கமல் ஹாசன்: 'பணம் கொடுப்பவர்களை படம் எடுத்தால் காஃபி குடிக்க வருவேன்' - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும், பணம் கொடுப்பவர்களை கேமராவில் படம் எடுத்து அனுப்பினால் வீட்டுக்கு காஃபி குடிக்க வருவேன் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் திரைப்பட நடிகருமான கமல் ஹாசன் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.

சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனுக்கு வாக்கு சேகரித்து அத்தொகுதிக்குட்பட்ட ஆவாரம்பாளையம், பீளைமேடு புதூர், மசக்காலிபாளையம், வரதராஜபுரம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களின் அருகே கமல் ஹாசன் சனிக்கிழமை மாலை தேர்தல் பிரசாரம் செய்தார்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கமல் ஹாசன் பேசுகையில், ''ஐந்து வருடத்துக்கு பணம் கொடுத்து உங்களை குத்தகைக்கு எடுக்கும் சந்தை களமாக ஜனநாயகம் மாறக்கூடாது. அப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பத்திரிகையாளர்கள் சிலர் பணம் விநியோகிக்கப்படுவதை செய்தியாக எனக்கு அனுப்பி வருகின்றனர். பணநாயகம் செழித்த முதலாளிகள் பண வினியோகத்தை துவங்கியுள்ளனர்.''

''கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி விநியோகித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவருக்கு இயன்ற அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். அதை வைத்தே அவர்கள் எவ்வளவு கொள்ளை அடித்து இருப்பார்கள் என கணக்கிட முடியும்.''

''அவர்கள் கொடுக்கும் ரூ.500-ஐ வைத்து நான்கு பிளேட் பிரியாணி மட்டுமே சாப்பிட முடியும். அந்தப் பணத்தால் ஐந்து வருட பசியை போக்க முடியாது. எவ்வளவு பசி இருந்தாலும் ஒரு வேளை பசியை மட்டுமே போக்கு முடியும்.

ஏழைகளின் வறுமை வெறும் ரூ.500-ஐ வைத்து போக்கிட முடியாது. இது மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் பண விநியோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கோரிக்கை வைத்தார் கமல்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மேலும் பேசிய அவர், ''மக்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பணம் கொடுப்பதை படம்பிடித்து அதை உங்கள் சமூக வலைத்தளங்களில் என் பெயரோடு சேர்த்து அனுப்பி வையுங்கள். திருடனின் முகம் நன்றாகத் தெரிய வேண்டும். அப்படி உண்மையான படங்களை அனுப்பியவர்கள் வீட்டிற்கு நான் காஃபி குடிக்க வருவேன்.''

''அதற்காக காசு கொடுப்பேன் என கூறினால், நானும் திருடன் ஆகி விடுவேன். பண விநியோகத்தை விரும்பாதவர் என்றால், நீங்கள் என் உறவினர். நான் விருந்தாளியாக உங்கள் வீட்டுக்கு வருவேன். பணம் கொடுக்க வருபவர்கள் முன்பு, கேமராவை எடுங்கள் துப்பாக்கியை எடுப்பது போல அவர்கள் ஓடிவிடுவார்கள்.''

''வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை கேமராவால் சுடுங்கள் (படம் எடுங்கள்). இளைஞர்கள் அதை கட்டாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இது ஓர் அரசியல் புரட்சியாக உருவாக வேண்டும்,'' எனத் தெரிவித்தார் கமல் ஹாசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: