தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: `எடப்பாடியை மிரட்டினார் ராஜேந்திர பாலாஜி!' ராஜவர்மன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி

ராஜவர்மன்

பட மூலாதாரம், Rajavarman

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவான ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையில் தொடக்கம் முதலே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட எதிர்கோட்டை சுப்ரமணியன் வெற்றி பெற்றார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக சுப்ரமணியன் மாறியதால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய ராஜவர்மன், 456 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் சீனிவாசனை தோற்கடித்தார். இதன்பிறகு மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்தது. இந்நிலையில், நேற்று வெளியான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ராஜவர்மனின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரான ரவிச்சந்திரனின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் கொதிப்படைந்த ராஜவர்மன், இன்று டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராஜவர்மனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது?"

``அ.தி.மு.க தலைமை சரியான முடிவை எடுக்கவில்லை. தற்போதுள்ள தலைமையானது, கட்சியையும் ஆட்சியையும் நடத்தத் தகுதியில்லாததாக இருக்கிறது. ஏதோ கத்திரிக்காய் வியாபாரம் செய்வதைப் போல கட்சியை நடத்துகின்றனர். சின்னம்மா வந்தால்தான் ஒன்றரைக் கோடி தொண்டர்களையும் காப்பாற்ற முடியும்."

``அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோடு உங்களுக்கு மோதல் இருந்து வந்தது. கூலிப்படையை ஏவிவிடுவதாக மிரட்டியதாக எல்லாம் புகார் தெரிவித்தீர்கள். உங்களுக்கு சீட் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அமைச்சர் இருக்கிறாரா?"

``அவர் மட்டும்தான் காரணம். சிவகாசி தொகுதியில் அவர் நின்றால் தோற்றுப் போய்விடுவார். அதனால்தான் ராஜபாளையம் தொகுதிக்கு மாறியிருக்கிறார். நான் சாத்தூரில் நின்றால் வெற்றி பெற்றுவிடுவேன். நான் வலுப்பெற்று விடுவேன் எனப் பயப்பட்டார். என்னுடைய தொகுதியில் உள்ள 50,000 பேரிடம் போய்ப் பேசிப் பாருங்கள். என்னைப் பற்றிச் சொல்வார்கள். தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்டப் பணிகளைச் செய்துள்ளேன். கட்சித் தொண்டர்களையும் அரவணைத்துச் செல்கிறேன்."

``கட்சித் தலைமை முடிவெடுத்து ஒருவருக்கு தொகுதியை ஒதுக்குகிறது. அதனைக் கேள்வியெழுப்புவது எந்த வகையில் சரியானது?"

``அ.தி.மு.கவில் இவர்களுக்கு வேண்டிய முக்கியமான ஆள்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகளை மட்டும் ஏன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவில்லை. ஆனால், வெற்றி பெறக் கூடிய தொகுதிகளை எல்லாம் வேறு நபர்களுக்குக் கொடுக்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?"

``அண்மைக்காலமாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உங்களைப் பார்க்க முடிந்தது. தொகுதி உறுதியாகக் கிடைக்கும் என எந்த வகையில் நம்பிக்கையுடன் இருந்தீர்களே?"

``என்னை நம்ப வைத்துக் கழுத்தறுத்தார்கள். நான் அதிகம் படிக்கவில்லை. கூலித் தொழிலாளியாக இருந்தவன். கட்சிக்காக இரவு பகல் பாராமல் சுவரொட்டி ஒட்டியிருக்கிறேன். என்னைத் தவிர வேறு யாரும் அங்கே இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்க முடியாது. மீண்டும் எனக்கொரு வாய்ப்பு கொடுத்திருந்தால் அ.தி.மு.கவின் வெற்றி பிரகாசமாக இருந்திருக்கும். உழைத்தவனுக்கு சீட் இல்லையென்றால், இந்த இயக்கம் எப்படி வளரும்? இந்தமுறை என்னுடைய தொகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் தேர்தல் வேலை பார்க்க மாட்டார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 8 மாதங்களாக மாவட்ட செயலாளரைக்கூட போடாமல் இருக்கிறார்கள். அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?"

ராஜேந்திர பாலாஜி

பட மூலாதாரம், Rajenthra Balaji FB

``நீங்கள் தினகரன் பக்கம் போகலாம் என்பதால்தான் சீட் மறுக்கப்பட்டிருக்குமா?"

``அப்படியெல்லாம் இல்லை. நான் பணத்துக்கு ஆசைப்படுகிறவன் கிடையாது. ` நான் சொல்லும் நபர்களைத் தவிர வேறு யாரை நிறுத்தினாலும் தோற்கடிப்பேன்' என ராஜேந்திர பாலாஜி, தலைமையை மிரட்டுகிறார். ஓட்டத்தில் ஜெயிப்பவனைத்தானே பந்தயத்தில் நிறுத்த வேண்டும்?"

``முதல்வரிடம் உங்கள் ஆதங்கத்தை தெரிவித்திருக்கலாமே?"

``முதல்வரிடம் 100 முறை பேசியிருப்பேன். துணை முதல்வரை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். ராஜேந்திர பாலாஜியின் தொல்லை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துவிட்டார்கள். அ.தி.மு.க கோட்டையாக இருந்த விருதுநகர் மாவட்டம், இனி அ.ம.மு.க கோட்டையாக மாறும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்கும். களநிலவரம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தலின் முடிவில், எடுத்தது தவறான முடிவு என அ.தி.மு.க தலைமை உணர்ந்து கொள்ளும். இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க, இவர்கள் என்ன எம்.ஜி.ஆரா.. அம்மாவா.. சின்னம்மாவா?"

``இவ்வளவு பேசுகிறீர்கள். சசிகலா வந்தபோது போய் பார்த்திருக்கலாமே?"

``நான் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவன். என்னை இடைத்தேர்தலில் நிற்க வைத்தது முதல்வரும் துணை முதல்வரும்தான். ராஜேந்திர பாலாஜி சொல்வதையெல்லாம் கேட்டால் கட்சி அழியத்தான் செய்யும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :