கொரோனா இரண்டாம் அலையால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த வாரம் சென்னையை சேர்ந்த 10 வயது தர்ஷனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தலைவலி ஏற்பட்டது. விளையாட தர்ஷன் போகவில்லை. மிகவும் சோர்வாக காணப்பட்டான். அவனது பெற்றோர் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தபடியே குணமாகும் என எண்ணினார்கள்.
ஆனால் தர்ஷனின் தந்தை குமாருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே, குழந்தை, தாய், தந்தை என மூவரும் கொரோனா சோதனை செய்தார்கள். தாய் ராணியை தவிர தர்ஷன் மற்றும் குமாருக்கு கொரோனா தாக்கம் இருந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குமார் குடும்பத்தை போல தமிழகத்தில் சில குடும்பங்களில் பெற்றோர் வழியாக குழந்தைகளுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட சுமார் 2,000 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் மருத்துவ அறிக்கையின்படி தமிழகம் முழுவதும் சுமார் 35,918 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
பல நேரங்களில் பெற்றோருக்கு நோய் தொற்று இருக்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கு அது எளிதாக பரவும் வாய்ப்பு இருப்பதால், பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
''நான் ஒரு வாரத்திற்கு முன்பு வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. பாதுகாப்பாகத்தான் இருந்தேன். ஆனால் தொற்று ஏற்பட்டது எப்படி என தெரியவில்லை. விசாரித்து பார்த்ததில், என்னுடன் பயணம் செய்த நண்பர் ஒருவனுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. என் மகனுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தர்ஷன் ஏசிம்டம்மேடிக் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். கடுமையான பாதிப்பு இருக்காது என்றார்கள். எனக்கு 10 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு வாரமாக வீட்டில் இருக்கிறோம்,''என்கிறார் குமார்.
குமார் குடும்பத்தை போல தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ள குடும்பங்களை போல பல குடும்பங்கள் இல்லை. வசதியற்ற வீடுகளில், ஒரு குழந்தைக்கு ஏற்படும் தொற்று பிற குழந்தைகளுக்கும் பரவும் வாய்ப்பும் உள்ளது என ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் டீன் தேரணிராஜன்பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''தொற்று பெற்றோரிடம் இருந்து மட்டுமே குழந்தைகளுக்கு பரவும் என உறுதியாக சொல்ல முடியாது. ஒருசில வேளைகளில் குழந்தைகளிடம் இருந்தும் பெற்றோருக்கு வரலாம். குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஏசிம்டம்மேடிக் என்ற அறிகுறி இல்லாத நிலைதான் ஏற்படுகிறது என்றாலும் கவனமாக இருப்பது நல்லது,''என்கிறார்.
கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றனரா என அவரிடம் கேட்டோம்.

பட மூலாதாரம், Getty Images
''முதல் அலையின் போது, சில பிறந்த குழந்தைகளுக்கு தாயிடம் இருந்து தொற்று பரவியிருந்தது. சுமார் 1,500 குழந்தைகளுக்கு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பாக அவர்கள் வீடு திரும்பினார்கள். தற்போது கொரோனா தாக்கம் மற்றும் அறிகுறிகள் பற்றி நமக்கு மேலும் தெளிவாக தெரிந்துவிட்டது. அதனால், இரண்டாம் அலையில் அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளது என சொல்லமுடியாது. ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை நம்பியுள்ள குழந்தைகளுக்கு பரவுவதை தடுப்பது கடினம்,'' என்கிறார் அவர்.
அத்துடன், தற்போது முதல் அலை போல அல்லாமல், குடும்பத்துடன் பலரும் கொரோனா சோதனை செய்ய முன்வருவதால், குழந்தைகளுக்கு அறிகுறிகள் தெரியவில்லை என்றபோதும், தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது என்கிறார் மருத்துவர் தேரணிராஜன்.
பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ரெமா சந்திரனிடம் கேட்டோம்.
''பெற்றோர் வெளியில் சென்று வந்தால் தங்களை தூய்மைப்படுத்திக்கொண்டு குழந்தைகளை தொடவேண்டும். பெற்றோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், முடிந்தவரை குழந்தைகளிடம் இருந்து விலகி இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக குழந்தைகள் இருப்பது நல்லது. அவர்கள் விளையாடும் இடம் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும். குழந்தைகள் வெளியில் சென்றால் முகக்கவசம் அணியவேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,''என்றார்.
மேலும் "பெரியவர்களை போலவே குழந்தைகளுக்கும் கை கழுவுவது, சமூக இடைவெளி போன்ற பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். சரிவிகித உணவு (நார்ச்சத்து நிறைந்த உணவு உட்கொண்டால் செரிமானத்திற்கு நல்லது. அதாவது மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றின் கலவையே சரிவிகித உணவாகும்) எடுத்துக்கொள்வது நல்லது," என்றார் ரெமா சந்திரன்.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












