தமிழகத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி தட்டுப்பாட்டால் திணறும் மருத்துவமனைகள் - கள நிலவரம்

பட மூலாதாரம், ARUN SANKAR
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 13 நோயாளிகள் இறந்ததாக வெளியான தகவல்கள், தமிழக மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாற்குறை இல்லை என்று மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், தமிழகத்தின் நிலை என்ன என்பதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆக்சிஜன் தேவையை தமிழகம் சரியாக கையாளுகிறதா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.
கடந்த வாரம் வரை,இந்திய தலைநகர் டெல்லியில் குவியல் குவியலாக இறந்த கொரோனா நோயாளிகளின் சிதைக்கு தீமூட்டும் காட்சிகள் எங்கோ நடந்தவை போல தோன்றின. ஆனால் தற்போது, தமிழகத்தில் சென்னைக்கு வெகு அருகாமையில் உள்ள செங்கல்பட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நிகழந்த மரணங்கள் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகம் மிகவும் கடினமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்றும் அடுத்து வரவுள்ள இரண்டு மாதங்களும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த செய்திகள் எல்லாம், நாம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? நம்மை சுற்றியுள்ளவர்களை பாதிக்காத வகையில் நடந்துகொள்கிறோமா? தமிழக மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் உள்ளனவா என யோசிக்க வைக்கிறது.
இரவு நேரம் எடுக்கப்பட்ட ஒரு வாட்ஸ்ஆப் காணொளியில், ராஜீவ் காந்தி மருத்துவமனையை எட்டுவதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரிசையாக அம்புலன்ஸ் வாகனங்கள் நிற்கின்றன. அடுத்ததாக கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையம் ஒன்றின் வாசலில் 'இன்று தடுப்பூசி இல்லை' என்ற கரும்பலகை வைக்கப்பட்டுள்ள படம் நமக்கு கிடைத்தது.
''நிலைமை கைமீறிவிட்டது''
சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ணற்ற நோயாளிகள் கொரோனா பாசிட்டிவ் என்ற சான்றிதழோடு படுக்கை தரக்கோரி மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள் என அங்குள்ள மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசும்போது, ''தினமும் நீங்கள் மருத்துவ அறிக்கையில் பார்க்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான். புள்ளிவிவரங்களை விடுங்கள். மருத்துவமனைகளில் குவியும் மக்கள் திரளை நேரில் பார்த்தால், நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது என்று உணர்வீர்கள்,''என்கிறார்.
''கோவை மருத்துவமனைகள் - இரண்டாம் அலைக்கு தயாராகவில்லை''

பட மூலாதாரம், ARUN SANKAR
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளை தினமும் பார்வையிட்டு, நோயாளிகளின் தேவையை அதிகாரிகளுடன் பேசி பூர்த்தி செய்ய முயல்கிறார்.
''கோவையில் இரண்டாம் அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 25 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமயத்தில், இச்சூழலை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பலருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் நீடிக்கின்றன. சமீபத்தில், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை வெளியிலேயே படுக்க வைத்த அவலமும் நடந்தது,'' என்கிறார் ரவி.
''அதிக அளவிலான நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையத்திற்குள் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிப்பது சவாலாக மாறியுள்ளது. மருத்துவமனை தூய்மை என்பது கொரோனா தடுப்புக்கு மிகவும் அவசியம். ஆனால் அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். இந்த சிக்கலான காலகட்டத்தை எப்போதும் போல் அணுகக்கூடாது. இதனால் நோயாளிகளின் சுகாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. வடநாட்டில் நடந்தது போன்ற உயிரிழப்புகள் இங்கும் நேரிட அதிக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது,'' என்கிறார் இவர்.


சேலம் மருத்துவமனைக்கு வெளியில் குவியும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா சிகிச்சைக்காக வந்ததால், மருத்துவமனைக்கு வெளியில் அவசர ஊர்தி வாகனத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பல நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியோடு ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் திகைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமை சரியாக ஒருவார காலம் ஆகலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.
சேலம் அரசு மருத்துவமனை டீன் முருகேசன், "அரசு மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளும் தற்போது நிரம்பியுள்ளன. ஆனால் இடைவிடாது நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக நோயாளிகளை ஆம்புலன்ஸில் சிகிச்சையளித்து காக்க வைக்கப்பட்டு, குணமடைந்து வெளியே செல்லும் படுக்கைகளுக்கு தகுந்தவாறு நோயாளிகளை அனுமதித்து வருகிறோம். மேலும் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அது தயாராகி விடும். அப்போது நிலைமையை சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்,'' என்கிறார்.
தருமபுரிக்கும் சேலத்திற்கும் பயணிக்கும் நோயாளிகள்

பட மூலாதாரம், ARUN SANKAR
தருமபுரி மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். ஓரளவுக்கு குணப்படுத்த வாய்ப்புள்ளவர்களை மட்டும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் என்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களை சேலம் பொது மருத்துமனைக்கும், ரங்கராஜன் குமார மங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கிறார்கள் என்றும் நோயாளிகள் கூறுகின்றனர்.
''சேலம் பொது மருத்துவமனையில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். தருமபுரி மாவட்டத்திலிருந்து வருகைத் தருகின்றனர். இதில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பதில் கால தாமதமாகிறது. இதனால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வேண்டி இருந்தது. ஆம்புலன்ஸில் காத்திருந்து பின்னர் சிகிச்சைக்கு இடம் கிடைக்கும்போது உயிரோடு இருப்போமா என்ற வேதனையான நிலையைத்தான் சந்தித்தோம். ஆக்சிஜன் தேவைப்படுவோரில் பத்து பேரில் ஒருவருக்கே சிகிச்சை வழங்குகிறார்கள். இதுவும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம். மேலும் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை நாடியபோது ஆரம்பகட்ட சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்புவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். முழுமையாக குணப்படுத்தாமல் அனுப்பும்போது மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையை நாடும் போது காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது,''என்கிறார்கள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள்.
கிருஷ்ணகிரியில் மருத்துவ மாணவர்களின் பங்கெடுப்பு
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். மருத்துவர்களின் தட்டுப்பாட்டை குறைக்க, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மருத்துவ மாணவர்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
''தற்போதுவரை நிலைமை சமாளிக்கும் நிலையிலேயே இருந்தாலும், வரும் நாள்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நிலைமையை சமாளிக்க முடியாது. அதனால், மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் முதல் கட்ட சிகிச்சை அளிக்கவும், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அதிக கவனம் செலுத்துவார்கள்,'' என்கிறார்கள் அதிகாரிகள்.
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்ற அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்.
''கடந்த 27ஆம் தேதி எனது உறவினர் ஒருவர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்ப்பதற்காக சென்றேன். அங்கு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. கொரோனா நோயாளிகள் தங்கும் அறையில் 20 படுக்கைகள் இருந்தால் அதில் பத்து படுகையில் மட்டுமே ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் தங்கியுள்ள பகுதிகளில் மின் விசிறிகள் சரியாக இயங்கவில்லை. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை அவர்களே சென்று பெற்று வருகின்றனர். அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தங்களது பணிகளை சரியாக செய்து வந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை,'' என்கிறார் ஜெயச்சந்திரன்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் உறுதியளிக்கிறார்கள். ஆனால் ஜெயச்சந்திரன் போன்றவர்கள், நேரடி அனுபவம் மட்டும்தான் உண்மையை உணர்த்தும் என்கிறார்கள்.
மதுரை, திருநெல்வேலியில் நீடிக்கும் சிக்கல்

பட மூலாதாரம், ARUN SANKAR
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பற்றியும் ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் மாநில சுகாதாரத்துறைக்கு எடுத்துரைத்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
''மதுரையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் 10 நாட்களில் நிலைமை கைமீறி விடும்,'' என அவர் ட்விட்டர் பதிவிட்டதோடு கேரளாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவருவதற்கு முயற்சியும் மேற்கொண்டார்.
ரெம்டெசிவர் மருந்தை பலரும் தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதால், அதனை வாங்குவதற்கு தமிழகம் முழுவதும் கடும் சிக்கல்களை மக்கள் சந்திக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருமளவு அதிகரிப்பதால், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்கப்படுகிறது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
ரெம்டெசிவர் மருந்தை விநியோகம் செய்ய நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி மையம் அமைக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும்போது, அந்த மருத்துவமனை நிர்வாகம் நோயாளியின் குடும்பத்தார் ரெம்டெசிவர் மருந்தை வாங்கிவரவேண்டும் என்றும் ஒரு சில மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துடன் வந்தால்தான் சிகிச்சை என்றும் தெரிவிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இராமநாதபுரத்தின் நிலைமை
இராமநாதபுரம் மாவட்டத்தில், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகளும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 200 படுக்ககைளும், முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 200 படுக்ககைகளும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 படுக்கைகள் என மொத்தம் 1,500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு அடுத்துவரும் ஒரு வாரத்திற்குள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 1000 படுக்கை கொண்ட வசதியை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அதில் 800 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளுடன் அமையும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
(சென்னை, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிபிசி பங்கேற்பு செய்தியாளர்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில் இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.)
பிற செய்திகள் :
- 78,000 ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- இந்தியா, இலங்கை குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை
- ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் பலியா? செங்கல்பட்டில் என்ன நடந்தது?
- ஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












