கொரோனா: தமிழக மருத்துவமனைகளில் காலியாகாத படுக்கைகள்; இணைய சேவையில் குளறுபடியா?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மருத்துவமனைகளில் எவ்வளவு ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன?' என்பதை கொரோனா நோயாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் இணையதளம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. `ஆனால், அவை முறையான கால இடைவெளியில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். என்ன நடக்கிறது?

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அவர். தனது முகநூல் பக்கத்தில் 12 ஆம் தேதி இவ்வாறாகப் பதிவிட்டிருந்தார்.

` எங்கள் கல்லூரி தோழி அவர். எங்களது குரூப்பில் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். `எனக்கு ஆக்சிஜன் படுக்கை தேவை.. யாராவது உதவ முடியுமா?' என்று கேட்டிருந்தார். உடனடியாக அழைத்தேன். மறுமுனையில் மூச்சுத் திணறலுடன் அவர் பேசினார்.

`எனக்கு ஆக்சிஜன் படுக்கை தேவை. மூச்சுவிட முடியவில்லை. ஏதாவது உதவி செய்,' என்றார்.

`நிச்சயமாக செய்கிறேன். ஐந்து நிமிடத்திற்குள் மீண்டும் அழைக்கிறேன்' என்றேன். அதன் பின்பு பல மருத்துவமனைகளில் விசாரித்து பின்பு துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையை உறுதிசெய்துவிட்டு அலைபேசியில் அழைத்தேன். ஆனால், வேறு ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையை அவர் உறுதி செய்துவிட்டார்.

`விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக திரும்புவீர்கள்' என வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்த உலகை இன்னும் என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை,' என வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலை எதிர்கொள்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையத்தளத்திலோ, `போதிய அளவு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மார்ச் 2020 ஆம் ஆண்டு 352 மெட்ரிக் டன்னாக இருந்த சேமிப்புத் திறன் தற்போது 1200 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் அதிக விலை கொடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கும் சூழலுக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்,' என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

4 மடங்கு அதிகரித்த சிலிண்டர் விலை

சென்னையில் 4,500 ரூபாய் விலையுள்ள ஆக்சிஜன் சிலிண்டர் 19,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், `பணத்தை நேரடியாகக் கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் விநியோகிக்கப்படும்' என விற்பனையாளர்கள் கண்டிப்புடன் வசூல் செய்கின்றனர். ரெம்டெசிவர் மருந்தைத் தொடர்ந்து சிலிண்டர்களை தேடி அலையும் நிலைக்கு நோயாளிகளின் குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் பல மணிநேரங்கள் காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 12 ஆம் தேதி அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளுடன் 15-க்கும் ஆம்புலன்ஸ்கள் காத்திருந்தன. அந்தளவுக்கு கொரோனாவின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

`` இந்தநிலைக்குக் காரணம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் எவ்வளவு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் காலியாக உள்ளன என்ற விவரம் அரசின் இணையத்தளத்தில் போதிய கால இடைவெளியில் பதிவேற்றம் செய்யப்படாததுதான்," என்கிறார் ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன். இதுதொடர்பாக, தமிழக அரசுக்கும் அவர் சில கோரிக்கைகளை அவர் முன்வைத்திருக்கிறார்.

இரண்டு இணையதளங்கள்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கோவிட் படுக்கைகள் தொடர்பாக இரண்டு இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று, https://stopcorona.tn.gov.in/beds மற்றொன்று https://tncovidbeds.tnega.org இந்த இணையதளங்களில் முதலாவதாக உள்ளது, கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. அடுத்ததாக உள்ள இணையத்தளம் தற்போதுள்ள அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த இணையத்தளங்கள் குறித்து பரவலாக பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

இதனால், `எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன?, `அதில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் எவ்வளவு இருக்கின்றன?' என்ற விவரமே தெரியாமல் நோயாளிகள் பரிதவிக்கின்றனர். மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களும், அரசின் இணையத்தள வசதி குறித்து தெரியாமலேயே, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்து, `படுக்கை வசதி எங்கே இருக்கிறது?' எனக் கேட்கின்றனர். இதனால், ஏற்படும் மூச்சுத் திணறலால் சிகிச்சை பெறும் வாய்ப்பில்லாமலேயே பலரும் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

போனையே எடுப்பதில்லை

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

சுகாதாரத்துறையின் அந்த இணையத்தளத்தில் ஒவ்வொரு மருத்துவமனையும் காலை 8.30 மணியளவில் காலியாக உள்ள படுக்கை வசதிகள் குறித்து பதிவேற்றம் செய்கின்றன. அதன்பிறகு சில மருத்துவமனைகள் மட்டுமே முறையாக பதிவேற்றம் செய்கின்றன. ஆனால், 24 மணிநேரத்துக்குள் படுக்கைகளின் நிலை மாறிக் கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு பேசினாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. பல நேரங்களில் யாரும் போனை எடுப்பதில்லை.

அந்த இணையதளத்துக்குச் சென்று பார்த்தால் சிலர் இரண்டு நாள்களாகப் பதிவேற்றம் செய்யாத சூழல்களையும் பார்க்க முடிகிறது. அவ்வாறில்லாமல் தகவல்களை உடனே பதிவேற்றம் செய்தால், நோயாளிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் காலியானதும் உடனே இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை அரசு கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படியொரு இணையத்தளம் செயல்படுவது குறித்து ஊடகங்களில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்குப் பரவலாகச் சென்று சேரும்.

காலியாகாத ஐ.சி.யு, ஆக்சிஜன் படுக்கைகள்

தற்போதுள்ள மனிதவளத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால், காலியான விவரம் உடனே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதனை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் மருத்துவமனையின் தொலைபேசி எண்களுக்கு நோயாளிகளோ அவர்களது உறவினர்களோ தொடர்பு கொண்டால் உரிய பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அரசு கட்டாயமாக்க வேண்டும்," என்கிறார்.

இதையடுத்து, tncovidbeds.tnega.org இணையத்தளத்தைப் பார்வையிட்டால் மாநிலம் முழுவதும் சாதாரண படுக்கைகள் காலியாக இருப்பதை ஓரளவுக்கு காண முடிகிறது. ஆனால், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளும் ஐ.சி.யூ படுக்கைகளும் பூஜ்ஜியம் என்ற அளவிலேயே பல மருத்துவமனைகள் பதிவேற்றியுள்ளன. அந்தளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதையும் பார்க்க முடிகிறது. அதேபோல், பல மருத்துவமனைகள் காலை 8 மணி, 10 மணி ஆகியவற்றுக்குப் பிறகு பதிவேற்றம் செய்யவில்லை. ஆனால், சில மருத்துவமனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவேற்றம் செய்துள்ளதையும் காண முடிகிறது.

பொது சுகாதாரத்துறையின் பதில் என்ன?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

`காலியாகும் படுக்கைகள் விவரம் தொடர்பாக, பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏன்?' என தமிழக பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள் தொடர்பாக tncovidbeds என்ற இணையத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எந்த மருத்துவமனை தாமதமாகப் பதிவேற்றம் செய்கிறது என்ற புகார் தெரியவந்தால் உடனே அதனை அவர்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

மேலும், எங்கெல்லாம் படுக்கைகள் காலியாக இருக்கிறதோ அதுதொடர்பான விவரங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக, இணையத்தளத்துக்குச் சென்று நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். மருத்துவமனைகளில் உள்ள சூழல்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்," என்கிறார்.

முதல்வரின் வேண்டுகோள்

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிதாகப் பொறுபேற்ற எம்.எல்.ஏக்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில், ` எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்கவேண்டும். தங்கள் தொகுதிகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து கொண்டு வரக் கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்,' எனக் கூறியிருந்தார்.

``முதல்வரின் உத்தரவுக்கு ஏற்ப மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் களமிறங்கி ஆய்வு நடத்தினால் நிலவரம் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :