கே.வி.ஆனந்த் மறைவு: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், ஒளிப்பதிவாளர்

பட மூலாதாரம், @ananvenkat, Twitter
பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கி, ஒளிப்பதிவாளராக உயர்ந்து, வெற்றிகரமான இயக்குநராக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்ட கே வி ஆனந்த் இன்று மாரடைப்பால் காலமானார்.
54 வயதான கே வி ஆனந்த், இன்று (ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கியவர், பின் ஒளிப்பதிவின் மீது ஆர்வம் கொண்டு இன்றும் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன், அமரன், திருடா திருடா போன்ற பல முக்கிய தமிழ் சினிமாக்களில் உதவியாளராக பணி புரிந்தார்.
1994-ம் ஆண்டு வெளியான 'தேன்மாவின் கொம்பத்து' என்கிற மலையாள திரைப்படத்தில்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்ற முடியாததால், அவ்வாய்ப்பை கே வி ஆனந்துக்கு பரிந்துரை செய்தார் பி சி ஸ்ரீராம். அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கு தேசிய விருது வென்று தன் திறமையை நிரூபித்தார் ஆனந்த்.
அதன் பிறகு முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல முக்கிய தமிழ் சினிமாக்களில் ஒளிப்பதிவாளராக மிளிர்ந்தார். நாயக், மின்னாரம், புன்ய பூமி நா தேசம் என இந்தி, மலையாளம், தெலுங்கு என மற்ற இந்திய மொழி சினிமா துறையிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
ஸ்ரீகாந்த், கோபிகா, ப்ரித்விராஜ் நடித்த 'கனா கண்டேன்' படம் மூலம் 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராகத் தன் கால் தடத்தைப் பதித்தார். அதன் பிறகு அயன், கோ, மாற்றான், கவண் என பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கே வி ஆனந்தின் மரணத்துக்கு கார்த்திக் சுப்புராஜ், அல்லு அர்ஜுன், சந்தோஷ் சிவன், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், கெளதம் கார்த்திக், என திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலைப்பதிவு செய்து வருகிறார்கள்.
நகைச்சுவை நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன், தீப்பெட்டி கணேசன் என கடந்த சில மாதங்களில் பல முன்னணி திரையுலகினர் காலமாகியுள்ளனர்.
பிற செய்திகள்:
- ரெம்டிசிவிர் அரசியல்: தமிழ்நாட்டுக்கு பாகுபாடு? யாருக்குத் தேவை? எப்படி விநியோகம்?
- தமிழ்நாடு தேர்தல்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் யாருக்கு சாதகம்?
- மாநில தேர்தல் 2021: மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளாவில் புதிய ஆட்சி யார்?
- கொரோனா தடுப்பூசி: கோவிஷீல்டை தொடர்ந்து கோவேக்சின் தடுப்பூசி டோஸ் ரூ. 400 ஆக குறைப்பு
- தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஊரடங்கு நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












