"தமிழ்நாட்டில் ஊரடங்குக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைகிறது"

பட மூலாதாரம், @PKSekarbabu
(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையை மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு, பொது முடக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். லேசான அறிகுறி தென்பட்டாலும் மக்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று கூறினார்.
ஊரடங்கின் பலனாக, கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அளவு எண்ணிக்கை அளவில் குறையத் தொடங்கியிருப்பதை காண்கிறோம். இது தொடர வேண்டும் என அரசு விரும்புகிறது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆக்சிஜன் உற்பத்தி பணி முடிந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்: கனிமொழி

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் நிறைவு பெற்றவுடன் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடப்படும் என கனிமொழி எம்பி உறுதி அளித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்து நிறுத்த ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டகுழுவினரிடம் பாராளுமன்ற குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொரோனா தொற்று பரவலின் போது ஏற்படும் ஆக்சிஜன் பற்றாகுறையால் பலர் உயிரிழக்கும் சூழ்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்திக்கான நடவடிக்கைகள் அதனை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் ஆக்சிஜன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் தொடர்ந்து இந்த ஆலைக்கு எதிராக குரலெழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. செந்தில்ராஜ் தலைமையில் கனிமொழி எம்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போராட்டக் குழுவினர் தங்களின் கோரிக்கை மனுக்களை கனிமொழி எம்பியிடம் வழங்கினார்கள்.
பின்னர் அவர்களிடம் பேசிய கனிமொழி, "ஆக்சிஜன் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் நிறைவு பெற்றவுடன் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடப்படும்," என உறுதி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகஎம்பி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் அதன் இருப்பு குறித்து கேட்டறிந்த கனிமொழி எம்பி கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்
கன்னியாகுமரியில் தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 4,500 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வந்தடைந்தையடுத்து நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி ஊசி போடுவதற்காக கூடியதால் கொரானா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசிகளை போடுவதற்காக கூட்டம் அலைமோதி வருகிறது.
கடந்த 10 தினங்களாக தடுப்பூசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 4500 தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் மையத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி போட்டிபோட்டுக்கொண்டு ஊசி போட குவிந்ததால் அங்கு சமூக இடைவெளி இல்லாமல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- "நாடு கொரோனாவில் இருந்து மீளுவதே முக்கியம்" - டாக்டர் பட தயாரிப்பாளர்
- தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க புதிய சிகிச்சை நெறிமுறை
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- ஆக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்: இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்
- சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி
- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












