கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் தற்போதைய நிலை என்ன?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில், வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தன் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 1,300 பேருக்கு மேல் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்திய சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா இதுவரை 12.7 கோடி டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் தொடங்கிய இந்தியாவின் கொரோனா தடுப்பூசித் திட்டம், தற்போது சுணங்கத் தொடங்கி இருக்கிறது. பல மாநிலங்கள் தடுப்பூசியைச் செலுத்தப் போதுமான மருந்து டோஸ் இல்லை எனக் கூறி வரும் இந்த நேரத்தில், இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் இருக்கும் 18 - 45 வயது வரம்புக்குள் கொரோனா தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறது அரசு.

கொரோனா பெரும்தொற்று வந்ததிலிருந்து, இந்தியாவில் 1.5 கோடி பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1.8 லட்சம் பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்குப் பிறகு உலகிலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசித் திட்டம் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது?

10.9 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். 1.7 கோடி பேர் முழுமையாக இரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.கொரோனா அதிகமாக இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வரும் ஜூலை மாதத்துக்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தும் இந்தியாவின் இலக்கை அடைவது சிரமமே என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுகாதாரப் பணியாளர் ஒருவர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட முதல் நபரானார்.

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தடுப்பூசியைப் பெறுபவர்களின் வயது வரம்பு மெல்ல விரிவாக்கப்பட்டது. வரும் மே 01-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்களாவார்கள்.

இதுவரை கர்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம், உலகிலேயே அதிவேகமாக 10 கோடி டோஸ் தடுப்பு மருந்தைக் கொடுத்த நாடு இந்தியா தான் என அறிவித்துக் கொண்டது மத்திய அரசு.

இந்தியா 10 கோடி டோஸ் தடுப்பூசியை 85 நாட்களில் மக்களுக்கு செலுத்திவிட்டது. அமெரிக்கா 10 கோடி டோஸ் மருந்தைச் செலுத்த 89 நாட்களையும், சீனா 102 நாட்களையும் எடுத்துக் கொண்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது.

ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தில் தடை ஏற்பட்டது. எனவே இரண்டாவது டோஸ் மருந்தை செலுத்திக் கொள்வது ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனீகா தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் என்கிற இந்திய நிறுவனம் தயாரித்த கோவேக்சின் என இந்தியா தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தி வருகிறது.

இரு தடுப்பூசிகளுமே கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தை முன்னிட்டு அனுமதியளிக்கப்பட்டவைகள் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த ஏப்ரல் மாதத்தில், ரஷ்யாவின் ஸ்புட்நிக் V என்கிற கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

மற்ற பல தடுப்பூசிகளும் பலகட்ட சோதனைகளில் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் கொரோனா தடுப்பூசித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை விதித்திருக்கிறது இந்தியா.

ஆனால் அம்மருந்தைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவோ, தங்கள் உற்பத்தி ஆலைகள் மீது கூடுதல் அழுத்தம் இருப்பதாகவும், அதோடு தங்களால் எல்லா இந்தியர்களுக்கும் தேவையான கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க போதுமான அளவுக்கு உற்பத்தி இல்லை எனவும் கூறியுள்ளது. தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு, முன்பணமாக 4,500 கோடி ரூபாயை பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்டியூட்டுக்கு வழங்கி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பரவும் பகுதிகளிலும், சட்டமன்றத் தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.“நாள் ஒன்றுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு பதிலாக, 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும்” என பிபிசியிடம் கூறினார் மிசிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் புள்ளியியல் நிபுணர் மற்றும் முனைவர் ப்ரமார் முகர்ஜி.

“இந்தியாவில் கொரோனா பரவல் குறைவாக இருந்த போது, தடுப்பூசித் திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் விரக்தி உண்டு” என்கிறார் முனைவர் ப்ரமார் முகர்ஜி.

இத்தனை பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா எப்படி நிர்வகிக்கிறது?

கடந்த பல தசாப்தங்களாக இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை நடத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்பிணிப் பெண்கள் உட்பட பல கோடி பேருக்கு பல நோய்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இந்தியா கொரோன பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என நிபுணர்கள் கருதினார்கள்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கிராம புறத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏழை மக்கள் மத்தியில் கொரோன தடுப்பூசி தொடர்பான போதுமான விழிப்புணர்வு இல்லாதது போன்ற விஷயங்களால் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பல ஏழை மக்களுக்கு தங்கள் பெயரை எப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பதிவு செய்து கொள்வது, எப்படி இலவசமாக கொரோனா தடுப்பூசியைப் பெறுவது போன்ற விவரங்கள் தெரியவில்லை.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்கள் தங்களுக்கான தடுப்பூசியை இணையத்திலேயே பதிவு செய்து, தடுப்பூசி மையத்துக்குச் சென்று செலுத்திக் கொள்லலாம். தடுப்பூசி மையங்களிலேயே தங்களை பெயரையும் பதிவு செய்து கொள்ளலாம் என்கிற விவரங்கள் மக்கள் மத்தியில் பரவலாக சென்று சேரவில்லை.

யார் தடுப்பூசிக்கு பணம் செலுத்துகிறார்கள்?

தடுப்பூசி செலுத்திக் கொள்வது என்பது முழுக்க முழுக்க தாங்களாகவே முன் வந்து செலுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று.

அரசு மருத்துவமனை மற்றும் க்ளீனிக்குகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 250 ரூபாயும் வசூலிக்கிறார்கள்.ஏப்ரல் 11-ம் தேதி முதல், பணம் செலுத்தி கொரோனா தடுப்பூசியைப் பெறும் வசதியை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொண்டு வந்தது.பொது சுகாதார மையங்கள், க்ளீனிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசியைச் வழங்கும் திட்டத்துக்கு அரசு 5 பில்லியன் அமெரிக்க டாலரைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு ஏதாவது எதிர்வினைகள் ஏற்பட்டு இருக்கின்றனவா?

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் ஏற்படும் எதிர்வினைகளைப் பதிவு செய்ய, இந்தியாவில் 34 ஆண்டு பழமையான கண்காணிப்புத் திட்டம் ஒன்று இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் ஏற்படும் எதிர்வினைகளை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை எனில், அது தடுப்பூசி மீதான பயத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் 18,904 எதிர்வினை சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. இதில் பெரும்பாலானவைகள் தலை சுற்றல், காய்ச்சல், வலி, மனக் கவலை போன்றவைகளே எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதில் அனைத்து நோயாளிகளும் உடல் நலம் தேறிவிட்டதாக அரசு கூறுகிறது.இந்த கண்காணிப்புத் திட்டம், கடுமையான எதிர்வினைகள் ஏற்பட்ட 617 நபர்களை ஆராய்ந்தது. இதில் மார்ச் வரை மரணித்த 180 பேரும் அடக்கம் என்கிறது அறிக்கைகள்.

இறந்தவர்களுக்கு ஏற்கனவே, இருதயக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் இருந்ததகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: