டோக்கியோ ஒலிம்பிக்: 1980 மாஸ்கோ ஒலிம்பிக்குக்குப் பிறகு தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணி

இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
    • பதவி, பிபிசி இந்தி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணி ஹாக்கி உலகில் கோலோச்சி இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்த பொற்காலம் முடிவுக்குவந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதால் தற்போதைய புதிய தலைமுறைக்கு அந்த விவரங்கள் தெரியாமல்கூட இருக்கலாம்.

1980ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் இந்திய ஹாக்கி அணி கடைசியாக தங்கம் வென்றது. அதன்பிறகு 41 ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெற்றிமேடையில் ஏறுவதை நாட்டின் புதிய தலைமுறை பார்க்காததற்கு இதுவே காரணம். ஆனால் பயிற்சியாளர் கிரஹாம் ரீடின் கீழ் பயிற்சி பெற்றுள்ள இந்த அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணி தற்போது தனது பயிற்சியை பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (எஸ்.ஏ.ஐ) மையத்தில் மேற்கொண்டு வருகிறது.

இந்திய அணி இந்த முறை ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவுடன் 'ஏ' பிரிவில் போட்டியிட உள்ளது. இந்தப்பிரிவில் உள்ள மற்ற அணிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின் மற்றும் ஒலிம்பிக்கை நடத்தும் ஜப்பான். ஜூலை 24 ஆம் தேதி இந்திய அணி, தனது முதல் பந்தயத்தில் நியூசிலாந்தை சந்திக்கவேண்டும்.

"நியூசிலாந்திற்கு எதிராக நாங்கள் முதல் பந்தயத்தை விளையாடவேண்டும். இந்தப் பந்தயத்தில் நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதைப் பொருத்தே அணியின் வருங்கால செயல்திறன் அமையும். ஒரு நல்ல தொடக்கம், அணி சிறப்பாக செயல்படுவதற்கான பாதையை அமைத்துத்தரும்," என இந்திய அணியின் முன்கள ஆட்டக்காரர் ரமன்தீப் சிங் தெரிவித்தார்.

"பிரச்சனை என்னவென்றால், நாங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடாமலேயே பயிற்சி பெற்றுவருகிறோம். அதே நேரத்தில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை விளையாடிய பின்னர் அங்கு வரும். இந்த இரு அணிகளுமே இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் உள்ளன. இது தவிர பிரிவில் உள்ள மற்றொரு அணியான , ஸ்பெயின், கான்டினென்டல் சாம்பியன்ஷிப்பில் விளையாடி பயிற்சி பெற்றுவருகிறது," என்றார் அவர்.

கொரோனாவின் தாக்கம்

மன்ப்ரீத் சிங், இந்திய ஹாகி அணி தலைவர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் உள்ள இந்த மூன்று அணிகளோடு கூடவே, நெதர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியும் கான்டினென்டல் சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருகின்றன. இந்த அணிகளுக்கு FIH ப்ரோ லீக் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் தயார்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்தியாவும் ப்ரோ லீக் போட்டிகளில் விளையாட இருந்தது . ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இது மட்டுமல்லாமல் இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள சில சுற்றுப்பயணங்களையும் திட்டமிட்டிருந்தது, ஆனால் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இது நடக்கவில்லை.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியின் பொறுப்பாளருமான ஜாஃபர் இக்பால், எஃப் ஐ எச் புரோ லீக் போட்டிகள் ஒத்திவைப்பால் பெரிய வித்தியாசம் ஏற்படாது, ஏனெனில் இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது என்று கூறுகிறார்.

"நமது அணிக்கு உலகின் அனைத்து அணிகளுக்கும் எதிராக விளையாடிய அனுபவம் உள்ளது. இந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் எட்டு - பத்து ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர். எனவே சில அணிகளுக்கு எதிராக விளையாட முடியாமல் போனதால், அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எப்படியும் நமது அணி டோக்கியோவை அடைந்து சில அணிகளுடன் விளையாடும். அந்த போட்டிகளில் விளையாடுவதும் நன்மை பயக்கும்," என்று ஜாஃபர் இக்பால் கூறுகிறார்.

"அணியின் வீரர்கள் நீண்ட காலமாக ஒன்றாக விளையாடுகிறார்கள், எனவே அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை இந்த முறை அணியை வெற்றிமேடையில் ஏற்றக்கூடும்," என அவர் குறிப்பிட்டார்.

பயிற்சியாளரின் வெற்றி நம்பிக்கை

இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம், Getty Images

இந்த அணி பதக்கம் வெல்லும் என ஜாஃபர் இக்பால் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால் ஒலிம்பிக்கின் சூழ்நிலை மற்ற சர்வதேச போட்டிகளை விட சற்று வித்தியாசமானது என்றும் அவர் கூறுகிறார்.

"பங்கேற்கும் அனைத்து அணிகளும் முழு தயாரிப்போடு வருகின்றன. பல முறை அணிகள் ஒலிம்பிக்கிற்கு முன்புவரை சிறப்பாக விளையாடும், ஆனால் ஒலிம்பிக்கில் அவ்வணியின் ஆட்டம் சிறப்பாக அமையாது. இதுதான் நமக்கும் நடந்தது. ஆனால் இந்தமுறை செல்லும் இந்திய அணி நன்றாக இருக்கிறது. பெனல்டி கார்னரை கோலாக்கும் திறனை இந்த அணி மேம்படுத்தியுள்ளது. பல வீரர்கள் எட்டு - பத்து ஆண்டுகளாக ஒன்றாக விளையாடுகிறார்கள். எனவே அணியில் அனுபவத்திற்கு பஞ்சமில்லை. இப்போது நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அணி மீதான எதிர்பார்ப்புகளை அது எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதுதான்," என்கிறார் அவர்.

ஜாஃபர் இக்பாலின் இந்தக்கூற்றை இந்திய கேப்டன் மன்பிரீத் சிங்கும் ஆமோதிக்கிறார். "உலகம் நம்பிக்கையில் தான் இயங்குகிறது. எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. பங்கேற்கும் அனைத்து அணிகளும் முழு தயாரிப்போடு வருகின்றன" என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் எங்கள் திறனை சிறப்பாக வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இந்த முறை சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தபின் தாயகம் திரும்புவோம் என்று நம்புகிறோம். கடந்த சில நாட்களில் எங்கள் விளையாட்டு, எங்கள் தயார்நிலையை பிரதிபலிக்கிறது.

சில நாட்கள் முன்பு ப்ரோலீக்கில், ஆஸ்திரேலியா, ஹாலந்து , பெல்ஜியம் மற்றும் அர்ஜென்டினாவை வென்றுள்ளோம். ஆனால் ஒலிம்பிக் வரை இந்த வேகத்தை பராமரிக்க வேண்டும். அதை செய்யவே முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடும் நம்பிக்கையை வெளிப்படுத்திய மன்பிரீத் சிங், "முழுமையாகத் தயாராவதற்கு எல்லா முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம். இந்த முறை பதக்கம் வெல்வதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். டோக்கியோவில் நாங்கள் பதக்கம் வென்றால், நாட்டில் கொரோனா காலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு அது அர்ப்பணிக்கப்படும்," என்று தெரிவித்தார்.

தயார்படுத்திக்கொள்ள ஒலிம்பிக் போன்ற போட்டிகள்

இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் பயிற்சி ஊழியர்கள், தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தலைமையில், தற்போது தொடர்ச்சியாக ஆறு பரஸ்பர போட்டிகள் தேர்வுச் சுற்றுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டிகளில் இந்திய அணி, இந்திய ஜெர்சியுடன் களம் இறங்குகிறது. ஒலிம்பிக் தொகுப்பில் உள்ள பிற அணிகள் போல எதிரணி தயார் செய்யப்பட்டு மைதானத்தில் இறக்கப்படுகிறது.

போட்டியில் ஒலிம்பிக் போன்ற சூழல் உருவாக்கப்பட்டு, போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. மேலும், இந்த போட்டியில் தங்களது திறமைகள் அனைத்தையும் காட்ட வேண்டும் என்பது வீரர்களுக்குத் தெரியும். ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் 16 பேர் கொண்ட இந்திய ஒலிம்பிக் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

'ஒவ்வொரு போட்டியும் முக்கியம்'

"ஒலிம்பிக்கில் ஒரு பிரிவில் இருந்து நான்கு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். எனவே காலிறுதிக்கு முன்னேறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. காலிறுதியில் யாரை எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்து முன்னேறிசெல்வது இருக்கும். காலிறுதியில் சிறப்பான ஆட்டம்,அரையிறுதிக்கு செல்லும் உத்தரவாதத்தை அளிக்கும். ஆனால் தொகுப்பு போட்டிகளை லேசாக எடுத்துக் கொள்ளலாம் என பொருளல்ல" என ஜாஃபர் இக்பால் கூறுகிறார்.

"ஒரு பிரிவின் எல்லா போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தால் காலிறுதியில் நீங்கள் இரண்டாவது பிரிவில் இருந்து குறைந்த தரவரிசை கொண்ட அணியை எதிர்கொள்வீர்கள். இது நமக்கு சாதகமாக இருக்கும்,"

இந்திய அணியின் கடந்த சில ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்தால், எதிரணி தாக்குதல் தொடுக்கும்போது, நமது பாதுகாப்பு அரண் படபடப்புடன் ஆடுவது ஒரு பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக எதிர் அணிகள் அதிக பெனால்டி கார்னர்களை பெறுகின்றன. அதே போல் கடைசி நிமிடத்தில் கோல்களை அடிக்கவிட்டு நமது அணி தோல்வியடைகிறது.

"கடைசி நிமிடத்தில் போட்டி கைநவிழுவிப் போகாமல் தடுப்பதற்கு நாங்கள் நிறைய பயிற்சி செய்துள்ளோம். இதன் விளைவை இப்போது பார்க்கமுடிகிறது," என மன்பிரீத் கூறுகிறார்.

கேப்டனின் இந்தக்கூற்றில் உண்மை தெரிகிறது. கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் தற்காப்பு வீரர்கள், நம்பிக்கையுடன் கோல் அடிக்கவிடாமல் தடுப்பதை பார்க்க முடிகிறது. எந்தவித தயக்கமும் இல்லாமல் 'பேக் பாசை' அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த அதிகரித்த நம்பிக்கை காரணமாக, இப்போது குறைவான பெனால்டி கார்னர்களே எதிரணிக்கு கிடைக்கின்றன.

கடந்த காலத்தில் நல்ல செயல்திறன்

இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஹாக்கி அணி 2020ல் நன்றாக இருந்தது. இரண்டு போட்டிகளில் இந்தியா நெதர்லாந்தை தோற்கடித்தது. இதன் பின்னர், உலக சாம்பியனும், உலகின் முதல் தரவரிசை அணியுமான பெல்ஜியத்திற்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. ஆனால் போட்டியின் கடைசி 15 நிமிடத்தில், இந்தியாவின் அதிரடியான தாக்குதல் ஆட்டம் காரணமாக இரண்டு கோல்கள் போடப்பட்டன. இது அணியின் செயல்திறனில் முன்னேற்றத்தைக் காட்டியது.

இந்த பந்தயத்தில் இந்தியா வெற்றிபெற முடியவில்லை. ஆனால் இரண்டாவது பந்தயத்தில் நன்மை கிடைத்தது. அதில் அணி 2 - 2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்ற பின்னர் பெனால்டி ஷூட்அவுட்டில் இந்தியா வென்றது.

இது 2016க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் வெற்றியாகும். அதே நேரத்தில், இந்த ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை தோற்கடித்ததன் மூலம், இந்தியா தனது தயார் நிலையை உறுதி செய்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் இந்த முறை அணியை வெற்றிமேடையை நோக்கி அழைத்துச் செல்லும் வாய்ப்பை சுட்டுகின்றன. திறமையும் அதிர்ஷ்டமும் சரியான நேரத்தில் கைகொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :