்னா தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் மகளிர் ஒற்றையர் வீரர் ஆவார்.
2018 ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோவுக்கு முன்பு, அங்கிதா ரெய்னா விம்பிள்டனில் பங்கேற்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பின்னர் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.
"சானியா மிர்சாவும் நானும் சேர்ந்து நாட்டிற்காக ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க பதக்கத்தைப் பெற விரும்புகிறோம்," என்று அங்கிதா ரெய்னா கூறினார்.
கடந்த மூன்று ஒலிம்பிக்கில் சானியா
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அனைவருக்கு உள்ள ஆசை, ஆனால் அதை உண்மையாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்று சானியா மிர்சாவுக்கு நன்றாகவே தெரியும்.
முன்னதாக 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில், சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் சுனிதா ராவ் உடன் களமிறங்கினார். ஆனால் மூன்றாவது சுற்றில் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ரஷ்ய ஜோடி ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா மற்றும் தினரா சஃபினாவிடம் தோல்வியுற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றிலேயே, செக் குடியரசின் இவெட்டா பெனசோவாவிடம் சானியா மிர்சா தோல்வியடைந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பின்னர் அவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் இரட்டையர் பிரிவில் ருஷ்மி சக்ரவர்த்தியுடன் விளையாடினார். ஆனால் முதல் சுற்றில் சீன தைபேயின், ஷிஹ் சு வீ மற்றும் சுவாங் சியா ஜங் ஆகியோரிடம் தோறுப்போனார். இருபாலர் இரட்டையர் பிரிவில், காலிறுதியில் லியாண்டர் பேயஸுடன் விளையாடிய சானியா, பெலாரஸின் விக்டோரியா அஸரெங்கா -மேக்ஸ் மிர்னாய் ஜோடியிடம் 5-7, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு, சானியா மிர்சாவுக்கும் இந்திய டென்னிஸ் அசோசியேஷனுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
சானியா மிர்சா அங்கு மகேஷ் பூபதியுடன் விளையாட விரும்பினார். தன்னை ஒரு பொருள் போல பயன்படுத்துவதாக அவர் டென்னிஸ் சங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.
2016 ஆம் ஆண்டில் ரியோவில் தனது மூன்றாவது ஒலிம்பிக்கில் விளையாடிய சானியா மிர்சா , பிரார்த்தனா தாம்ப்ரேயுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். ஆனால் முதல் சுற்றில் 6-7, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் சீனாவின், பெங் ஷுவாய் - ஜாங் ஷுவாய் இணையிடம் தோல்வியுற்றார்.
இருபாலர் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா ரோஹன் போபண்ணாவுடன் ஜோடி சேர்ந்தார், மேலும் இந்த ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அங்கு தோல்வியைத்தழுவியதால் பதக்கம் கைநழுவிப்போனது.. செக் குடியரசின் லூசி ஹர்டெக்கா - ரோடெக் ஸ்டெபனெக் இணை ,6-1, 7-5 என்ற செட் கணக்கில் சானியா-போபண்ணா இணையை தோற்கடித்து, நான்காவது இடத்திற்கு தள்ளியது.
1988 ஆம் ஆண்டில் டென்னிஸ் விளையாட்டு ஒலிம்பிக்கில் மீண்டும் சேர்க்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்திய ஆண்கள் ஜோடி அதில் விளையாடப்போவதில்லை. ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் ஷரன், கட்-ஆஃப் தேதிக்குள் ஒருங்கிணைந்த தரவரிசைகளில் இடம்பெறத்தவறியதால், அவர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறவில்லை.
ஒலிம்பிக்கிற்கு முன்னால் விம்பிள்டனில் இறங்கிய சானியா
அங்கிதா ரெய்னாவைப் போலவே, சானியா மிர்சாவும் டோக்கியோ செல்வதற்கு முன்பு விம்பிள்டனில் பங்குபெற்றார்.அவரது விம்பிள்டன் கூட்டாளர் அமெரிக்காவின் பெத்தானி மாட்டெக்-சாண்ட்ஸ். ஆனால் இந்த ஜோடி இரண்டாவது சுற்றில் 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ரஷ்ய ஜோடி அலினா வெஸ்னினா - வெரோனிகா குடர்மெட்டோவாவிடம் தோற்றுப்போனது.
சானியா மற்றும் அங்கிதாவின் வலிமை

பட மூலாதாரம், Getty Images
ஆண்கள் இரட்டையர் இணை ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் ஷரன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறாதது குறித்து, முன்னாள் ஒலிம்பியனும், இந்திய டேவிஸ் கோப்பை அணியின் முன்னாள் வீரரும், தற்போது இந்திய டென்னிஸ் அணியின் பயிற்சியாளருமான ஜீஷன் அலி ஏமாற்றமடைந்துள்ளார்.
ரோஹன் போபண்ணா - சானியா மிர்சா இணை பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ள இருபாலர் இரட்டையர் போட்டிக்கு தகுதிபெறத் தவறியது ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று ஜீஷன் அலி கூறுகிறார். ரோஹன் போபண்ணா - சானியா மிர்சா இணை பதக்கப் போட்டியை ஏறக்குறைய எட்டிய ரியோ ஒலிம்பிக்கையும் அவர் நினைவு கூர்ந்தார்.
சானியா மிர்சாவுக்கு 34 வயது, அங்கிதா ரெய்னாவுக்கு 28 வயது. அத்தகைய சூழ்நிலையில் அவர்களது ஃபார்ம் மற்றும் உடற்தகுதி பற்றி ஜீஷன் அலி பேசினார். "சானியா மிர்சா கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் விளையாடுகிறார். அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்த பிறகு ஓய்வெடுக்க இடைவெளி எடுத்துக்கொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அவரது உடற்தகுதி நிலை தற்போது இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
சானியாவின் அனுபவம் ஏதேனும் அற்புதங்களைச் செய்யுமா? இந்த கேள்விக்கு பதிலளித்த ஜீஷன் அலி," இது அவரது நான்காவது ஒலிம்பிக் .அவர் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு உடற்தகுதி இல்லை என்று சொல்லமுடியாது. மறுபுறம், அங்கிதா ரெய்னா முதன்முறையாக இவ்வளவு பெரிய போட்டியில் பங்கேற்கிறார். சானியா மிர்சாவின் அனுபவம் அங்கு அவருக்கு கைக்கொடுக்கும்," என்றார்.
ஒலிம்பிக்கின் அழுத்தத்தில் அங்கிதா ரெய்னா பதட்டமாக இருக்கலாம், ஆனால் சானியா மிர்சாவின் ஆதரவு அவருக்குக்கிடைக்கும் என்று ஜீஷன் அலி நம்புகிறார். இந்த இணைக்கு நல்ல எதிர் இணை கிடைத்தால், அது சிறப்பாக விளையாடும் என்று அவர் மேலும் கூறினார்.
அங்கிதா ரெய்னா, சானியா மிர்சா போல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதில்லை. ஆனால் அவர் மன உறுதியுடன் விளையாட முடியுமா? அதற்கு பதிலளித்த ஜீஷன் அலி, "நிச்சயமாக, ஒலிம்பிக் போன்ற ஒரு பெரிய போட்டியில் அவர் பங்கேற்கிறார் என்றால், மன வலிமை மிகவும் முக்கியமானது" என்று குறிப்பிட்டார்..
சானியா மிர்சாவை குழந்தை பருவத்திலிருந்தே ஜீஷன் அலி பார்த்துள்ளார். ஜீஷன் அலியின் தந்தையும், முன்னாள் டேவிஸ் கோப்பை வீரரும்,பயிற்சியாளருமான மறைந்த அக்தர் அலி , சானியாவுக்கு ஆரம்ப பயிற்சியை அளித்துள்ளார்.
சானியா மிர்சாவை சிறப்பாக்குவது எது?

பட மூலாதாரம், Getty Images
அதற்கு பதிலளித்த ஜீஷன் அலி, சானியா மிர்சா மிகவும் கடின உழைப்பாளி என்று கூறுகிறார்.
"இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை, ஆனால் ஒரு விளையாட்டு வீரரில் இருக்க வேண்டிய துடிப்பு, இளம் வயதில் தியாங்களைச்செய்ய எப்போதும் தயாராக இருக்கும் குணம், சிரமங்களைத் தாங்கும் திறன் போன்ற எல்லாமே சானியாவிடம் இருக்கிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட் கட்டுப்பாடுகளால் ஏற்படக்கூடிய தாக்கம்
கோவிட் காரணமாக டோக்கியோவில் பல கட்டுப்பாடுகள் இருக்கும். இவற்றுக்கு இடையே சிறப்பாக விளையாடுவது எவ்வளவு கடினம்?
பல சிரமங்கள் இருக்கும் என்று இதற்கு பதிலளித்த ஜீஷன் அலி கூறுகிறார்.
"இந்த முறை இந்தியா தொடர்பான அவர்களின் சட்டங்கள் இன்னும் சிறிது கடுமையானவை. ஏனென்றால் இங்கு அதிகமான கொரோனா பாதிப்பு இருந்தது. அங்கு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து வீரர்கள் தினசரி கோவிட் சோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கும். ஜப்பானை அடைந்ததும் விமானநிலையத்தில் மீண்டும் ஒரு கோவிட் சோதனை இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து செல்லும் விளையாட்டு வீரர்கள் அங்கு சென்ற பிறகு மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் யாரையும் சந்திக்க முடியாது. ஜப்பானை அடைந்த பிறகு, திரும்பி வரும் வரை தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு கோவிட் சோதனை இருக்கும்.
"இந்த விஷயங்கள் அனைத்தும் வீரரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எப்போது சாப்பிட வேண்டும், எங்கு செல்ல வேண்டும், என்பது போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எப்படி விளையாடுவது என்பதை சிந்திக்கவேண்டும். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்றாலும், அது கொஞ்சம் கடினமாகவே இருக்கும்," என்று ஜீஷன் அலி விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒலிம்பிக் பதக்கம் வெல்ல சானியா மிர்சாவிடம் இருக்கும் தாகம்
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டென்னிஸில் டேவிஸ் கோப்பை போன்ற விளையாட்டுகளில் ஒரு வீரர் , நாட்டின் சார்பாக கலந்துகொள்வது பெருமைக்குரிய விஷயம் என்று ஜீஷன் அலி கூறுகிறார்.
"சானியா மிர்சாவும் ஒலிம்பிக்கைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறார். பந்தய ட்ரா (யார் யாரை எதிர்த்து விளையாடுவார்கள் என்பது) சிறப்பாக அமைந்தால், பதக்கத்தை வெல்லமுடியும்," என்று ஜீஷன் அலி வலியுறுத்திக் கூறினார்.பிற செய்திகள்:
- இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் - எல்ஓசி போல மாறுகிறதா எல்ஏசி?
- 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரதட்சணை: இந்திய திருமணங்கள் பற்றிய ஆய்வு
- யூட்யூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - இனி என்ன நடக்கும்?
- யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?
- ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பைக் கவனிக்கும் தமிழக மாணவர்கள்
- கோவையில் 30 பேர் பார்வையைப் பறித்த கருப்பு பூஞ்சை நோய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












