டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பாக கலந்து கொள்ளவிருக்கும் 'தயாரா' குதிரை மற்றும் ஃபவாத் மிர்சா - பதக்க வாய்ப்பு எப்படி?

ஃபவாத் மிர்சா

பட மூலாதாரம், EMBASSY GROUP

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினரைப்பற்றி நினைத்தால், வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் ஆகியோரே நம் கண்முன்னே வருவார்கள்.. ஆனால் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக ஒரு குதிரை பங்கேற்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த குதிரையின் பெயர் தயாரா - 4. ஒலிம்பிக்கில் இந்திய குதிரையேற்ற வீரர் ஃபவாத் மிர்சாவுடன் சேர்ந்து அது போட்டியிடப்போகிறது. 2011 ஆம் ஆண்டில் பிறந்த தயாரா, ஜெர்மன் பே ஹோல்ஸ்டெய்னர் இனத்தைச் சேர்ந்தது. இதன் நிறம் பழுப்பு. இதுவரை இது 23 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வென்றுள்ளது.

ஃபவாத்திற்கு நிதியுதவி அளிக்கும் எம்பஸி (Embassy) குழுமம், 2019 ஆம் ஆண்டில் 2,75,000 யூரோக்கள் (சுமார் 2 கோடியே 43 லட்சம் ரூபாய்) விலை கொடுத்து தயாராவை வாங்கியது. இந்தக் குழுமம், ஃபவாதிற்காக மேலும் மூன்று குதிரைகளையும் வாங்கியிருந்தது.

இவற்றில் தயாரா - 4 மற்றும் சென்யூர் மெடிகோட் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளன. இரு குதிரைகளின் தற்போதைய செயல்திறனைக் கருத்தில் கொண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் தயாராவுடன் விளையாட ஃபவாத் முடிவு செய்துள்ளார்.

"தயாரா இப்போது சிறந்த ஃபார்மில் உள்ளது. உலக அளவில் செயல்திறனை வெளிபடுத்த வேண்டிய அழுத்தத்தை தயாராவால் கையாள முடியும்," என்று அவர் கூறுகிறார்.

குதிரையேற்றம் என்பது மற்ற விளையாட்டுகளிலிருந்து வேறுபட்ட ஒன்று. இங்கே குதிரையேற்ற வீரர்களுக்கும், குதிரைக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியம். இத்தகைய உறவை ஏற்படுத்தும் பொருட்டு குதிரை வீரர்கள், குதிரையுடன் சில வருடங்கள் செலவிடுகிறார்கள். அதனுடன் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். கூடவே அதை கவனித்துக் கொள்கிறார்கள்.

"நீங்கள் பல ஆண்டுகள் குதிரைகளுடன் செலவிட்டால் அவற்றுடன் நம்பிக்கையான உறவை அதனோடு உருவாக்க முடியும். குதிரை லாயத்தில் குதிரைகளுக்கு உணவளிப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றில் நாம் செலவிடும் நேரம் குதிரைகளுடனான பிணைப்பை பலப்படுத்துகிறது," என்று ஃபவாத் கூறுகிறார். தயாராவுடன் இத்தகைய உறவை அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

குதிரைகளுக்கும் தனிமைப்படுத்தல்

ஃபவாத் மிர்சா

பட மூலாதாரம், EMBASSY GROUP

29 வயதான ஃபவாத் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அவர் வடமேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு கிராமத்தில் பயிற்சி செய்கிறார். அவர் ஒரு நாளைக்கு சுமார் பன்னிரெண்டு மணி நேரம் குதிரைகளுடன் செலவிட்டு, அவற்றுக்கு பயிற்சி அளிக்கிறார். ஃபவாத் மற்றும் தயாரா விரைவில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புறப்படுவார்கள்.

மற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளைப் போலவே, குதிரைகளும் கோவிட் விதிமுறையின் கீழ் தனிமைப்படுத்தலில் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். எனவே, டோக்கியோவை அடைவதற்கு முன்னும் பின்னும், ஃபவாத் மற்றும் தயாரா ஏழு நாட்கள் தனிமையில் இருப்பார்கள்.

தயாராவை கவனிக்க ஃபவாதுடன் ஒரு சிறப்பு குழுவும் உள்ளது. குதிரை பராமரிப்பாளர் யோஹன்னா போஹோனென், கால்நடை மருத்துவர் கிரிகோரியோ மெலிஸ் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட் வெரோனிகா சான்ஸ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக்கில் தயாரா தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் என்று ஃபவாத் நம்புகிறார். கொரோனா தொற்றுநோய் காரணமாக பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால், 2020 ஆம் ஆண்டில் தயாரா ஐந்து போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடிந்தது.

ஆனால் இந்த முறை அது நல்ல ஃபார்மில் உள்ளது. இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் அது ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. பின்னர் போலந்தின் பாபோரோவ்கோவில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடத்தையும், போலந்தின் ஸ்டர்ஸெகோமில் நடைபெற்ற FEI நேஷன்ஸ் கோப்பையில் இரண்டாவது இடத்தையும் கைப்பற்றியது.

20 ஆண்டுகால காத்திருப்பு

ஃபவாத் மிர்சா

பட மூலாதாரம், EMBASSY GROUP

இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக, ஒரு இந்திய குதிரையேற்றவீரர் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். ஃபவாதிற்கு முன்பு, மறைந்த விங் கமாண்டர் ஐ.ஜே.லம்பா மற்றும் இம்தியாஸ் அனீஸ் ஆகியோர் ஒலிம்பிக்கில் குதிரையேற்றத்தில் இந்தியா சார்பாக கலந்துகொண்டுள்ளனர்.

விங் கமாண்டர் ஐ.ஜே.லம்பா 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் குதிரையேற்றப் போட்டிகளில் கலந்துகொண்டார். 2000ஆவது ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் இம்தியாஸ் அனீஸுக்கு வைல்ட் கார்டு என்ட்ரி கிடைத்தது.

ஃபவாத் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். ஆனால் இது அவரது முதல் பெரிய விளையாட்டு போட்டி அல்ல. 2018 ல், இதோனீசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தனிநபர் மற்றும் அணி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஃபவாத் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்த சாதனைக்காக, அவருக்கு 2019ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் ஃபவாத் விளையாட இருக்கிறார்.

கடந்த ஆண்டு அவர் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா - ஓசியானியா குழு உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். ஃபவாதின் தந்தை ஒரு கால்நடை மருத்துவர் .சிறுவயது முதலே குதிரை சவாரி செய்வதில் விருப்பம் கொண்டவர் ஃபவாத்.

தயாரா இந்தியாவில் குதிரையேற்ற விளையாட்டை ஊக்குவிக்குமா?

ஃபவாத் மிர்சா

பட மூலாதாரம், EMBASSY GROUP

இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குதிரைகளுக்கு முக்கிய இடம் உண்டு. சிவாஜி மகராஜின் 'மோத்தி' மற்றும் 'கிருஷ்ணா' மஹாராணா பிரதாப்பின் 'சேதக்' , ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் 'பாதல்' இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவின் பழங்கதைகளிலும் குதிரைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

டெக்கனி இனத்தின் 'பீமதடி' குதிரைகள் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மராட்டிய பேரரசின் விரிவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக நம்பப்படுகிறது.

மகாராஷ்டிராவின் சாரன்கேடாவில் குதிரைகளின் பெரிய சந்தை இன்றும் உள்ளது, அங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வணிகம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கும்போதிலும், இந்தியாவில் குதிரையேற்றம் ஒரு பிரபலமான விளையாட்டாக இல்லை.

"இதற்கு முக்கிய காரணம் இது அதிக செலவுபிடிக்கும் விளையாட்டு.கூடவே அதிக முதலீடும் தேவைப்படுகிறது" என்கிறார் எம்பஸி குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜீது வீர்வானி.

"குதிரைகளை வாங்குவதில் பல தடைகள் உள்ளன. ஆசிய விளையாட்டுக்கு அணியை அனுப்ப நாங்கள் நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் இந்த நிலைமை மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்."என்று கூறினார்.

குதிரையேற்றம் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இல்லை. ஆனால் ஃபவாத் மற்றும் தயாரா இதை மாற்ற முடியும் என்று விவரம் அறிந்தவர்கள் நம்புகிறார்கள். தயாராவைப் பார்க்கும்போது இந்த விளையாட்டு மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்பதை ஃபவாத் ஆமோதிக்கிறார்.

"நாம் ஏற்கனவே வரலாற்றை உருவாக்கும் பாதையில் இருக்கிறோம். இந்த பயணத்தில் தயாரா உதவும். அது மிகவும் அழகான, நல்ல குதிரை. இந்த விளையாட்டின் மீது மக்களின் கவனத்தை ஈர்த்து இளைய தலைமுறையினரை அது ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்," என அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :