நரேந்திர மோதியின் அமைச்சரவை மாற்றம்: 2 முக்கியக் காரணங்கள் என்ன? - ஒரு பத்திரிகையாளரின் பார்வை

மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

(இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

இந்தத் தருணத்தில் இந்தியப் பிரதமர் இவ்வளவு பெரிய மாற்றத்தைச் செய்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மாற்றப்பட்ட அமைச்சர்களின் திறமையின்மை. மற்றொன்று தேர்தல்.

பா.ஜ.க. என்ன செய்தாலும் தேர்தலை மனதில்வைத்துத்தான் செய்யும். உத்தரப்பிரதேசத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைத்தான் இதற்கான முக்கிய காரணமாகப் பார்க்க வேண்டியுள்ளது. அதனால்தான் அந்த மாநிலத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளைக் குறிவைத்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்ததாக, திறமையின்மை. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய வரலாற்றிலேயே, இதுபோன்ற ஒரு திறமையற்ற அமைச்சரவையைப் பார்க்க முடியாது. மத்திய சுகாதார அமைச்சரையும் அத்துறைக்கான ராஜாங்க அமைச்சரையும் ஒரே நேரத்தில் நீக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்கு கோவிட் - 19ஐக் கையாளுவதில் சீர்கேடுகள் நடந்திருக்கின்றன.

அடுத்ததாக ரவி ஷங்கர் பிரசாத். அவர் கிட்டத்தட்ட ட்விட்டர் மந்திரியாகவே மாறிவிட்டார். ட்விட்டர் நிறுவனத்தோடு தினமும் சண்டையைச் செய்துகொண்டிருந்தார். குறிவைத்து சிலரோடு சண்டை செய்துகொண்டிருந்தார்.

ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பட்டியல்

எந்தெந்த அமைச்சர்கள் எல்லாம் பதவியிலிருந்து விலகப்போகிறார்கள் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு ஏதும் வரவில்லை. பெயர்களை மட்டும் காலையிலிருந்து கசியவிட்டுக்கொண்டிருந்தார்கள். நீக்கப்பட்ட பிறகுதான் அவர்களது பெயரே தெரியவந்திருக்கிறது. அந்த அளவுக்குத்தான் அவர்கள் செயல்பாடுகள் இருந்தன.

இது தவிர, பலரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பாக ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்கள். இனிமேலும் அவரை வெளியில் வைத்திருந்தால் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. இவரால்தான் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. ஆகவே அவரை உடனடியாக அமைச்சரவையில் சேர்க்க வேண்டியிருந்தது.

மோதி அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

அடுத்ததாக, அசாமின் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால். சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு தான்தான் முதல்வரென அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், ஹிமந்தா பிஸ்வ சர்மா, தன்னை முதல்வராக்க வேண்டுமென போர்க்கொடி எழுப்பினார். காங்கிரசிலிருந்து வந்த அவரால்தான் வட கிழக்கில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களை வெல்ல முடிந்தது.

தன்னை இப்போது முதல்வராக்காவிட்டால், கட்சியைவிட்டு போகப்போவதாகச் சொன்னார். அதனால்தான், தேர்தல் முடிந்தும் பல நாட்களுக்கு அங்கே யார் முதல்வர் என்பதே அறிவிக்கப்படாமல் இருந்தது.

முடிவில் ஹிமந்தா பிஸ்வ சர்மா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், சோனோவாலுக்கு ஒரு பதவி கொடுக்க வேண்டுமென்பதற்காக, மத்திய அமைச்சராக்கி இருக்கிறார்கள்.

இந்த மாற்றத்தில் பலரைக் களையெடுத்திருக்கிறார்கள். ஆனால், நீக்கப்பட வேண்டியவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.

கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால், ஆர்எஸ்எஸின் சித்தாந்தப்படி புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் என்றாலும், அவர் மோடியை புகழ்ந்து பாடும் நபராக இருக்கவில்லை. பியூஷ் கோயல் செய்வதைப் போலவெல்லாம் இவருக்குச் செய்யத்தெரியாது. இவரை பிரதமருக்கு பிடிக்கவில்லை என்பதற்கான சமிக்ஞைகள் முன்பே வந்துவிட்டன.

சிபிஎஸ்இயின் பத்தாம் வகுப்புத் தேர்வு இந்த ஆண்டு நடக்காது என்பதை ஒரு கீழ் நிலை செயலர் அறிவிக்கலாம். ஆனால், அதனை இந்த முறை பிரதமரே அறிவித்தார். அப்போதே இது தெரிந்துவிட்டது. தவிர, அவர் மிகத் திறமையான அமைச்சராகவும் இருக்கவில்லை.

"எல்லாவற்றையும் கட்டுப்படுத்த நினைக்கும் மோதி"

பிரதமருக்கு எல்லாத் துறைகளையும் தானே கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் அதிகாரிகளை வைத்துக்கொண்டு அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். எல்லா அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவிக்க வேண்டும் என்ற இந்த சித்தாந்தம் கோல்வால்கரினுடையது. அவருடைய Bunch of Thoughtsல் இதை நாம் பார்க்க முடியும்.

ரவிஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவ்டேகர் போன்றவர்களுக்கு மக்கள் செல்வாக்கு ஏதும் கிடையாது. அவர்கள் அமைச்சரவையைவிட்டு நீக்கப்பட்டாலும், அவர்கள் நரேந்திர மோதியை நாடித்தான் செயல்பட வேண்டியிருக்கும். காலைவரை நீக்கப்படவிருக்கும் அமைச்சர்களின் பட்டியலில் இவர்கள் பெயர் இல்லை. பிறகு, திடீரென இந்த அமைச்சர்களுக்கு எதிராக ட்விட்டரில் மிகப் பெரிய பிரச்சாரம் நடக்கிறது. பிறகு இவர்களும் வெளியேற்றப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு அவமானகரமான வெளியேற்றம்தான்.

அமைச்சரவை

பட மூலாதாரம், PIB INDIA

பெருந்தொற்றுக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சரை நீக்குவது என்பது மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றாலும், ஹர்ஷவர்தன் எப்போதோ நீக்கப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சிறிய முடிவை எடுக்கக்கூட பிரதமர் அலுவலகத்தைச் சார்ந்திருந்தார். எல்லா முடிவுகளும் பிரதமர் அலுவலகத்திலேயே எடுக்கப்பட்டன.

உதாரணமாக தடுப்பூசி விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். ஜனவரியில் இந்தியாவில் தடுப்பூசி அறிமுகமானபோது எல்லா மாநிலங்களிலும் அது கையிருப்பில் இருந்தது. ஆனால், அந்தத் தருணத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தார். அப்போதே எல்லோருக்கும் தடுப்பூசியைச் செலுத்த ஆரம்பித்திருந்தால், இரண்டாவது அலை இவ்வளவு தீவிரமாக இருந்திருக்காது.

மேலும், பதஞ்சலி நிறுவனம் தயாரித்த மருந்தையெல்லாம் ஒரு தீர்வாக ஹர்ஷ்வர்தன் முன்வைத்தார். நிரூபிக்கப்படாத அந்த நிறுவனத்தின் மருந்துகளை இவர் தலைமை விருந்தினராகச் சென்று வெளியிட்டார். ராம் தேவுடன் மேடையில் நிற்கிறார். அந்த ராம்தேவ் மருத்துவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார். இதன் அர்த்தம் என்ன? ஆகவே, இந்த ஹர்ஷ்வர்தன் எப்போதோ நீக்கப்பட்டிருக்க வேண்டிய மனிதர்தான். பல தரப்பிலிருந்தும் வந்த அழுத்தத்தின் அடிப்படையில், அவர் நீக்கப்பட்டிருப்பது சரியான விஷயம்தான்.

"முருகனின் பாத்திரம் முடிந்துவிட்டது"

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல் ஏதும் இப்போதைக்கு இல்லை என்பதால், பெரிதாக அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை. எல். முருகன் மத்திய இணை அமைச்சராகியிருக்கிறார். பா.ஜ.கவைப் பொறுத்தவரை ஒருவரை மேலே உயர்த்துவது என்பது, அவர்கள் தற்போதுள்ள பதவியிலிருந்து நீக்குவதுதான். அதுதான் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு நடந்தது. ஆனால், அவருக்கு நல்ல பதவி அமைந்தது. இரு மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கிறார்.

முருகன்

பட மூலாதாரம், L MURUGAN

தமிழிசை எப்படி தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்த்தாரோ, அதேபோலத்தான் முருகனும். தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு நான்கு இடங்களைப் பெற்றுத் தருவது சிறிய விஷயமல்ல. முருகன் தலைவராக இருக்கும்போதுதான் இது நடந்திருக்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவர் தேவையாக இருப்பார். ஒருகட்டம் வரை தமிழிசை சௌந்தர்ராஜன் தேவைப்பட்டார். அதற்குப் பிறகு, முருகன் தேவைப்பட்டார். அவருடைய பாத்திரமும் முடிந்துவிட்டது.

அடுத்ததாக, நயினார் நாகேந்திரன் வருவார் என நினைக்கிறேன். ஆனால், பலர் அண்ணாமலை வருவார் என நினைக்கிறார்கள். அவருக்கு தில்லியில் நல்ல செல்வாக்கிருக்கிறது. ஆனால், நயினார் நகேந்திரன் வந்தால் கட்சிக்கு வளர்ச்சி ஏற்படக்கூடுமென கருதுகிறேன். முருகனை அமைச்சராக்கியிருப்பதன் மூலம் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பா.ஜ.க. விரும்புகிறது. அக்கட்சி, மிக அறிவியல்பூர்வமாக செயல்படும் ஒரு கட்சி.

பூத் மட்டத்தில் எத்தனை நபர்கள் தேவை என்ற மட்டத்திலிருந்து அவர்கள் கணக்கிட்டு செயல்படுவார்கள். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் நூறு பேராவது இருந்தால்தான் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கும். இதற்கு நயினார் நகேந்திரனின் ஜாதி தேவைப்படும். முருகன் இனி பயன்படமாட்டார் என கட்சி நினைக்கக்கூடும். நயினாரை வைத்து இதர பிற்படுத்தப்பட்டோரைத் திரட்டலாம் என அவர்கள் நினைக்கலாம்.

பா.ஜ.கவைப் பொறுத்தவரை இனி அ.தி.மு.கவின் தேவை கிடையாது. 2026 தேர்தலை பா.ஜ.க., அ.தி.மு.கவுடன் இணைந்து சந்திக்காது. அதற்கு முன்பாகவே அ.தி.மு.க. நலிந்துவிடும். புதன்கிழமை மட்டும் எத்தனை அறிக்கைகள்? சி.வி. சண்முகத்தின் பேச்சு ஒரு பக்கம். அதனால், மந்திரி பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஓ.பி.எஸ்ஸின் அறிக்கை ஒரு பக்கம் வருகிறது. இவை இரண்டுமில்லாமல், ஜெயக்குமார் பேசுகிறார். பிறகு ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி கே. பழனிச்சாமியும் இணைந்து இன்னொரு அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

பா.ஜ.க. பாராமுகமாக இருந்தாலும் அ.தி.மு.க. விலகிச் சென்றுவிட முடியாது. காரணம், என்ன வழக்குகளை வேண்டுமானாலும் மத்திய அரசு போடலாம். தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடந்தது நினைவுக்கு வரும். ஆகவே, பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அ.தி.மு.கவைப் பொறுத்தவரை அதுதான் நடக்கும். இனிமேல் பா.ஜ.க. தேவையில்லை என்ற நிலையை எடப்பாடி எடுக்கலாம். ஆனால், இன்று அந்த நிலையில் அவர் இல்லை. கட்சி இன்று முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இந்த நிலைப்பாட்டை அவர் எடுக்க முடியாது. அதற்கு ஓ. பன்னீர்செல்வமும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகவே, வேறு தலைமை ஏதாவது வந்தால் மட்டும்தான் அது சாத்தியமாகும்.

(பிபிசியின் ஃபேஸ்புக் நேரலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதன் எழுத்து வடிவம்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :