'பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது ஒரு பொருட்டே அல்ல' - பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன்

பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன்
    • எழுதியவர், மு. பார்த்தசாரதி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து மக்களவைத் தேர்தலையும் சந்திக்க இருப்பதால் கூடுதலாக பரபரத்துக் கிடக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த, காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வந்தகுமார் கொரோனா காரணமாக உயிரிழந்ததை அடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் அங்கே பலத்த போட்டி நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருந்த பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசியது பிபிசி தமிழ்.

கன்னியாகுமரியில் தற்போதைய தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

இங்கே பாஜகவுக்கு மிக மிக சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அதிமுக, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் காரணமாக இந்த மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் மக்களவை தொகுதியையும் உறுதியாக நாங்கள் வெல்வோம்.

ஹெச்.வசந்தகுமார் மறைவிற்குப் பிறகு களத்தில் எதிர்ப்பு குறைவாக இருப்பதாக நினைக்கிறீர்களா?

அவர் இருக்கும்போதும்கூட மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு கிடையாது. அவர்கள் மக்களை ஏமாற்றினார்கள், அச்சப்படுத்தினார்கள். இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய நான்கு வழிச்சாலை திட்டத்தை கொண்டு வரவிட மாட்டோம் என்றார்கள்.

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லி வயதானவர்களின் பாம்படத்தைக் கூட கழற்றி அடமானம் வைத்து உங்களுக்குத் திருப்பி தரப்படும் என்று சொன்னார்கள். மாணவர்களுடைய கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று சொல்லி ஏமாற்றினார்கள். அப்போது ஏமாந்துபோன மக்கள் இப்போது உணர்கிறார்கள். நாம ஏமாந்துட்டோம், இனி ஏமாறக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

உங்களுடைய தேர்தல் பிரசாரத்தை எதை மையப்படுத்தி முன்னெடுக்க உள்ளீர்கள்?

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக நான்கு வழிச்சாலை திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசல் முழுமையாக அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் திட்டமே கிடப்பில் போடப்பட்டள்ளது. பதினோறு கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை திறக்கப்பட்டு அதை பயன்படுத்தாமல் வைத்துள்ளார்கள்.

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக சிமெண்ட் சாலை போடப்பட்டது கன்னியாகுமரியில்தான். அது பயன்படுத்தப்படாமல் இருப்பதால் வெடித்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கொண்டு வந்த இரட்டை ரயில் பாதை திட்டத்தில் 25 சதவீதம்கூட முடிக்கப்படாமல் இருக்கிறது.

இப்படி எந்த திட்டத்தை எடுத்துக்கொண்டாலும் வளர்ச்சியே இல்லாமல் அப்படியே இருக்கிறது. காலம் சென்ற வசந்தகுமார் எந்த ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. 5 வருடங்களாக நான் கொண்டு வந்த திட்டங்கள் அழிக்கப்பட்டதோடு புதிதாக எந்த திட்டங்களும் வரவில்லை. அதனால், தற்போது பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்தார்கள். மீண்டும் உங்களைத் தேர்வுசெய்வார்கள் என எப்படி நம்புகிறீர்கள்?

இங்கிருக்கக்கூடிய மலைப்பகுதி, கடல்பகுதி, நிலப்பகுதி என எந்தப் பகுதியிலுள்ள மக்களிடம் சென்று கேட்டாலும் காங்கிரஸ் எங்களை ஏமாற்றிவிட்டது என வெளிப்படையாக கூறுவார்கள். நான் இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட எந்த சாதிக்காகவோ, எந்த மதத்தினருக்காகவோ கொண்டு வரப்பட்டது அல்ல.

அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அதை அவர்கள் கண்கூடாக பார்த்தார்கள். அதனால்தான் ஒவ்வொருவரும் கூறுகிறார்கள். நாம் ஏமாற்றப்பட்டோம். இனி ஏமாறக்கூடாது என உறுதியாக நினைக்கிறார்கள். அதோடு, புதிய திட்டங்கள் தேவை, முன்னேற்றம் தேவை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை என்பதால் பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் பாஜகவை ஆதரிக்கிறார்கள்.

பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோல், கேஸ் விலை போன்றவை மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க எனக்கு வாக்களியுங்கள் என எப்படிக் கேட்பீர்கள்?

உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். கடந்த ஓராண்டாக கொரோனாவின் பாதிப்பு எந்த அளவிற்கு இருந்தது என்பது. தற்போது இரண்டாம் அலை வேறு தொடர்கிறது.

130 கோடிக்கும் மேல் வாழக்கூடிய நம் நாட்டில் அதன் தாக்கம் அதிகம் வராமல் பாதுகாத்தவர் பிரதமர் நரேந்திர மோதி. 175 திட்டங்களை 5 ஆண்டுகளுக்குள் கொண்டு வந்தவர். அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். நாடு முழுவதும் கழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி எல்லா திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை மட்டும் குறைப்பதில் என்ன சங்கடம் இருந்துவிடப் போகிறது. அது ஒரு பொருட்டே அல்ல.

ஆனால், திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணிப்பது ஒருநாடு மட்டும் அல்ல. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகள் முடிவெடுக்கக்கூடியது. அதனை சார்ந்து நாமும் முடிவெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். இப்போதிருக்கக்கூடிய சூழலில் இந்த அரசு இந்த விலையேற்றத்தைப் பற்றி நிச்சயமாக கவலைப்படுகிறது என நிதித்துறை அமைச்சரே சொல்லியிருக்கிறார். அதனால், நல்ல செய்தி நிச்சயமாக கிடைக்கும்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

ஒக்கி புயலின்போது மத்திய, மாநில அரசுகள் சரியாக மீட்புப் பணிகளைச் செய்யவில்லை என்ற கோபம் மக்களிடம் இருக்கிறதே. அதுபற்றி?

ஒக்கி புயலின்போது பிரதமர் நரேந்திர மோதி, ராணுவ அமைச்சர் ஆகியோர் நேரடியாக வந்திருந்தார்கள். அப்போது நான் அரசு வேலை நிமித்தமாக இரான் சென்றிருந்தேன். அதனால், இரண்டாம் நாள் வந்து அடுத்த ஒரு மாதத்திற்கு மீனவர்களோடு கூடவே இருந்தேன்.

அனைவருடைய பிரச்னைகளுக்கும் தீர்வு காண முயற்சி செய்தேன். காணாமல்போன மீனர்வர்களை மீட்டெடுக்க கப்பல் வசதி, விமான வசதி என அனைத்தையும் செய்து கொடுத்தோம். புயல் என்றால் அனைவருக்கும் சிக்கல்தான். ஆனால், சாதாரண நிலையில் கடலில் மீன்பிடிக்கச் சென்று அயல்நாட்டு கப்பற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 393 பேரை நான் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.

இங்கிருக்கக்கூடிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளி போட்டிருப்பார்களா? அதுமட்டுமல்ல, ஒக்கி புயலின்போது காலமான மீனவர்களின் குடும்பத்திற்கு முதலில் 10 லட்சம் அறிவித்தார்கள். ஆனால், முதல்வரிடம் பேசி 20 லட்சம் அறிவிக்குமாறு வலியுறுத்தி பெற்றுக்கொடுத்தேன். அதை மக்கள் மறக்கவில்லை.

மோடி

பட மூலாதாரம், Getty Images

நான் வெற்றிபெற்றால் இதையெல்லாம் செய்வேன் என என்ன வாக்குறுதியை மக்களுக்கு அளிக்கப்போகிறீர்கள்?

கிடப்பில் போடப்பட்டுள்ள ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவேற்றப்படும். ஆசாரிபள்ளத்தில் இருக்கக்கூடிய அரசுக்கல்லூரி மருத்துவமனையை பன்நோக்கு மருத்துவமனையாக உருவாக்கிக் கொண்டுவருவது, ரப்பர் ஆராய்ச்சி மையம் கொண்டு வருவது, புதிய திட்டங்களை கொண்டு வருவது, இ்ங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது, வேலை பெறுவதற்கான உரிமங்களில் உள்ள பிரச்னையை நீக்கி வேலை வாய்ப்பிற்கான பயிற்சி கொடுக்க வைப்பது என அனைத்தையும் செய்து இந்த மாவட்டத்திலுள்ள இளைஞர்களாலும் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இங்குள்ள இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறேன்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, நாம் தமிழர் என பலமுனைப் போட்டியாக இருக்கிறது. இது தேர்தல் முடிவுகளில் எப்படி எதிரொலிக்கும்?

தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மீண்டும் அதிமுகவின் ஆட்சி ஏற்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :