இந்தியா கொரோனா சுழலில் சிக்கிக்கொண்டது எப்படி? படிப்பினை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
டெல்லியில் அல்லது நாட்டில் வேறு எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று திங்கட்கிழமை இந்திய அரசின் உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் தலைநகரில் எந்த இடத்தில் இருந்து கொண்டு இதைச்சொன்னாரோ, அங்கிருந்து சில மைல் தூரத்தில் இருக்கும் பல சிறிய மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆக்சிஜன் தீரப்போகும் நிலையில் இருப்பதான அவசரச்செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.
"குழந்தைகள் இறக்கும் அபாயம் நிலவியதால் நாங்கள் பயத்தில் உறைந்து போனோம்," என்று குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றின் தலைமை மருத்துவர் பிபிசியிடம் கூறினார்.
உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தலையிட்டபின் அந்த மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜன் வந்து சேர்ந்தது.
ஆயினும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
"நாங்கள் ஆக்சிஜனை குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு வருவதில் போக்குவரத்து சிக்கல்களை மட்டுமே எதிர்கொள்கிறோம்" என்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"வழிகாட்டுதல்களின்படி ஆக்ஸிஜனை சிக்கனமான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு" அவர் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தினார். தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது, ஆனால் அது போதுமானதாக இல்லை என்று பிபிசியுடன் பேசிய பல மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
ஆக்ஸிஜனின் பற்றாக்குறை என்பது, பல பிரச்னைகளில் ஒன்று மட்டுமே. ஆனால் அது மத்திய மற்றும் மாநில அரசுகள் தயார் நிலையில் இல்லை என்பதைக்காட்டுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இரண்டாவது அலையின் சேதத்தைத் தடுக்க அல்லது குறைக்க போதுமானதைச் செய்ய இவை தவறிவிட்டன.

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவை….
- ஆக்ஸிஜனின் போதிய சப்ளை இல்லை, அரசு மருத்துவமனையில் படுக்கைகள் போதுமான அளவிற்கு இல்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதமே சுகாதாரத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்தது.
- வரவிருக்கும் 'கோவிட் சுனாமி' குறித்து தாங்கள் அஞ்சுவதாக பல வல்லுநர்கள், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பிபிசியிடம் தெரிவித்தனர்.
- கொரோனா வைரஸின் அதிகம் பரவக்கூடிய திரிபு வகை நாட்டில் வேகமாகப் பரவி வருவதாக, அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் அதிகாரிகளை எச்சரித்தது. ஆனால் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று குழுவின் ஒரு ஆராய்ச்சியாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இருந்தும்கூட, இந்தியா "தொற்றுநோய் இறுதி கட்டத்தில் இருக்கிறோம்" என்று மார்ச் 8 ஆம் தேதி இந்திய சுகாதார அமைச்சர் அறிவித்தார்.
அப்படியென்றால் தவறு எங்கே நடந்தது?
கடந்த ஆண்டு செப்டம்பரில் 90,000 ஆக நாட்டின் தினசரி தொற்று எண்ணிக்கை, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 20 ஆயிரத்திற்கும் கீழே சென்றது. கோவிட் தோற்கடிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். பொது இடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.
விரைவில் மக்கள், கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை கைவிடத்தொடங்கினர். அரசிடமிருந்து வந்த குழப்பமான சிமிஞ்சைகள் ஓரளவு இதற்குக் காரணம் என்று சொல்லலாம்.
மோதி தனது செய்திகளில், முக கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டாலும், ஐந்து மாநிலங்களில் தனது தேர்தல் பிரசாரத்தின்போது முக கவசம் அணியாத பெருந்திரளான மக்களுக்கிடையேதான் அவர் உரையாற்றினார்.
மோதியின் பல அமைச்சர்களும் முக கவசம் அணியாமல் பெரிய பொதுக்கூட்டங்களில் உரையாற்றினர்கள். லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கும்பமேளா என்ற இந்து திருவிழாவை நடத்த அனுமதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
"அவர்கள் பிரசாரம் செய்ததற்கும், கடைப்பிடித்தவற்றிற்கும் இடையே எந்த தொடர்பும் இருக்கவில்லை" என்று பொது கொள்கை மற்றும் சுகாதார அமைப்பு நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா கூறுகிறார்.
"அரசாங்கம் இரண்டாவது அலை வருவதைக் காணவில்லை. வெற்றிக்கொண்டாட்டத்தை காலம் வருவதற்கு மிகவும் முன்பாகவே தொடங்கி விட்டது" என்று பிரபல வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறுகிறார்.
ஆனால், இந்தத்துயரக்கதையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன: இந்த பேரழிவு, இந்தியாவில் பொது சுகாதார அமைப்பிற்கான குறைவான நிதிஒதுக்கீடு மற்றும் புறக்கணிப்பை அம்பலப்படுத்தியுள்ளது.
மருத்துவமனைகளுக்கு வெளியே காணப்பட்ட இதயத்தை கசக்கிப்பிழியும் காட்சிகள் - சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் மக்கள், இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பின் மோசமான உண்மை நிலையைக்காட்டுகிறது.
"இந்தியாவின்'பொது சுகாதார உள்கட்டமைப்பு' எப்போதுமே வலுவற்றதாகவே இருந்துள்ளது. ஆனால் பணக்காரர்களும் நடுத்தர வர்க்க மக்களும் இப்போதுதான் அதை உணர்ந்துள்ளனர்," என்று ஒரு நிபுணர் சொல்கிறார்.
வசதியானவர்கள் தங்கள் சிகிச்சைக்கு எப்போதுமே தனியார் மருத்துவமனைகளை நம்பியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஏழைகள் மருத்துவரின் சந்திப்பு முன்பதிவைப் பெறக் கூட போராடுகிறார்கள்.

சுகாதார காப்பீடு மற்றும் ஏழைகளுக்கான மானிய மருந்துகள் போன்ற சமீபத்திய திட்டங்களும் உதவவில்லை. ஏனெனில் மருத்துவ ஊழியர்கள் அல்லது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திசையில் பல தசாப்தங்களாக ஏறக்குறைய எதுவுமே செய்யப்படவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளாக , தனியார் மற்றும் அரசுத்துறை ஆகிய இரண்டையும் சேர்த்து சுகாதாரம் தொடர்பான இந்தியாவின் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.6% ஆகும். இது ஐந்து பிரிக்ஸ் நாடுகளில் மிகக் குறைந்த சதவீதமாகும்: 2018 ல் பிரேசில் அதிகமாக 9.2%, தென்னாப்பிரிக்கா 8.1%, ரஷ்யா 5.3% மற்றும் சீனா 5%.
வளர்ந்த நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக அதிகமான விகிதத்தை ஆரோக்கியத்திற்காக செலவிடுகின்றன. உதாரணமாக, 2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் செலவு 16.9%, ஜெர்மனி 11.2%. இலங்கை (3.76%), தாய்லாந்து (3.79%) போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை விட அதிகமாக செலவிடுகின்றன.
இந்தியாவில் 10,000 பேருக்கு 10 க்கும் குறைவான மருத்துவர்கள் உள்ளனர். சில மாநிலங்களில் இந்த எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவு.
தயார் நிலை

கடந்த ஆண்டு பல "அதிகாரம் பெற்ற குழுக்கள்" அடுத்த கொரோனா வைரஸ் அலையைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை கண்காணித்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையானது வல்லுநர்களை குழப்பமடையச் செய்துள்ளது.
"முதல் அலை குறைந்துகொண்டிருந்த வேளையில் அவர்கள் இரண்டாவது அலைக்கு தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மிக மோசமான சூழலுக்கு தயார்நிலையில் இருந்திருக்கவேண்டும். அவர்கள் ஆக்சிஜன் மற்றும் ரெமெடிசிவர் மருந்து ஆகியவற்றின் கையிருப்பை கணக்கில்கொண்டு உற்பத்தித் திறனை அதிகரித்திருக்க வேண்டும்," என்று மகாராஷ்டிரா மாநில முன்னாள் சுகாதாரச்செயலர் மகேஷ் ஜகாடே பிபிசியிடம் தெரிவித்தார்.
அதிகரித்துள்ள தேவையை சமாளிக்கத்தேவையான ஆக்ஸிஜனை இந்தியா உற்பத்தி செய்கிறது, போக்குவரத்துதான் பிரச்சனை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இதை முன்பே சரிசெய்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அரசு இப்போது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது மற்றும் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை நிறுத்தியுள்ளது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் இறந்த பின்னரே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
"இதன் விளைவு என்னவென்றால், நோயாளியின் குடும்பத்தினர் கள்ளச்சந்தையில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரைப் பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறார்கள். பின்னர் அதை நிரப்ப பல மணிநேரங்கள் வரிசையில் நிற்கிறார்கள்" என்று டாக்டர் லஹாரியா சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையில் வசதிபடைத்தவர்கள், ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் போன்ற மருந்துகளை வாங்குவதற்கு அதிக தொகையை செலவு செய்கின்றனர்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் "தேவை வறண்டுவிட்டது" என்று ரெம்டெசிவிர் தயாரிக்கும் மருந்து நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறினார். "அரசு ஆர்டர் செய்திருந்தால் நாங்கள் இருப்பு வைத்திருப்போம். எந்த பற்றாக்குறையும் இருந்திருக்காது. இப்போது நாங்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளோம், ஆனால் தேவை கணிசமாக வளர்ந்து விட்டது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு நேர்மாறாக தென் மாநிலமான கேரளா இரண்டாவது அலைக்கு முன்கூட்டியே திட்டமிட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மாநிலத்தில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று மாநில கோவிட் பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் டாக்டர் ஏ. ஃபத்தாஹுதீன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் மற்றும் பிற மருந்துகளின் போதுமான அளவையும் முன்கூட்டியே வாங்கினோம். வரவிருக்கும் வாரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் அந்த அதிவேக உயர்வைக் கையாள்வதற்கான திட்டமும் எங்களிடம் உள்ளது, "என்று அவர் கூறுகிறார்.
"துயரங்களைத்தவிர்ப்பதற்கு" மற்ற மாநிலங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று ஜகாடே கூறுகிறார்.
"கற்றல் என்றால் வேறொருவர் அதைச் செய்துள்ளார், இப்போது நீங்களும் அதைச் செய்யலாம் என்பதாகும், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்" என்று மகாராஷ்டிராவின் முன்னாள் சுகாதார செயலர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் சுகாதாரஅமைப்புகள் வலுவாக இல்லாத கிராமங்களுக்கு இப்போது இரண்டாவது அலை பரவிவருவதால் நம்மிடம் நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது.
தடுப்பு
அதிக தொற்று ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஆபத்தான புதிய உருமாற்றங்களை அறிய வைரஸின் மரபணு தொடரை வரிசைப்படுத்தல் (genome sequencing) என்பது ஒரு முக்கியமான படியாகும், இந்திய SARS-CoV-2 ஜெனோமிக் கன்சோர்டியா (INSACOG) கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. மேலும் இது நாட்டில் 10 ஆய்வகங்களை இதற்கென ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது.
ஆனால் இந்த குழு ஆரம்பத்தில் நிதி பெற சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா வைரஸின் திரிபுகளை மிகவும் தாமதமாகவே பார்க்கத் தொடங்கியது. வரிசைப்படுத்தும் முயற்சிகள் 2021 பிப்ரவரி நடுப்பகுதியில்தான் "சரியாகத் தொடங்கின" என்று வைராலஜிஸ்ட் டாக்டர் ஜமீல் கூறுகிறார்.
இந்த நேரத்தில் மொத்த மாதிரிகளில் 1% க்கும் மேலாக இந்தியா வரிசைப்படுத்துகிறது.
"ஒப்பிடுகையில், இங்கிலாந்து தொற்றுநோயின் உச்சத்தில் 5-6% வரை செய்தது. ஆனால் உடனடியாக அத்தகைய திறனை உருவாக்க முடியாது," என்று அவர் கூறினார்.
இருப்பினும், தடுப்பூசியே இந்தியாவின் முக்கிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
"ஏற்கனவே வலுவற்ற நிலையில் உள்ள பொது சுகாதார அமைப்புமுறையை, சில மாதங்களில் வலுப்படுத்தக்கூடிய வழிமுறை ஏதும் இல்லை என்றே எந்தவொரு பொது சுகாதார நிபுணரும் உங்களுக்குச் சொல்வார்" என்று டெல்லியில் பெரிய தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பெண் பிபிசியிடம் கூறினார்.
"கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் திறன்வாய்ந்த மற்றும் மிகச் சிறந்த மாற்று வழி , மக்களுக்கு சீக்கிரம் தடுப்பூசி போடுவதாகும். இதனால் பெரும்பான்மையானவர்களுக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படாது. எனவே சுகாதார அமைப்பின் மீது அதிக சுமை ஏற்படாது,"என்கிறார் அவர்.
இந்தியா ஆரம்பத்தில் ஜூலை மாதத்திற்குள் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட விரும்பியது. "ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்தத்தேவையான தடுப்பூசிகளை வாங்கி விநியோகம் செய்வது தொடர்பாக அரசு சரியாக திட்டமிடவில்லை," என்று டாக்டர் லஹாரியா கூறுகிறார்.
"கூடவே , போதுமான அளவு தடுப்பூசிகளுக்கான ஏற்பாடுகளை செய்யாமலேயே அரசு எல்லா வயது வந்தோருக்கும் தடுப்பூசியைத் திறந்துள்ளது."என்று அவர் குறிப்பிட்டார்.
1.4 பில்லியன் மக்கள்தொகையில் சுமார் 26 மில்லியன் மக்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 124 மில்லியன் மக்கள் ஒரு டோஸை மட்டுமே பெற்றுள்ளனர். இந்தியா கோடிக்கணக்கான டோஸ்களுக்கான ஆர்டர்களை அளித்துள்ளது. ஆனால் அது உண்மையில் தேவைப்படுவதை விட மிகக் குறைவு.
45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அதாவது சுமார் 440 மில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட மத்திய அரசுக்கு 615 மில்லியன் டோஸ் தேவை. 18 முதல் 44 வயதிற்குள் 622 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போட 1.2 பில்லியன் டோஸ் தேவைப்படுகிறது.
சர்வதேச கடமைகளிலிருந்து பின்வாங்கி தடுப்பூசி ஏற்றுமதியையும் அரசு ரத்து செய்துள்ளது.
தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில், பயலாஜிக்கல்-இ மற்றும் அரசு நடத்தும் ஹாஃப்கைன் கழகம் போன்ற பிற நிறுவனங்களையும் அரசு இணைத்துள்ளது. உற்பத்தியை அதிகரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவிற்கு 609 மில்லியன் டாலர் கடன் ஆதரவை அரசு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா ஊசியை தயாரிக்கிறது. இது இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றும் பொருட்டு அந்த நிதி முன்பே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர் லஹாரியா கூறுகிறார்,
"தடுப்பூசித்திட்டத்தை விரைவுபடுத்தத்தேவையான தடுப்பூசிகள் கிடைக்க பல மாதங்கள் ஆகும். இடைப்பட்டகாலத்தில் மில்லியன் கணக்கானவர்கள் தொடர்ந்து கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பார்கள்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
உலகின் மருந்தகம் என்று அறியப்படும் இந்தியா, இப்போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பது பெரும் முரண்பாடாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இவை அனைத்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான எச்சரிக்கை அழைப்பாக இருக்க வேண்டும். அரசு சுகாதாரத் துறையில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் 'இது நிச்சயமாக நாம் எதிர்த்துப் போராட வேண்டிய கடைசி பெருந்தொற்று அல்ல," என்று டாக்டர் லஹாரியா குறிப்பிடுகிறார்.
"எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தொற்று பற்றி கணிக்கும் மாடல்களின் கணிப்பைக்காட்டிலும் முன்னதாக, அது வரக்கூடும்" என்று அவர் எச்சரிக்கிறார்.
பிற செய்திகள் :
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்
- சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை - புதிய நெருக்கடி
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












