கோவிஷீல்டு தடுப்பூசி: இரு டோஸ்களுக்கு நடுவே இடைவெளி 12-16 வாரங்களாக அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு 3 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் என்கிறது வியாழக்கிழமை வெளியான இந்திய அரசின் அறிவிப்பு.
முன்பு இந்த இடைவெளி ஆறு முதல் எட்டு வாரங்களாக இருந்தது.
மத்திய அரசின் கோவிட் நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸை 12 வாரங்களுக்குப் பிறகு 16 வாரங்களுக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.
கோவேக்சின் தடுப்பூசிகளின் டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியில் மாற்றம் ஏதும் இல்லை.
மத்திய அரசின் கோவிட் நடவடிக்கைக் குழுவின் தலைவராக என்.கே. அரோரா இருக்கிறார். இந்தக் குழு கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்கப் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை கோவிட் தடுப்பூசி தொடர்பான தேசிய நிபுணர் குழு மே 12-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஏற்றுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகமும் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை மத்திய அரசு அதிகரிப்பது இது இரண்டாவது தடவை. முன்னதாக மார்ச் மாதத்தில் இந்த இடைவெளியை 28 நாள்கள் என்பதில் இருந்து 6 முதல் 8 வாரங்கள் என்பதாக அதிகரிக்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இப்படி இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்திருப்பதன் மூலம் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு, தடுப்பூசி தட்டுப்பாடான நேரத்தில், இரண்டாவது டோஸ் ஏற்பாடு செய்ய வேண்டிய நெருக்கடி அரசுக்கு குறைந்துள்ளது.
இப்படி இடைவெளியை அதிகரித்திருப்பது நல்ல அறிவியல் முடிவு என்று பாராட்டியிருக்கிறார் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அதர் பூனாவாலா. இதன் மூலம் தடுப்பூசியின் வீரியம், நோயெதிர்ப்பு ஆகிய இரண்டு நிலைகளிலும் பலன் ஏற்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினி

பட மூலாதாரம், Getty Images
நடிகர் ரஜினிகாந்த், இன்று (மே 13, வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டார் என, அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.ஹைதராபாத் நகரத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில், கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக அண்ணாத்த படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு, நேற்று (மே 12, புதன்கிழமை) சென்னை வந்து சேர்ந்தார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.ஹைதராபாத்திலிருந்து, சென்னைக்கு அவர் தனி விமானம் மூலம் வந்தார். ரஜினிகாந்தின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அஹமதுவும், நடிகர் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
- இஸ்ரேல் – பாலத்தீனம்: பல தசாப்தங்களாக தொடரும் சண்டைக்கு என்ன காரணம்?
- தமிழக மருத்துவமனைகளில் காலியாகாத படுக்கைகள்; இணைய சேவையில் குளறுபடியா?
- ஸ்டெர்லைட் ஆலையின் முதல் கட்ட ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது
- கொரோனா சடலங்கள்: தருமபுரி மின் மயானத்தில் மூச்சுத்திணறும் ஊழியர்கள்
- கொரோனாவுக்கு சுய மருத்துவம் - காஜியாபாதில் செயல்படுத்திய தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












