கொரோனா வைரஸ்: கள்ளச் சந்தையில் ரெம்டெசிவீர் - தீர்வு தருமா தமிழக அரசின் முடிவு? #CORONA

ரெம்டெசிவிர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவீர் மருந்துக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. `மருந்து விநியோகஸ்தர்களை கண்காணித்தால் மட்டுமே விவகாரம் முடிவுக்கு வரும்,' என்கின்றனர் மருத்துவர்கள். என்ன நடக்கிறது?

மருந்தின் விலை ரூ.40,000

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 வார காலங்களில் மட்டும் தமிழகத்தில் 1.70 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பல இடங்களில் நோயாளிகளுக்குப் படுக்கைகளே இல்லை என்ற சூழலே காணப்படுகிறது.

CORONA

பட மூலாதாரம், SOPA IMAGES

இதுதவிர, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு என கொரோனா நோயாளிகளை அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அதேநேரம், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுவோருக்கு ரெம்டெசிவீர் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. வைரஸை அழிப்பதில் இந்த மருந்து பெரும் பங்காற்றி வருவதால், நோயின் தீவிரத்தைப் பொறுத்து இந்த மருந்து வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நான்காயிரம் ரூபாய் வரையில் விலைபோன ரெம்டெசிவிர் மருந்தின் தற்போதைய விலை 40 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

ரெம்டெசிவீரின் பலன்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும், `ரெம்டெசிவீர் மருந்தை வாங்கி வாருங்கள்' என நோயாளியின் உறவினர்களை அலைக்கழிக்கின்றனர்.

பல இடங்களில் அலைந்து திரிந்தாலும் இந்த மருந்து அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அதேநேரம், நோயாளியின் வசதி வாய்ப்பைப் பொறுத்து, இந்த மருந்து கள்ளச் சந்தையில் மிக எளிதாகக் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

`` ரெம்டெசிவீர் என்பது கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து கிடையாது. இது ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளது. பொதுவாக, இந்த மருந்தை வேறு சில வைரஸ்களை அழிப்பதற்குப் பயன்படுத்தி வந்தனர். கொரோனா முதல் அலையின்போது ரெம்டெசிவீரை சில நோயாளிகளுக்குக் கொடுத்தபோது அதிக பலன் கிடைத்தது. தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் நடத்திய அவசர ஆராய்ச்சியில், `ரெம்டெசிவீர் மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளதாகக் கூற முடியாது,' என தெரிவித்தது. அதை வழிமொழிந்து ஐ.சி.எம்.ஆரும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், நமக்கு ரெம்டெசிவீர் நல்ல பலன்களைக் கொடுத்தது," என்கிறார் மருத்துவர் சாந்தி. இவர் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக இருக்கிறார்.

5 நாளில் தீர்வு!

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில விவரங்களைப் பட்டியலிட்டார்.

``கொரோனா அறிகுறியே இல்லாமல் இருப்பவர்களுக்கும் லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் ரெம்டெசிவீர் மருந்து தேவையில்லை. ஆனால், தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு தொடக்க நிலையில் இந்த மருந்து அதிக பலன்களைக் கொடுக்கும். இந்த மருந்தை நோயாளிகளுக்கு 5 நாள்கள் கொடுக்க வேண்டும். முதல் நாள் 200 எம்.ஜி அளவும் அடுத்தநாள் 100 எம்.ஜி என்ற அளவில் நாளொன்றுக்கு ஒருவேளை மட்டும் மருந்து கொடுக்க வேண்டும். இதனால் தீவிர கொரோனாவாக மாறாமல், உயிரிழப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது," என்கிறார்.

7 இடங்களில் உற்பத்தி!

மேலும், ``முதல் அலையின் முடிவில்தான் நமக்கு ரெம்டெசிவீர் மருந்து தொடர்பான அனுபவம் கிடைத்தது. ஆனால், தமிழ்நாட்டில் தொடக்க காலத்தில் இருந்தே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இரண்டாம் அலை தீவிரமடைந்த பிறகு, `இந்த மருந்தால் பலன் இருக்கிறது,'' என தெரிந்தவுடன் பதுக்கல்கள் தொடங்கிவிட்டன. இந்தியாவில் 7 இடங்களில்தான் ரெம்டெசிவீர் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் ஒன்றுகூட தமிழ்நாட்டில் இல்லை. மருந்தின் தேவை அதிகரித்ததால் உற்பத்தி செய்கிறவர்களும் இடைத்தரகர்களும் பதுக்கல் வேலைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தொடர்ந்து ஏற்றுமதியும் நடந்து வந்தது. அண்மையில் மத்திய அரசு ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.

REMDESIVIR

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோப்புப்படம்

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் இந்த மருந்தை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறுகின்றனர். ஆக்ஸிஜன் தேவைக்கு O2 மையம் வைத்ததுபோல, ரெம்டெசிவீர் மருந்துக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். பதுக்கல்களைத் தடுக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டம், கொள்ளை நோய் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மருந்து உற்பத்தி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தலாம். இந்த மருந்துகளை தனியார் விற்காமல் அம்மா மருந்தகம் உள்பட அரசின் மருந்து விற்பனையங்கள் மூலம் விற்பதற்கு ஏற்பாடு செய்தால் பதுக்கலைத் தடுக்க முடியும்" என்கிறார்.

விலையை நிர்ணயித்த மத்திய அரசு!

``கொரோனா முதல் அலையின்போது ஒரு டோஸின் விலை 5,000 ரூபாயாக இருந்தது. முதல் அலை முடிந்ததும் இதன் விலை வெகுவாக குறைந்தது. ஜைடஸ் கெடிலா (zydus cadila)என்ற நிறுவனம் 899 ரூபாய்க்கு விற்பனை செய்தது. இரண்டாவது அலை தொடங்கியதும் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கேற்ப மத்திய அரசும் கடந்த 17 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், 3950 என்ற தொகைக்கு விற்ற மருந்தை 2,450 என்ற விலையிலும் 5,400 என்ற விலைக்கு விற்ற கம்பெனிகள் 2,700 என்ற விலையிலும் விற்பதற்கு அனுமதித்தது.

அதாவது, 899 ரூபாய்க்கு விற்க வேண்டிய மருந்துக்கு மத்திய அரசே அதிக விலையை நிர்ணயித்தது. இவையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டும். இதையே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செய்திருந்தால் 899 ரூபாய்க்குக் கொடுக்க முடியும். பதுக்கல்களும் தட்டுப்பாடும் குறையும். தனியார் நிறுவனங்களுக்கு கட்டாய உரிமம் கொடுத்து மத்திய அரசால் தயாரிக்க முடியும். அதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ளது. தற்போது கள்ளச் சந்தையில் 13,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரையில் ரெம்டெசிவீர் மருந்து விலை போகிறது. இந்தப் பணத்தைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கே மருந்து கிடைக்கிறது' என்கிறார் அரசு மருத்துவர் ஒருவர்.

அரசே ஏற்று நடத்தலாம்!

`செயற்கை தட்டுப்பாடு ஏன்?' என தமிழக பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``பேரிடர் காலங்களில் தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்குச் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம், எது நடந்தாலும் லாபம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக வைத்துச் செயல்படக் கூடிய அபாயகரமான மனிதர்களும் இருக்கிறார்கள். எந்தப் பொருளுக்குத் தேவை இருக்கிறதோ, அதற்கேற்ப பதுக்குவார்கள். சூரத் மாநகரில் பிளேக் வந்தபோது, டாக்ஸி சைக்லின் மாத்திரையை பதுக்கி வைக்கும் சம்பவங்களும் நடந்தன.

தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால், ஆக்ஸிஜன் கான்சன்ரேட்டர் இயந்திரம், ஆக்ஸிமீட்டர், ரெம்டெசிவீர் மருந்து ஆகியவற்றைப் பதுக்குவது தொடர்கிறது. மருந்து கம்பெனிகளிடம் இருந்து விநியோகஸ்தர்களுக்கு மருந்து கொடுக்கப்படுவதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டுத்துறையும், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாகக் கொடுக்கலாம். அந்த நிறுவனத்தை அரசே கைப்பற்றி நடத்தலாம்," என்கிறார்.

பதுக்கலைக் குறைக்கும் வழி!

கொரோனா

பட மூலாதாரம், REMDESIVIR

தொடர்ந்து பேசுகையில், ``மருந்து நிறுவனங்களை விட விநியோகஸ்தர்களால்தான் பிரச்னை ஏற்படுகிறது. இதில் மருந்துக் கம்பெனிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. தற்போது பவுடர் வடிவில் ரெம்டெசிவீர் மருந்து வருகிறது. இதையே திரவ வடிவத்தில் தயாரிக்குமாறு மருந்துக் கம்பெனிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒரு வாரத்தில் ஒரு லட்சம் டோஸ் பவுடர் வடிவில் மருந்து தயாரிக்கிறார்கள் என்றால் திரவ வடிவில் 5 லட்சம் டோஸ்களை தயாரிக்க முடியும். அதன் காலாவதி காலம் குறைவாக இருப்பதால் திரவ வடிவத்தில் தயாரிப்பதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

REMDESIVIR

பட மூலாதாரம், HETERO

தற்போது கொரோனா காலம் என்பதால் 50 சதவிகிதம் என்ற அளவுக்கு இரண்டையும் தயாரிக்கலாம். கொரோனா இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது அலை வரலாம். அதனால் திரவ வடிவில் தயாரிப்பதால் எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. தயாரிப்பு விலையைவிட அதிக விலைக்கு விற்பவர்களின் மீது கைது நடவடிக்கையை துரிதப்படுத்துவது, உற்பத்தியை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலமே பதுக்கலைத் தடுக்க முடியும்," என்கிறார்.

ரூ.1,568-க்கு ரெம்டெசிவீர்!

இறுதியாக, ரெம்டெசிவீர் பதுக்கப்படுவது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின்கீழ் இந்த விவகாரம் வருகிறது. அவர்கள் இதனை முழுமையாகக் கண்காணித்து வருகிறார்கள்" என்றார்.

மாநிலம் முழுவதும் ரெம்டெசிவீர் தட்டுப்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, `கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் செயல்படும்' என அரசு அறிவித்துள்ளது. `இந்த மையத்துக்கு நோயாளிகளின் விவரம் அடங்கிய குறிப்பைக் கொண்டு சென்றால் ரூ.1,568 என்ற விலையில் ரெம்டெசிவீர் மருந்து கிடைக்கும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை நோயாளிகளின் குடும்பத்தினர் பெரிதும் வரவேற்கின்றனர். இதன்மூலம் பதுக்கல்கள் குறைகிறதா எனப் பார்ப்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: