ஆக்சிஜன் சிலிண்டர் உதவி யாருக்கு தேவை? மருத்துவர்கள் விளக்கம்

Oxygen

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்படுவோருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்படும் என்றும் தனி நபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு தேவைப்படும் என்று வாங்கி வைப்பதைத் தவிர்க்கவேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை காட்டும் முக்கியமான அறிகுறியாக மூச்சுத்திணறல் கருதப்படுகிறது. ஒரு சிலர் லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன், தங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் என கருதி, ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிலர், ஆக்சிமீட்டர் என்ற கருவியில் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதனை செய்து, தங்களுக்கு தேவை என தாங்களாகவே முடிவுசெய்வதை கைவிடவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

oxygen

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஆர் ராதாகிருஷ்ணன், தனிநபர்கள் சிலர் தேவையற்ற பதற்றத்தால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியை நாடுகிறார்கள் என்கிறார். தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் விநியோகம் செய்யப்படும் குழுவில் இடம்பெற்றுள்ளார் மருத்துவர் ராதாகிருஷ்ணன்.

''கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தங்களுக்கு வரும்நாட்களில் தேவைப்பட்டால் என்ற சிந்தனையோடு ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டில் வாங்கிவைக்க கூடாது. பலரும் வீடுகளில் ஆக்சிமீட்டர் வைத்திருக்கிறார்கள்.

ஆக்சிமீட்டர் கருவியில் 92 அல்லது 90 என்ற அளவு வந்தால் உடனே தனக்கு ஆக்சிஜன் உதவி தேவை என எண்ணிவிடுகிறார்கள். உண்மையில், மூச்சுதிணறல் சில மணிநேரம் நீடிக்கிறது என்ற சமயத்தில்தான் ஆக்சிஜன் தேவைப்படும்.

"இணை நோய்கள் ஏதுமில்லை மற்றும் லேசான மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது என்ற நிலையில், இயற்கையான முறையில் சுவாசிப்பதைத்தான் நாங்கள் பரிந்துரை செய்வோம்,'' என்கிறார் மருத்துவர் ராதாகிருஷ்ணன்.

யாருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவி தேவைப்படும் என்று கேட்டோம்.

''ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டும்தான் ஆக்சிமீட்டரை கையில் பொருத்திவிட்டு அவ்வப்போது அவர்கள் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வாறு உள்ளது என பரிசோதிப்போம், அவர்களுக்கு சிலிண்டர் பொருத்தி செயற்கை சுவாசம் தருவோம். வீட்டில் ஆக்சிமீட்டர் வைத்திருப்பவர்கள் சோதனை செய்துகொள்ள விரும்பினால், அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து மணிநேரத்திற்கு ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ளவர்களுக்கு, அதாவது உடலில் ஆக்ஸிஜன் செறிவு நிலை (oxygen saturation level) 85 சதவீதத்தை விட குறைந்தால்தான் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும். அதுவும் நீடித்த நேரம் அதே அளவு இருந்தால் அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி தேவை, செயற்கையாக சுவாசம் தேவை. அதுவும் இந்த அளவு இருந்தாலும் கூட, ஒரு சிலர் நல்ல நம்பிக்கையுடன், பதற்றம் இல்லாதவர்களுக்கு பிரச்னை குறைவுதான். அச்சமும், தேவையற்ற பதற்றமும் நோயாளியின் சுவாசத்தை சிக்கல்படுத்தும்,'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

oxygen

பட மூலாதாரம், Getty Images

''அனுபவ ரீதியாக பார்க்கும்போது, இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரும் தங்களுக்கு மூச்சுதிணறல் அதிகரித்துவிடுமோ என்ற பயத்தில் ஆக்சிஜன் உதவி தேவை என மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மருத்துவ உதவி உடனே வேண்டும் என்ற பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது.

அதனை விடுத்து, மூச்சை ஆழமாக உள்ளே இழுப்பது, வெளியேற்றுவது, எளிமையான மூச்சு பயிற்சிகளை செய்யவேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், மூச்சு பிரச்சனை ஏற்படுவது போல தோன்றினால், குப்புறப்படுக்க வேண்டும். இந்த வகையில் படுக்கும்போது, மூச்சை இழுப்பது அதிகரிக்கும், ஒரு சில நிமிடங்கள் இருந்தால் போதும், ஆக்சிஜன் அளவு கூடிவிடும். கொரோனா பாதிப்பு வந்ததும், எதையும் செய்யாமல் ஓய்வெடுக்கவேண்டும் என்பதில்லை. எளிய உடற்பயிற்சிகளை செய்தால், உடலில் சூடு அதிகரிக்கும், மூச்சு சீராகும், நீங்கள் எளிதாக குணமாக முடியும்,''என்கிறார் அவர்.

oxygen

பட மூலாதாரம், Getty Images

மூச்சு திணறல் ஏற்பட்ட பல நோயாளிகளுக்கு எளிதான மூச்சு பயிற்சிகள் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சான்றளிக்கின்றனர்.

கடந்த வாரத்தில் ஆக்சிஜன் உதவி தேவை என எண்ணிய இரண்டு நோயாளிகளுக்கு எளிய மூச்சு பயிற்சி கொடுத்து இயல்பு நிலைக்கு மீட்டுவந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அரசு இயற்கை யோகா மருத்துவர் தீபா சரவணன்.

"கொரோனா நோயாளிகள் அச்சத்தை குறைப்பதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். நாங்கள் நடுத்தர வயதுள்ள ஒரு நோயாளியை மகாராசனம் என்ற ஆசனத்தை செய்யவைத்தோம். முதலில் அவர் ஆக்சிஜன் சிலிண்டர் தனக்கு தேவை என்றார். ஆனால் ஆலோசனை வழங்கி, இந்த ஆசனத்தில் ஒரு சில முறை செய்ததும், அவருக்கு மூச்சு மெதுவாக சீராகியது. மனவலிமையை சோதிக்கும் காலமாக இந்த கொரோனா காலத்தை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளவேண்டும். அச்சம் ஏற்பட்டால் உடலில் பதற்றம் அதிகரிக்கும், அந்த எண்ணம் மேலும் சுவாசத்தை மோசமாக்கும்,''என்கிறார் மருத்துவர் தீபா சரவணன்.

மேலும் மற்றொரு முதிய நோயாளி ஒருவருக்கு லிங்க முத்திரையை பரிந்துரை செய்ததாக கூறுகிறார்

அவர். ''லிங்க முத்திரை என்பது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். நோயாளிக்கு தனது உடலில் தன்னை சரி செய்து கொள்வதற்கான தன்மை உள்ளது என்பதை உணர்த்தும். இந்த முதிய நோயாளிக்கு இணை நோய்கள் இருந்தபோதும், அவருக்கு சி டி ஸ்கேனில் பாதிப்பு என்பது வெறும் 30 சதவீதமாக தான் இருந்தது. அவரது அச்சம் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மகாராசனம், லிங்க முத்திரை ஆகியவற்றை ஐந்து நிமிடங்கள் செய்ததால், அவருக்கு மூச்சு சீரானது,''என்கிறார் மருத்துவர் தீபா சரவணன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :