கொரோனா தடுப்பூசிகள்: "பின்விளைவு ஆதாரம் இதுவரை இல்லை"

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில நாட்களாக கோவிட் - 19 தடுப்பூசிகள் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கு பின்விளைவுகள் இருக்குமா, ரத்தம் உறையுமா என்பது குறித்தெல்லாம் விரிவாக விவாதிக்கப்படுகிறது. இந்த சந்தேகங்கள் குறித்து தடுப்பூசி நிபுணரான டாக்டர் சேகரிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். அந்தப் பேட்டியிலிருந்து:

கே. கோவிட் - 19 நோயைத் தடுப்பதில் தற்போது இந்தியாவில் கிடைக்கும் கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் எந்த அளவுக்குத் திறன் வாய்ந்தவை?

ப. இரண்டுமே கிட்டத்தட்ட சமமான அளவில் திறன்கொண்டவைதான். தற்போதுவரை கிடைத்துள்ள ஆய்வு முடிவுகளின்படி கோவிஷீல்ட் 70 சதவீத திறனும் கோவாக்ஸின் 80 சதவீத திறன் உடையது. தரவுகளின்படி இரண்டுமே பாதுகாப்பானவை, திறன் மிக்கவை.

கே. இரண்டு முறை இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொணடால் 70 சதவீதம், 80 சதவீதம் என பாதுகாப்பு கிடைக்கும்போது, மூன்று முறை போட்டுக்கொண்டால் முழுமையான பாதுகாப்பு கிடைக்குமா?

ப. இரண்டு தடுப்பூசிகள் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும். முதல் தடுப்பூசி என்பது sensitize செய்வது. இரண்டாவது தடுப்பூசி booster. இந்த booster கொடுக்கும்போதுதான் `தடுப்பு சக்தி' சரியான அளவில் இருக்கும். ஆகவே இரண்டு தடுப்பூசிகளே போதும். இந்த இரண்டு தடுப்பூசிகளை அளிக்கவே உலக அளவில் பெரும் தேவை நிலவுகிறது. தேவைக்கேற்ற உற்பத்தி இல்லை. இரண்டுக்கு மேல் தடுப்பூசி கொடுக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

கே. இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா என்பது குறித்து பொது மக்களிடம் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. இந்த ஊசிகளின் பாதுகாப்புத் தன்மை எந்த அளவுக்கு உறுதிசெய்யப்படுகிறது?

ப. இந்த இரண்டு தடுப்பூசிகளுக்குமே 'க்ளினிக்கல் ட்ரையல்' செய்யப்பட்டிருக்கிறது. அந்த சோதனைகளில் இருந்து கிடைக்கக் கூடிய முடிவுகள் நல்ல முறையில் இருக்கின்றன. எல்லா தடுப்பூசிகளுக்கும் பின்விளைவுகள் இருக்கும். வலி இருக்கலாம். ஊசி போட்ட இடத்தில் சிவப்பாகலாம். சிலருக்கு காய்ச்சல் வரலாம். சிலருக்கு களைப்பு ஏற்படும். இதுபோன்ற பின்விளைவுகள் எல்லா தடுப்புசிகளுக்கும் இருக்கும். அது போன்ற சிறு சிறு பக்கவிளைவுகள்தான் இந்த ஊசிகளுக்கும் ஏற்படும். பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இந்த இரண்டு ஊசிகளுமே பாதுகாப்பானவைதான்.

கே. இரண்டு தடுப்பூசிகளும் செயல்படும் விதத்தில் வேறுபாடு இருக்கிறதா?

ப. கண்டிப்பாக. ஒன்று Viral Vector அடிப்படையிலானது. கோவிட் வைரசின் மேல் பகுதியில் சில முள் போன்ற புரோட்டீன்கள் (spike portiens) இருக்கும். இந்த முள் போன்ற பகுதிகளின் மூலமாகத்தான் இது செல்களைத் தொற்றும். ஒரு செல்லைத் தொற்றிய பிறகு, அங்கு பல்கிப் பெருகும். இப்படி செல்லுக்குள் நுழைய இந்த முள் போன்ற புரோட்டீன் மிக முக்கியம். கோவிஷீல்டைப் பொறுத்தவரை, இந்த முள் போன்ற புரோட்டீனுக்கான மரபணுவைப் பிரித்தெடுத்து, அதனை சிம்பன்ஸிகளில் காணப்படும் வைரஸ்களில் செலுத்தி, அந்த வைரஸ் நம் உடலில் செலுத்தப்படுகிறது. இந்த வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது.

இந்த வைரஸ் உள்ளே சென்று இந்த முள் போன்ற புரொட்டீனுக்கான Antigenஐ உற்பத்தி செய்து செல்லின் மேற்புறமாக வைக்கும். இதனை Gene Manipulation முறை என்பார்கள். இது மிகவும் புதிய முறை.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

மற்றொன்று பாரம்பரியமான முறை. அதாவது செயலிழக்கச் செய்யப்பட்ட வைரசை உடலில் செலுத்துவது. ரேபிஸ் தடுப்பூசி, ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து போன்றவை இந்த முறையில் தயாரிக்கப்படுபவைதான். இதற்கு, அந்த வைரஸ் வளர்த்தெடுக்கப்பட்டு, பிறகு செயலிழக்கச் செய்யப்படும். beta-propiolactone என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்யப்படும். ஆனால், உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய antigen அதன் மீது இருக்கும். இதன் மூலம் நோய் உருவாவது தடுக்கப்படும். இந்த முறையில்தான் கோவாக்ஸின் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கே. பல்வேறு விதமான (strains) கொரோனா கிருமிகள் பரவுவதாக தகவல்கள் வருகின்றன. இந்தத் தடுப்பூசிகள் எல்லாவிதமான ஸ்ட்ரெய்ன்ஸையும் தடுக்கக்கூடியவையா?

ப. இப்போதுதான் நாம் பல்வேறு விதமான வைரஸ்கள் குறித்துப் பார்க்கிறோம். உதாரணமாக இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சலை எடுத்துக்கொள்வோம். இந்தக் காய்ச்சலைத் தடுக்க நாம் எந்தத் தடுப்பூசியும் போட்டுக்கொள்வதில்லை. ஆனால், மேலை நாடுகளில் பருவம் சார்ந்த இன்ஃப்ளூயன்சாவைத் தடுக்க தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்கிறார்கள். அந்த வைரஸ் கண்டிப்பாக உருமாற்றம் அடையும். ஆர்என்ஏ அடிப்படையிலான எல்லா வைரசுமே உருமாற்றம் அடையும். ஆனால், எல்லா மாற்றங்களுமே பாதிப்பை ஏற்படுத்தும் என அர்த்தமில்லை.

கோவிட் வைரசைப் பொறுத்தவரை, பிரிட்டன் வகை, பிரெஸில் வகை, தென்னாப்பிரிக்க வகை, இப்போது இந்தியாவில் இரண்டு முறை மாற்றமடைந்த வகை என்றெல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த எல்லா வகையிலும் ஒரே தடுப்பு மருந்து தடுக்குமா என்பது குறித்த தகவல்கள் நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் தகவல்களைப் பொறுத்தவரை, இந்த மாற்றங்களால், தடுப்பூசி செயல்படும் விதத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பான தகவல்கள், தரவுகள் தொடர்ந்து வரவேண்டும். அப்போதுதான் முழுமையாக சொல்ல முடியும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

கே. இந்தத் தடுப்பூசிகளால் நீண்ட கால பின்விளைவுகளுக்கு வாய்ப்பிருக்கிறதா? அல்லது நீண்ட காலம் கழித்து பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

ப. நீண்ட கால பின்விளைவுகள் குறித்து உறுதியாகச் சொல்வதற்கு நம்மிடம் தரவுகள் கிடையாது. இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, உடனடியாக புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. ஆனால், குறைந்த காலத்தில் கிடைத்த தரவுகளை வைத்துப்பார்க்கும்போது, இதனால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

கே. இணை நோய்கள், குறிப்பாக இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள் கொண்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா?

ப. தாராளமாக இந்த ஊசிகளைப் போட்டுக்கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்கள் இந்த தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்நோய் ஏற்பட்டால் மரணத்திற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த ஊசி பாதுகாப்பானதுதான்.

கே. சில தடுப்பூசி வகைகள், ரத்த உறைதலை உருவாக்கும் வாய்ப்பு உண்டு எனச் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்?

ப. அப்படி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. கோவிஷீல்டும் கோவாக்ஸினும் உலகம் முழுவதும் பல கோடிப் பேருக்குப் போடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 11 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதில் 9 கோடிக்கும் மேல் கோவிஷீல்ட் தடுப்பூசிதான் போடப்பட்டிருக்கிறது.

இந்த ஊசியால் ரத்த உறைவு ஏற்பட்டு இறந்துபோகும் அளவு என்பது மிக, மிகக் குறைவு. இந்த ஊசியால்தான் இப்படி நேர்ந்தது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. மேலை நாடுகளிலும்கூட அதற்கு சரியான ஆதாரம் ஏதும் இல்லை. இப்படி சரியான ஆதாரமில்லாத, ஒரு இடரை (risk) மனதில்வைத்து, இதிலிருந்து கிடைக்கக்கூடிய பெரும் பலன்களை விட்டுவிடக்கூடாது. இந்த தடுப்பூசிகள் பல கோடிப் பேரைக் காப்பாற்றக்கூடியவை.

கே. தடுப்பூசி போட்டு சில மணி நேரத்தில் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்படும்போது, பிரேதப் பரிசோதனை செய்து தகுந்த காரணத்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமா?

ப. ஒருவரது மரணத்திற்கான காரணத்தை பிரேதப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும். அப்படி பிரேத பரிசோதனை செய்தால்தான் மரணத்தின் காரணம் தெரியும் என்றால் கண்டிப்பாக செய்திருப்பார்கள். விவேக்கின் மரணத்தைப் பொறுத்தவரை, சுகாதாரத்துறை செயலரே, தடுப்பூசி காரணமில்லை என்று சொல்லி விட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் அதையே சொன்னார். இவர்களுக்கு சந்தேகம் எழுந்திருந்தால், நிச்சயமாக பிரேதப் பரிசோதனை செய்திருப்பார்கள். விவேக்கின் மரணம் நிச்சயம் வருத்தத்திற்கு உரியது. ஆனால், அவருடைய மரணத்திற்கும் இந்தத் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

காணொளிக் குறிப்பு, இந்திய வகை கொரோனா - விஞ்ஞானிகளை பதற்றத்தில் வைக்கும் வைரஸ் பரவல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: