டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
- பதவி, பிபிசி இந்தி
இந்தியாவின் குத்துச்சண்டை வரலாறு மிகவும் பழமையானது. ஆனால் ஒலிம்பிக்கை பொருத்தவரைஅது அத்தனை பிரகாசமாக இல்லை. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.சி மேரி கோம் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த முறை இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக சண்டையிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இந்தியாவின் ஒன்பது உறுப்பினர்கள் குழு இந்த முறை பதக்கங்களுடன் திரும்பவேண்டும் என்ற ஆவல் அனைவர் மனதிலும் நிறைந்துள்ளது.
இந்தியாவின் குத்துச்சண்டை ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் இப்போது தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறிவிட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் எப்படி இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, " இந்த நாட்களில் அமெச்சூர் குத்துச்சண்டையில் நான் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் அதைப் பற்றி நான் படித்த மற்றும் கேட்டவற்றிலிருந்து, இந்த முறை ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அமித் பங்கல் நல்ல ஃபார்மில் இருக்கிறார், நம்மிடம் மேரி கோமும் உள்ளார்," என்று தெரிவித்தார்.
இந்திய குத்துச்சண்டையில் மாற்றத்தைக் கொண்டுவந்த விஜேந்தர்

பட மூலாதாரம், Getty Images
இந்திய குத்துச்சண்டை வீரர்கள் நீண்ட காலமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஆனால் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன் மூலம் விஜேந்தர் இந்திய குத்துச்சண்டைக்கு ஒரு புதிய பாதையை காட்டினார்.
இதன் பின்னர் பல இளைஞர்களும் இந்த விளையாட்டிற்குள் நுழைய ஆரம்பித்தனர். விஜேந்தர் தொழில்முறை விளையாட்டு வீரராக மாறிய பின்னர் இந்திய குத்துச்சண்டைக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது உண்மைதான்.
ஆனால் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் இதில் நுழைந்த காரணத்தால், கடந்த சில ஆண்டுகளில், இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆசிய மட்டத்தில் மட்டுமல்லாமல் உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.
இந்த முறை இந்தியாவைச் சேர்ந்த ஐந்து ஆண் குத்துச்சண்டை வீரர்கள் உட்பட மொத்தம் ஒன்பது குத்துச்சண்டை வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். அமித் பங்கல், மனீஷ் கெளசிக், விகாஸ் கிரிஷன், ஆஷீஷ் குமார், சதீஷ், எம்.சி மேரி கோம், சிம்ரன்ஜித் கவுர், லோவ்லினா மற்றும் பூஜா ராணி ஆகியோர் குத்துச் சண்டை போட்டியில் கலந்துகொள்ள டோக்கியோ செல்லவிருக்கிறார்கள்.
லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு விஜேந்தர் தொழில்முறை விளையாட்டு வீரராக மாறிய பின்னர் இதே அலை நாட்டில் வீச ஆரம்பித்தது. இதன் காரணமாக 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவால் ஒரு வலுவான அணியை களமிறக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இது தவிர நாட்டின் குத்துச்சண்டை விளையாட்டு அந்த நேரத்தில் ஒரு கடினமான கட்டத்தில் இருந்தது. இந்திய குத்துச்சண்டை சங்கத்தை, சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இடைநீக்கம் செய்ததே இதற்கு காரணம். அபய் சிங் செளட்டாலா இந்திய குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராக 12 ஆண்டுகள் பதவிவகித்தபிறகும் அவரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஆக்குவதற்காக சட்டங்களை மாற்றி, சேர்மென் என்ற ஒரு புதிய பதவி உருவாக்கப்பட்டது 'ஒரு அரசியல் தலையீடு' என்று கூறி சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டது.
புதிய தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது. பின்னர் இந்த விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தேசியக் கொடி இல்லாமல் பங்கேற்க வேண்டியிருந்தது.
அத்தகைய சூழ்நிலையில் வீரர்கள் முழுமனதுடன் களமிறங்குவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீரர்களுக்கு நிலைமை சரியாகிவிட்டன. எனவே முடிவுகளும் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் பயிற்சியின் இறுதிகட்டம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய குத்துச்சண்டை குழு தற்போது இத்தாலியில் தனது ஒலிம்பிக் பயிற்சிகளை நிறைவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விளையாட்டுகளைப் போலவே குத்துச்சண்டை வீரர்களின் பயிற்சிகளும் பின்னடைவை சந்தித்தன.
இந்த காரணத்திற்காக குத்துச்சண்டை வீரர்கள் ஜூன் 15 அன்று ஐரோப்பிய குத்துச்சண்டை வீரர்களுடன் பயிற்சி பெற இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர். முன்னதாக, குத்துச்சண்டை வீரர்கள் ஜூலை 10 ஆம் தேதி இந்தியா திரும்பி இங்கிருந்து டோக்கியோ செல்லவிருந்தனர்.
ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு கொரோனாவின் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நாடுகளில் கொரோனா தொற்று மிக அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம்.
இந்தியாவில் இருந்து செல்லும் வீரர்கள் டோக்கியோவை அடைந்தவுடன் கடுமையான தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குத்துச்சண்டை வீரர்களை இத்தாலியில் இருந்து நேராக டோக்கியோவுக்கு அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு கழகத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணத்தில் நேரத்தை வீணாக்குவதை விட இங்கு பயிற்சி செய்வது நல்லது என்று அவர் நம்பினார். ஆனால் தனிமைப்படுத்தலின் கடுமையான விதிகள் வந்தபோது, மேரி கோமும் இத்தாலி செல்ல முடிவுசெய்தார்.
நீண்ட காலமாக கடுமையான பயிற்சி செய்தபின், தனிமைப்படுத்தலில் செயல்பாடு பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வது பொருத்தமானதல்ல என்றும் இதன் காரணமாக தனது திட்டத்தை மாற்றிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
அமித் மற்றும் மேரி கோம் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியில் உள்ள ஒன்பது குத்துச்சண்டை வீரர்களும் சர்வதேச அளவில் பிரகாசிக்கப் போகிறார்கள். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிமேடையில் ஏறுவது எளிதான காரியமல்ல.
ஆனால் இந்த அணியில் இடம்பெற்றுள்ள அமித் பங்கல் மற்றும் எம்.சி மேரி கோம் ஆகியோர் பதக்கம் வெல்லும் வலுவான போட்டியாளர்களாக கருதலாம்.
சிறப்பு விஷயம் என்னவென்றால், இருவரும் ஃப்ளைவெயிட் பிரிவின் குத்துச்சண்டை வீரர்கள். அமித் சமீபத்தில் உலக நம்பர் ஒன் குத்துச்சண்டை வீரராகியிருப்பது, ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட அவரை ஊக்குவிக்கும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கத்தையும், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார். தற்போதைய உலக தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள பிரான்சின் பிலால் பெனாமா மற்றும் சீனாவின் ஹு ஜியான் குவான் ஆகியோரை அவர் ஒரு முறை தோற்கடித்துள்ளார்.
ஆனால் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் ஷாகோபிடின் சோயிரோவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் அமித் தோல்வியடைந்துள்ளார். துபாய் ஆசிய சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் சர்ச்சைக்குட்பட்ட 2 - 3 புள்ளிகள் இழப்பும் இதில் அடங்கும்.
உலகின் நம்பர் ஒன் குத்துச்சண்டை வீரர் என்பதால் அமித்துக்கு, ஒலிம்பிக் ட்ராவில் சாதக நிலை கிடைக்கும். மேலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் இலகுவான எதிரியை அவர் சந்திக்கக்கூடும். இதன்மூலம் பதக்கத்தை அடைவதற்கான அவரது பாதை சற்று எளிதாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
அமித் பங்கலைப் போலவே, ஆறு முறை உலக சாம்பியனான எம்.சி மேரி கோமும் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளராக உள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில்தான் முதல்முறையாக மகளிர் குத்துச்சண்டை சேர்க்கப்பட்டது.
இது ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக முன்பே இருந்திருந்தால், மேரி கோம் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்திருப்பார். மேரி கோமின் வயதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இது அவரது கடைசி ஒலிம்பிக் ஆக இருக்கக்கூடும்.
எனவே அவர் லண்டனில் வென்ற வெண்கலப் பதக்கத்தின் நிறத்தை இந்தமுறை நிச்சயமாக மாற்ற விரும்புவார். அவ்வாறு செய்வதற்கான திறனும் அவரிடம் உள்ளது. தரவரிசையின்படி பார்த்தால் அவரது நிலை வலுவாக இல்லை.
தனது பிரிவில் ஏழாவது இடத்தில் அவர் உள்ளார். ஆனால் மேரி கோம் மன உறுதிமிக்க குத்துச்சண்டை வீரர் என்பதால் தரவரிசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. கொரோனாவின் கடினமான காலங்களில் கூட பயிற்சி சிறப்பாக இருந்ததாக அவர் கருதுகிறார்.
பூஜா ராணியின் பதக்க நம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images
இரண்டு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணிக்கு இது முதல் ஒலிம்பிக் ஆகும். இந்த முதல் போட்டியை மறக்கமுடியாத ஒன்றாக மாற்ற அவர் விரும்புகிறார். "ஒலிம்பிக்கில் என்னுடைய சிறந்ததை நான் தருவேன் , மீதி கடவுளின் கையில்," என்று இத்தாலிக்குச் செல்வதற்கு முன்பு அவர் கூறினார்.
தான் பதக்கமேடையில் ஏறுவது தன் கண்களுக்குத் தெரிவதாகவும், தனது பயிற்சியில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றது தனது நம்பிக்கையை அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அவர் மனவலிமை கொண்டவர். அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக அவர் குத்துச்சண்டை வீரராக மாறியிருப்பதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. அவரது குடும்பத்தினர் மகளிர் குத்துச்சண்டையை, 'நல்லவர்களால்' விளையாடப்படும் ஒன்றாகக்கருதவில்லை.
இதன் காரணமாக, பிவானியில் உள்ள ஹவா சிங் அகாடமிக்குச் செல்வதற்கான தைரியத்தைத் திரட்ட அவருக்கு ஆறு மாதங்கள் பிடித்தது. ஏனென்றால் அவரது தந்தையிடமிருந்து அதை மறைக்கவேண்டியிருந்தது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர்தான் அவரது தந்தைக்கு, தனது மகள் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்ற விஷயம் தெரியவந்தது. ஆனால் அதன் பின்னர் பூஜா ராணியை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் அவர் உறுதுணையாக இருக்கிறார்.
மற்ற வீரர்களின் பதக்க வாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images
விகாஸ் கிரிஷன், மனிஷ் கெளசிக், ஆஷிஷ் குமார், சதீஷ் குமார், சிம்ரன்ஜித் கவுர், லோவ்லினா ஆகிய அனைவருமே சர்வதேச அளவில் பிரகாசித்திருக்கிறார்கள். இவர்களின் பதக்க வாய்ப்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதி சுற்றில் விகாஸ் கிரிஷன் நுழைந்தார். இது தவிர, காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்தகால இழப்புகளை இந்தமுறை ஈடுசெய்ய அவர் நிச்சயம் முயற்சிப்பார். மறுபுறம், மனீஷ் மற்றும் சிம்ரன்ஜீத் ,உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள். சரியான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவேண்டும்.
கூடவே சரியான நேரத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் இந்திய அணி மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடும் என்பது உறுதி.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு ரேஷன்கார்டு விவரங்கள் இணையத்தில் கசிவு: என்ன ஆபத்து?
- டோக்கியோ ஒலிம்பிக்: வினேஷ் போகாட், அன்ஷு மல்லிக் பதக்கம் வெல்வார்களா?
- சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு: வரலாற்றை மாற்றிய 11 முழக்கங்கள்
- சிவகளை அகழாய்வு: '3,000 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நாகரிகம் இருந்ததா?'
- 5000 ஆண்டுகளுக்கு முன் தொற்று நோயால் உயிரிழந்த முதல் நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












