இந்தியாவின் கொரோனா நெருக்கடியால் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கும் பிற நாடுகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகக் கடுமையாக இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளரால் தேவைக்கு நிகராக உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஹரியட் ஓரெல் மற்றும் விஜ்தன் மொஹம்மத் கவூசா
    • பதவி, பிபிசி உலக சேவை மற்றும் பிபிசி மானிட்டரிங்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, தான் குறிப்பிட்ட அளவுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்கிற நிறுவனம் மாதம்தோறும் 100 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசெனீகா கொரோனா தடுப்பூசியை, அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.

ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மிக அதிகமாக இருப்பதால், இந்திய அரசு தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும், கடந்த செவ்வாய்க்கிழமை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா பிரிட்டன் நாட்டுக்கு அனுப்ப வேண்டிய ஐந்து மில்லியன் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி சரக்குகளை இந்திய அரசு தடுத்து நிறுத்தியது.

கடந்த மார்ச் மாத மத்தியில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவின் இந்த திடீர் முடிவால் ஆஸ்ட்ராசெனீகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை நம்பியிருந்த பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் எப்போது மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும், ஏற்கனவே குறிப்பிட்ட காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுப்பதாக சொல்லியிருந்த ஒப்பந்தங்களை இந்தியா எப்படி நிறைவேற்றும் என எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 93 சதவீதம் சரிந்து இருப்பதாக இந்தியாவின் மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது. முன்பு சுமார் 28 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது இது வெறும் இரண்டு மில்லியன் டோஸ்ளாக குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையத் தொடங்கின.

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியதுமே, உலகம் முழுக்க அப்பிரச்னை எதிரொலிக்கத் தொடங்கியது. 60-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஏற்றுமதித் தடையால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவேக்ஸ் திட்டத்தை நிர்வகிக்கும் கவி என்கிற தடுப்பூசி கூட்டமைப்பு, இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதி தடை இருப்பதால் தன் விநியோகத்தை அதிகரிக்க வேறு நாடுகளை பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

"சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் இருந்து இப்போதைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கோவேக்ஸ் திட்டத்துக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை" என கவி கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

"கடந்த பிப்ரவரி மற்றும் மே மாத காலத்துக்குள் கோவேக்ஸ் திட்டத்திற்கு சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 110 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை வெறும் 20 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன.

எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சென்று சேர வேண்டிய நாடுகளுக்கு தாமதமாகவே சென்று சேர்கின்றன. கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நாடுகளுக்கு, மே மாதம் வந்து சேர வேண்டிய டோஸ்கள் ஜூன் மாத கால இறுதிக்குள் வந்து சேரும்,” என கவி கூட்டமைப்பு கூறியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

உரையிட்ட கைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி மருண்டு குப்பிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவேக்ஸ் திட்டத்தோடு பல நாடுகளும் சீரம்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியைத் தான் அதிகம் சார்ந்து இருந்தன.

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஏற்படுத்திய பற்றாக்குறையை நிரப்ப கவி கூட்டமைப்பு கடந்த வாரம் மாடர்னா மற்றும் நோவாவேக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் 850 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்க ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, அதிகாரத்தில் இருப்பவர்கள், அமைச்சர்கள் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் தன்னை அச்சுறுத்துவதாகவும் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை தங்களுக்கு விநியோகிக்குமாறும் கட்டாயப்படுத்துவதாகம் தெரிவித்திருந்தார்.

"பயமுறுத்துகிறார்கள் என்பது குறைவாக மதிப்பிட்டுக் கூறும் வாக்கியங்கள்" என பிரிட்டனின் நாளிதழான 'தி டைம்ஸ்' இடம் கூறினார் அதார் பூனாவாலா. "அவர்களின் எதிர்பார்ப்பும் வேகமும் இதற்கு முன் நான் கண்டதில்லை. இது மிக அதிகமாக இருக்கிறது. தங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். தங்களுக்கு முன்பாக மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைப்பது ஏன் என அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை"

கொரோனா தொற்றின் ஆரம்ப காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தன்னுடைய உற்பத்தி கொள்ளளவை 1.5 பில்லியன் டோஸ்களிலிருந்து 2.5 பில்லியன் டோஸ்களாக அதிகரித்துக் கொண்டது. இதற்கு 800 மில்லியன் டாலர் செலவழித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்ட்ராசெனீகா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட போது சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் எடுத்த அபாயம் நிறைந்த முடிவுகள் பலன் கொடுத்ததாக தெரிந்தன.

இருப்பினும் கொரோனா வைரஸ் பிரச்னையால் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் தலைவர் அதார் பூனாவாலா ஆய்வு வளையத்திற்குள் உட்படுத்தப்பட்டார்கள்.

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் மீது உலகின் பல நாட்டு அரசாங்கங்களும், தாங்கள் குறிப்பிட்டபடி கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை அனுப்பவில்லை என வழக்கு தொடுத்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியது.

முகக்கவசத்துடன் கடந்த ஜ்னவரி மாதம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதார் பூனாவாலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதார் பூனாவாலா, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி. தன்னை அதிகார பலம் நிறைந்தவர்கள் தடுப்பூசி கேட்டு மிரட்டுவதாகக் கூறுகிறார்.

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கபடுவதற்கு முன்பு, அவருக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து அதார் பூனாவாலா தன் மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பதற்காக லண்டன் நகருக்குச் சென்றார். அதோடு தான் கொஞ்ச காலம் லண்டனிலேயே இருக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்தியா கொரோனா வைரஸ் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே விட்டுச் சென்றதாக அதார் பூனாவாலாவின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தான் இந்தியாவை விட்டு பிரிட்டனுக்குச் சென்றது வியாபார விவகாரங்கள் தொடர்பாக தான் எனக் கூறினார் பூனாவாலா. இந்தியாவிலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப் படுவதற்கான தடை அத்தனை வலுவாக இல்லை என்றாலும், எப்போது இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என தெளிவாக தெரியவில்லை.

இந்தியாவிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் வேகம் மந்தம் அடைந்து வருவதாகவும், இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் our world in data என்கிற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. இது இந்தியாவிலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான தடையை விளக்க தாமதப்படுத்தும்.

இந்தியாவிலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் நிலையற்ற தன்மை, நேபாளம் வங்கதேசம் போன்ற நாடுகளை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இந்நாடுகள் தங்களுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களுக்கு முன்கூட்டிய பணத்தை செலுத்தி இருக்கின்றன.

இந்தியா தன் அண்டை நாடான நேபாளத்திற்கு 2.5 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களை விநியோகித்து இருக்கிறது. இதில் ஒரு மில்லியன் டோஸ்கள் வணிக ரீதியிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு ஒரு மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வந்து சேர வேண்டி இருக்கிறது என 'தி காத்மண்டு போஸ்ட்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அந்த ஒரு மில்லியன் டோஸ் மருந்துக்கான பணத்தில் 80 சதவீத பணத்தை முன்கூட்டியே செலுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. "65 வயதிற்கு மேற்பட்ட 1.35 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மே மாதத்திற்குள் செலுத்த நேபாள் திட்டமிட்டிருக்கிறது. ஆனால் நேபாள அரசிடம் கையில் போதுமான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இல்லை" என அச்செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வங்கதேசத்தில் ஒரு நபர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நன்கொடையை நம்பி இருக்கும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. உதாரணம் வங்கதேசம்

இந்தியா நேபாள நாட்டிற்கு கொடுக்கவண்டிய கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களை முறையாக அனுப்பி வைக்கவில்லை எனில், தன் மூத்த குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த முடியாது என நேபாள நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி கூறியதாக தி இந்து நாளேட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனீகா கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் 10 நாட்களில் காலியாகிவிடும். 1.5 மில்லியன் மக்கள் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்காக காத்திருக்க வேண்டியிருக்கும் என கடந்த மே 4ஆம் தேதி 'தாகா டிரிபியூன்' என்கிற வங்கதேச நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. "வங்கதேசத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க 2.79 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்கள் தேவை, அதுவரை ஒரு நெருக்கடி நிலவுகிறது" என அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தாமதமானதால், வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதற்காக பதிவு செய்யப்படும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது என இந்தியாவின் பொருளாதார பத்திரிகைகளில் ஒன்றான எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே செய்தியில் சீனாவின் சீனாஃபார்ம் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வங்கதேசத்தில் அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு இந்த மாதம் அனுமதி அளித்திருக்கிறது. மேலும் கோவேக்ஸ் திட்டத்திற்கு சீன தடுப்பூசியை விநியோகிக்க வேண்டும் என்கிற முன் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் அனைவரும் கோவேக்ஸ் திட்டத்தில் பங்கெடுத்து உலக நாடுகள் அனைத்திற்கும் சமமான அளவில் வைரஸ் தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட பங்களிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்" என உலக சுகாதார அமைப்பின் சுகாதார பொருட்கள் பிரிவின் உதவி இயக்குனர் ஜெனரல் மருத்துவர் மரியாங்களே சிமாவு கூறினார்.

சினோஃபார்ம் தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிரப்ப முடியாமல் விட்ட இடத்தை, சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசியைக் கொண்ட நிரப்பலாம் என சீனா நம்புகிறது. சினோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி இருக்கிறது

சீனா தன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 10 மில்லியன் டோஸ்களை கோவேக்ஸ் திட்டத்துக்கு வழங்கும் என்றும், அதை செயல்படுத்த உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சீனாவின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹியு சுன்யிகிங் கூறினார்.

தன் நாட்டிலேயே கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அதிகம் முயற்சித்துக் கொண்டிருக்கும் எகிப்து போன்ற பல நாடுகள், தற்போது சீனாவிடம் இருந்து சீனனோஃபார்ம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

எகிப்து நாட்டிலேயே கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் பயன்பாட்டிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என எகிப்தின் சுகாதார அமைச்சர் ஹலா சையித் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அடுத்த மாதம் எகிப்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி பணிகள் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆப்ரிக்க நாடுகளில் கோவேக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுவதில் தேக்கம் காண்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆப்ரிக்க கண்டத்தில் வெறும் ஒரு சதவீத மக்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் மருந்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், 0.37 சதவீத ஆப்ரிக்க மக்கள் மட்டுமே இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக ஆப்ரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு குறிப்பிடுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் 20 சதவீதம் பேருக்கும், அமெரிக்காவில் 25 சதவிகிதம் பேருக்கும் வைரஸின் முதல் டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக உலகின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பூசியில் ஒரு டோசையாவது செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலகின் 10 பணக்கார நாடுகளில் 80 சதவிகித மக்கள் ஏதாவது ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியில் முதல் டோஸை செலுத்தி கொண்டுள்ளனர் என our world in data தரவுகள் கூறுகின்றன.

கோவேக்ஸ் திட்டம் இதுவரை 122 நாடுகளுக்கு கிட்டத்தட்ட 58 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களுக்கான தேவையை விட விநியோகம் குறைவாக இருக்கிறது.

கோவேக்ஸ் திட்டம் மூலம் டெலிவரி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஆப்பிரிக்க நாடுகள், கோவேக்ஸ் திட்டம் மூலமாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றன. இந்தியாவில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நேரடியாக ஆப்பிரிக்க நாடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதி தடையால், 150 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்கள் கால தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை 190 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்கும் என கவி தடுப்பூசி கூட்டமைப்பின் முதன்மை செயல் அதிகாரி மருத்துவர் செத் பெர்க்லி ஆப்ரிக்க சுகாதார அமைச்சர்களுக்கான அவசர உச்சிமாநாட்டில் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டார்.

கோவேக்ஸ் திட்டம் தன் 90 சதவிகித விநியோகத்திற்கு ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியை நம்பியிருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதித் தடையால் கோவேக்ஸ் திட்டத்திற்கான விநியோகம் தடைபட்டது. மாடர்னா மற்றும் நோவாவேக்ஸ் நிறுவனங்களோடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் கீழ் ஜூலை மாதத்திற்கு முன்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை எதிர்பார்க்க முடியாது.

இதற்கு மத்தியில் கோவேக்ஸ் திட்டம் பணக்கார நாடுகளின் நன்கொடைகளை நம்பியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் தொடக்க காலத்தில், பணக்கார நாடுகள் தடுப்பூசிகளுக்கு முழுமையாக பணம் செலுத்தி கூடுதலாகப் பெற்றிருக்கும் தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்க இருக்கிறது. உதாரணமாக ஸ்வீடனை குறிப்பிடலாம். ஸ்வீடன் ஒரு மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை கோவேக்ஸ் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கவிருக்கிறது. தடுப்பூசிக்கான பணத்தை ஸ்வீடன் நாடு ஏற்கனவே செலுத்தி விட்டது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதித் தடையால் ஆப்ரிக்க நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அந்நாடுகள் தான் அதிக அளவில் ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியை சார்ந்து இருக்கின்றன.

"இந்தியாவில் நிலவும் தடுப்பூசி ஏற்றுமதித் தடையால் கொரோனா வைரஸ் தடுப்பூசி சூழல் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் ஜான் கெங்கசாங் ஒரு உச்சி மாநாட்டில் குறிப்பிட்டார். "நாங்கள் ஒட்டுமொத்தமாக பயத்திலும், நம்பிக்கையற்ற நிலையிலும் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலிருந்து இப்போதைக்கு விரைவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :