கமல் ஹாசன் கட்சியின் சந்தோஷ் பாபு செய்யும் டிஜிட்டல் பிரசாரம்: 'தேர்தலைவிட மனித உயிர் முக்கியம்' - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

பட மூலாதாரம், Tamil Nadu e-Governance Agency FACEBOOK
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா தொற்று காரணமாக டிஜிட்டல் முறையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி தொகுதி வேட்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
ம.நீ.ம சார்பில் கோவை தெற்குத் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டு வேட்பாளர்களை கொரோனா தொற்று முடக்கியுள்ளது.
ஒருவர் வேளச்சேரி தொகுதி வேட்பாளரும் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு. இன்னொருவர் அண்ணா நகரில் களமிறங்கும் வெ.பொன்ராஜ்.
இதுகுறித்து இன்று காலை ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் வெ.பொன்ராஜ். அந்தப் பதிவில், `நான் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும் உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால், களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Ponraj Vellaichamy facebook page
முன்னதாக, வேளச்சேரியில் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொகுதி மக்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் டிஜிட்டல் முறையில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
சந்தோஷ் பாபுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். அவருடனான பேட்டியில் இருந்து..
தேர்தலுக்கு 2 வாரகால அவகாசம் இருக்கிறது. தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியில் இருந்து விலகினீர்கள். மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத வருத்தம் இருக்கிறதா?
மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும் என நினைத்தேன். என்னால் முடியவில்லை. பல காலகட்டங்களில் வேட்பாளர்கள் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். என்னால் நேரடியாகச் செல்ல முடியாததை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆனாலும், என்னுடைய கட்சிக்காரர்கள் எனக்காகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் இன்னொருவருக்கு கொரோனா பரவிவிடக் கூடாது. அதேநேரம், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் மக்களிடம் சென்று சேர வேண்டும். நேரில் செல்ல முடியாவிட்டால், அதற்கு அடுத்த சிறந்த வாய்ப்பு என்பது டிஜிட்டலில் இருக்கிறது. வேளச்சேரியில் உள்ள 1,210 தெருக்களிலும் எங்கள் கட்சியினர் செல்லும்போது வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசுகிறேன். இதுதொடர்பாக 12 வியூகங்களை வகுத்திருக்கிறேன். இதனை அனைத்து வேட்பாளர்களும் கடைப்பிடிக்கலாம்.
அதைப் பற்றி விவரிக்க முடியுமா?
நிச்சயமாக. முதலில் வேளச்சேரி தொகுதிக்கு என ஓர் இணையத்தளத்தை உருவாக்கினோம். அது நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. அதில் ஐ.வி.ஆர்.எஸ் சிஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதில் நேற்றே 400 பேர் தன்னார்வலர்களாக இணைந்துவிட்டனர். இதுதவிர, என்னுடைய தனிப்பட்ட இணையத்தளம் ஒன்றும் இருக்கிறது. அதில் நான் கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திய சாதனைகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. நான் மருத்துவமனையில் இருந்தாலும் வீடியோ வேன் ஒன்று தொகுதிக்குள் வலம் வர இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் லைவ் சென்று கொண்டிருக்கிறது. அங்காங்கே ஜூம் ஆப்பிலும் பேசி வருகிறேன்.

பட மூலாதாரம், Maiam facebook page
தவிர, என்னுடைய முகமும் டார்ச் லைட் சின்னமும் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அங்குள்ள 8 வார்டுகளுக்கும் கையடக்க அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளேன். வேளச்சேரி மக்கள் எனக்கு வாக்கு போட்டாலும் போடாவிட்டாலும் நான் யார் என்பது அந்த மக்களுக்குத் தெரிய வேண்டும். தேர்தல் ஒருபக்கம் இருந்தாலும் மனிதனின் உயிர் மிக முக்கியம். தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கிறது. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
அனைவரும் தவறாமல் மாஸ்க் போடுங்கள். தொடக்கத்தில் என்னுடைய பிரசாரத்தில் கையில் மாஸ்க் இருக்கும். முகம் தெரிய வேண்டும் என்பதற்காக மாஸ்க்கை கழட்டிவிட்டேன். அதனால் கோவிட் வந்திருக்கலாம். எனக்கு வெற்றி தோல்வி என்பது முக்கியமில்லை. என்னால் சக மனிதனுக்குக் கோவிட் வந்துவிடக் கூடாது. இந்தத் தொற்று பாதித்தால் மனித வாழ்க்கையில் 14 நாள்கள் வீணாகிவிடுகிறது.
டிஜிட்டல் பரப்புரையில் அனைத்து தரப்பினரையும் சென்றடைவது சாத்தியமா?
தேர்தல் ஜனநாயகத்தில் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பது என்பது முக்கியமானது. அவ்வாறு நேரில் சென்று மக்களைச் சந்திக்கும்போது மகிழ்ச்சி கிடைக்கும். களத்தில் நேரடியாக 100 பேரை பார்த்துப் பேச முடியும். டிஜிட்டல் மூலமாக 25 பேரை மட்டுமே சென்றடைய முடிகிறது.
என்னுடைய டிஜிட்டல் பிரசாரத்திலும், `இத்தனை ஆண்டுகளாக இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டு ஏமாந்துவிட்டீர்கள். ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். சிங்கப்பூரைவிட மிகச் சிறந்த நகரமாக வேளச்சேரியை மாற்ற முடியும். அதற்கான திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன.

பட மூலாதாரம், Santhosh babu facebook page
அரசில் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி நிறைய செய்திருக்கிறேன். உலகிலேயே மனிதவளம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. நேர்மையான ஆட்சியாளர்கள் இருந்தால் இந்த மாநிலத்தை மிகச் சிறப்பானதாக மாற்றிக் காட்ட முடியும்' என்பதை முன்வைக்கிறேன். மேலும், பிக்பாஸில் கமல் ஏன் நடிக்கிறார் என்றால் கட்சியை வளர்ப்பதற்காகத்தான். நான் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வகுப்பெடுப்பதற்கும் துணைத் தலைவர் மகேந்திரன் வர்த்தகம் செய்வதற்கும் காரணம் கட்சிக்காகத்தான். கைக்காசை செலவழித்து கட்சியை நடத்துகிறோம். இதனை வேறு எந்தக் கட்சியிலும் பார்க்க முடியாது.
வேட்பாளர் களத்தில் இருக்கும்போதே கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிரமம் உள்ளது. நீங்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால் கூட்டணிக் கட்சியினர் பிரசாரத்துக்கு வருகிறார்களா?
அதில் எந்தவித சிரமங்களும் இல்லை. நான் தொடர்ந்து சரத்குமாரிடம் பேசி வருகிறேன். அவரது கட்சியினர் எங்கள் குழுவோடு இணைந்து வேலை பார்க்கிறார்கள். நாள்தோறும் 12 மணிநேரம் அறையில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் கண்காணித்து வருகிறேன். நேரடியாகச் சென்று மக்களைச் சந்திப்பதே சிறந்தது. அந்த அனுபவத்தை டிஜிட்டலால் எந்தவகையிலும் ஈடுகட்ட முடியாது.
வேளச்சேரி தொகுதியில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?
நான் அப்படிப் பார்க்கவில்லை. என்னுடைய முயற்சியை 100 சதவிகிதம் மேற்கொள்வேன். எனக்கு வாய்ப்பு வழங்குவது என்பது மக்களின் கைகளில்தான் இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள்களில் என்னால் பிரசாரத்துக்கு வர முடியும். அப்போது மக்களைச் சந்தித்துப் பேசுவேன்.
பிற செய்திகள்:
- அசுரன் படத்துக்கு தேசிய விருது - 15 சுவாரசிய தகவல்கள்
- 'பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது ஒரு பொருட்டே அல்ல' - பொன். ராதாகிருஷ்ணன்
- கொரோனா ஊரடங்கின் ஓராண்டு: முன்பே தகவல் தெரியாத இந்திய அமைச்சகங்கள்
- செம்மர கடத்தல் தாக்கம்: “அப்பா எங்கம்மா… என்ன பார்க்க வரமாட்டாரா?” - தந்தையை பறிகொடுத்த குழந்தைகள்
- உலக ராணுவ பலத்தில் 4ஆம் இடத்தில் இந்தியா - யார் முதலிடம் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
.












