‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா?

மாஸ்டர் செஃப் அறிவித்த சன் டிவி

பட மூலாதாரம், SunTV, Facebook

    • எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி முடிந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட முடிவடையாத சூழலில் 'அடுத்த சீசன் எப்போது?' என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

சீசன்1 மற்றும் சீசன்2 என இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த சீசன் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் 'குக் வித் கோமாளி'க்கு போட்டியாக உலக அளவில் பிரபலமான 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை தமிழில் விரைவில் ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி.

நிறைய காமெடி, கொஞ்சம் சமையல், சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் பெரும் புகழ் வெளிச்சம் என தமிழில் மக்களுக்கு பிடித்த டாப் ரியாலிட்டி ஷோக்களில் 'குக் வித் கோமாளி'க்கு தற்போது ஒரு தனி இடமிருக்கிறது.

ரம்யா பாண்டியன், அஷ்வின், ஷிவாங்கி, புகழ், பவித்ரா என இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் தற்போது அடுத்தடுத்து பல சினிமா வாய்ப்புகள் கிடைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது 'குக் வித் கோமாளி'யின் இடத்தை 'மாஸ்டர் செஃப்' பிடிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

'மாஸ்டர் செஃப்'?

மாஸ்டர் செஃப், மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் 1990-களில் ஒளிபரப்பாகத் தொடங்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சமையல் கலை நிகழ்ச்சி தான் இந்த 'மாஸ்டர் செஃப்'. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என கிட்டத்தட்ட 40 நாடுகளில் இது ஒளிபரப்பாகி ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியின் கான்செப்ட் என்ன?

போட்டியாளர்கள் சமைப்பது, சமைத்த உணவை உலகின் முன்னணி செஃப்கள் சுவைத்து, பள்ளி ஆசிரியர் போல மதிப்பிடும் சீரியஸான நிகழ்ச்சி இது. பல போட்டியாளர்கள் பங்கேற்று அதில் மிக சிறப்பான உணவுகளை உருவாக்கும், கற்பனைக்கு எட்டாத புதிய சுவைகளையும், மணங்களையும், உட்பொருட்களையும் ஒருங்கிணைந்து வியப்படையச் செய்யும் 12 - 15 பேர் (சீசனுக்கு தகுந்தார் போல) தேர்வு செயப்படுவார்கள். அதில் வல்லவன் எவரோ, அவர் வெற்றி பெறுவார். வெற்றி பெறுபவருக்கு உலகின் முன்னணி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு, பரிசு, புகழ், விளம்பர வாய்ப்புகள் என பலதும் வரும்.

10 பொருத்தமும் பக்காவாக பொருந்தும்

கோமாளி

பட மூலாதாரம், Star Vijay

கண்ணை கட்டிக் கொண்டு உணவை சுவைக்கச் சொல்வது, வாழ்நாளில் ஜிலேபியே சுட்டதில்லை என்பவரை அழைத்து ஜிலேபி பொறிக்கச் சொல்வது, ருமாலி ரொட்டி என்றால் என்னவென்றெ தெரியாத நபரை அழைத்து ரொட்டி போடச் சொல்வது, பிரபலங்களுக்கு உணவு சமைக்கச் சொல்வது, சிம்ளா ஆப்பிள் - காஷ்மீர் பூண்டு - மேற்கு வங்கத்தின் கோந்தராஜ் எலுமிச்சை போன்ற தேர்தெடுத்த சில பொருட்களை வைத்து சமைக்க சொல்வது என ஒவ்வொரு கட்டத்திலும் பரிசோதனைகள் கடினமாகிக் கொண்டே செல்லும். தோற்பவர்கள் வெளியேறுவர்.

அவமானம், கண்ணீர், பெருமிதம், போட்டி, பொறாமை, சண்டை சச்சரவுகள், குறை கூறுவது என ரியாலிட்டி ஷோவுக்குத் தேவையான அனைத்து மசாலாக்களும் தாராளமாகவே இருக்கும். கூடவே உணவுத் துறையை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்லும் படிப்பினைகளும் பாடங்களும் நிறையவே இருக்கும். நல்ல உணவை வெளிப்படையாக பாராட்டுவதும், மோசமான உணவுகளை சமரசமின்றி செய்த தவறை சுட்டிக் காட்டி கடிந்து கொள்வதும் பகிரங்கமாக இருக்கும்.

'மாஸ்டர் செஃப்' இந்தியாவில் 2010ல் இந்தி மொழியில்தான் முதன் முதலில் நடத்தப்பட்டது. இதுவரை ஆறு சீசன்கள் நிறைவடைந்திருக்கின்றன. இதில் முதல் சீசனை இந்தியாவில் புகழ்பெற்ற செஃப்களான குணால் கபூர், அஜய் சோப்ரா ஆகியோருடன் இணைந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தொகுத்து வழங்கினார். கடந்த மார்ச் 2020-ல் நடந்து முடிந்த 6-வது சீசனில் இந்தியாவின் முதல் மிஷலின் செஃப்ஃபான வினித் பாடியா, கரார் காட்டும் ரன்வீர் பிரார், விகாஸ் கன்னா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். ஒடிஸாவைச் சேர்ந்த அபினாஷ் வெற்றி பெற்றார்.

குக் vs கோமாளி:

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு என இருவருமே ’கோமாளி’களோடு இணைந்து நிகழ்ச்சியை கலகலப்பாகினார்கள். அதேபோல, சமையலை ருசி பார்த்து விமர்சனங்கள் வைக்கும் போது அதில் கடுமை இல்லை. ஆனால், 'மாஸ்டர் செஃப்' இதற்கு நேர் எதிர். இரண்டு நிகழ்சிகளுமே எதிரெதிர் திசையில் பயணிப்பவைகள் என்றாலும், இரண்டுமே மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் விஜய்யின் சிரிப்பை மையப்படுத்திய நிகழ்ச்சிக்கு எதிராக, சமையலை சீரியஸாக முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சியை களமிறக்க திட்டமிட்டிருக்கிறது சன் டிவி.

'குக் வித் கோமாளி'யை முந்துமா 'மாஸ்டர் செஃப்'?

மாஸ்டர் செஃப் மிளிருமா என்பதை, அந்நிகழ்ச்சியை சன் டிவி எப்படி வடிவமைக்கிறது என்பதைப் பொருத்து தான் அமையும் எனலாம். 'பிக் பிரதர்' போன்ற ரியாலிட்டி ஷோக்களை, தமிழகத்தில் 'பிக்பாஸ்' என நம் ரசனைக்கு தகுந்தாற் போல சில மாற்றங்களோடு ஒளிபரப்பப்பட்டு சக்கை போடு போட்டதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதேபோல, தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கும் 'மாஸ்டர் செஃப்'பில் சுவாரஸ்யமாக என்ன செய்யவிருக்கிறார்கள், நம் ஊர் சமையலை கையில் எடுக்கிறார்களா அல்லது வெளி மாநில அல்லது வெளிநாட்டு சமையலை கையில் எடுக்கிறார்களா, அதில் என்ன புதுமைகளை புகுத்த இருக்கிறார்கள், எப்படிப்பட்ட போட்டியாளர்களை தேர்வு செய்யவிருக்கிறார்கள், நடுவர்கள் யார் என பல காரணிகள் இதன் வெற்றியைத் தீர்மானிக்கலாம்.

'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு நடப்பது போன்ற புரோமோக்கள் சமீபத்தில் சேனல் தரப்பில் இருந்து வெளியானது. 'நம்ம ஊரு ஹீரோ' நிகழ்ச்சியை தொடர்ந்து சன் டிவியில் 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒளிபரப்பு எப்போது, ரசிகர்கள் என்ன மாதிரியான விஷயங்களை எதிர்ப்பார்க்கலாம் என்பது குறித்து விசாரித்தோம்.

"கொரோனாவின் இரண்டாவது தீவிர அலை காரணமாக நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் வழக்கமான கான்செப்ட் தான் இதிலும். அதில் நம் ஊருக்கு ஏற்றார்போல சில சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கும். நிச்சயம் அது ஒளிபரப்பாகும் போது மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். 'நம்ம ஊரு ஹீரோ' நிகழ்ச்சியில் எப்படி விஜய்சேதுபதியின் வேறொரு முகம் மக்களுக்கு தெரிந்ததோ, அதுபோலவே இந்த நிகழ்ச்சியிலும் விஜய்சேதுபதியை ரசிகர்களுக்கு இன்னமும் பிடிக்கும்" என விவரம் தெரிந்தவர்கள் கூறினார்கள்.

பசியோடு காத்திருக்கும் மனங்களைக் கவருமா மாஸ்டர் செஃப் தமிழ்? பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :