தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டி, மற்ற கட்சிகளில் என்ன நடந்தது?

தினகரன்

(தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதலாவது வேட்பாளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அதில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

தற்போது 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். டேவிட் அண்ணாதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலும் அமைப்புச் செயலாளர் பி. பாலகிருஷ்ணன் திருநெல்வேலி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

சாத்தூர் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை என்பதால், வியாழக்கிழமையன்று காலையில் டிடிவி தினகரனை சந்தித்து அ.ம.மு.கவில் சேர்ந்தார். அவருக்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 பேரில் 11 பேர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்.

அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் பெயர் வெளியீடு

தமாகா

அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் பட்டுக்கோட்டை, திரு.வி.க. நகர், கிள்ளியூர், லால்குடி, ஈரோடு, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில்போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

திருமாவளவன்

பட மூலாதாரம், VCK

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை,ஓமலூர், உதகை, கோவை தெற்கு, காரைக்குடி,மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு,கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருதாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகியவை காங்கிஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் வியாழக்கிழமை மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கையெழுத்திட்டுள்ள அந்த பட்டியலில் வானூர் (தனி), காட்டுமன்னார் கோவில், செய்யூர் (தனி), அரக்கோணம், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த கட்சிக்கு கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கடையநல்லூர் தொகுதியில் மொகம்மது அபு பக்கர், வாணியம்பாடி முகமது நயீம், சிதம்பரம் தொகுதியில் அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மார்க்சிட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை (தனி) , திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியல் வரும் 13ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி) ஆகிய 6 தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் மல்லை சி.ஏ. சத்யா, சாத்தூரில் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், பல்லடம் தொகுதியில் க. முத்துரத்தினம், மதுரை மேற்கு தொகுதியில் மு. பூமிநாதன், வாசுதேவநல்லூர் தனி தொகுதியில் டாக்டர். சதன் திருமலைக்குமார், அரியலூரில் வழக்கறிஞர் கு. சின்னப்பா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தி.மு.க கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி?

வேல்முருகன்

பட மூலாதாரம், VELMURUGAN

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் பங்கேற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களின் எண்ணிக்கை சமீபத்தில் முடிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன. அதன்படி ம.தி.ம.கவுக்கு மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் ஆகிய தொகுதிகள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதற்குப் பிறகு இன்று காலையில், வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ட்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வால்பாறை (தனி), சிவகங்கை, பவானிசாகர் (தனி), திருப்பூர் வடக்கு, தளி, திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதற்குப் பிறகு, ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சிக்கு மணப்பாறை, பாபநாசம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மனித நேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணியில் தங்களுக்கு இடங்கள் கிடைக்காததில் வருத்தமிருந்தாலும் இக்கூட்டணியை ஆதரிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், சி.பி.எம்., வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜவர்மன் அ.ம.மு.கவில் இணைந்தார்

தினகரன்

பட மூலாதாரம், TTV DINAKARAN TWITTER PAGE

அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் டி.டி.வி. தினகரனைச் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

அ.தி.மு.கவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் புதன்கிழமையன்று வெளியானது. இந்த வேட்பாளர் பட்டியலில் சாத்தூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மனின் பெயர் இடம்பெறவில்லை. ஆர்.கே. ரவிச்சந்திரனுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னுடைய சிவகாசி தொகுதியிலிருந்து இடம்மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்தே ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துவந்தார் ராஜவர்மன். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் தனக்கு இடம் கிடைக்கவில்லையென அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் இன்று காலையில் டி.டி.வி. தினகரனைச் சந்தித்த ராஜவர்மன் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்யாததால்தான் தற்போது ராஜேந்திர பாலாஜி தொகுதி மாறியிருப்பதாகவும் கூறினார்.

"மாற்றுக்கட்சியோடு மறைமுக தொடர்பு வைத்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. பல சமுதாயத்தினரைப் பற்றியும் ராஜேந்திர பாலாஜி தவறாகப் பேசிவந்தார். எப்படி மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் அங்கே நடக்கும் பிரச்னைகள் நன்றாகத் தெரியும். என்னைப் போன்ற ஒரு எம்.எல்.ஏவையே காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி கட்சியைக் காப்பாற்றுவார்கள். அ.தி.மு.கவை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. சசிகலாவால் மட்டும்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். இந்தக் கட்சியை வைத்து வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். முதல்வரும் துணை முதல்வரும் வியாபாரம் ஓடும்வரை ஓடட்டும் என இருக்கிறார்கள்" என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், அ.தி.மு.கவில் ஜெயலலிதா உற்சவராகவும் சசிகலா மூலவராகவும் செயல்பட்டதாகத் தெரிவித்த ராஜவர்மன், 38 ஆண்டுகளாக சசிகலாதான் ஜெயலலிதாவையும் கட்சியையும் இயக்கிவந்ததாகத் தெரிவித்தார்.

"ஜெயலலிதா இருக்கும்போது மூன்று பேரைத் தேர்வு செய்து காவல் துறையின் அறிக்கையை வாங்கி வேட்பாளரை முடிவுசெய்துவந்ததாகவும் தற்போது நான்கு தொகுதிக்கும் சேர்த்து 800 பேரை மொத்தமாக உட்காரவைத்து யாருக்காவது சீட் கொடுப்பேன் என்கிறார்கள். இவர்கள் என்ன எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா?" என்று கேள்வியெழுப்பினார்.

தான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா முடிவுசெய்வார் என்றும் ராஜவர்மன் தெரிவித்தார்.

எஸ்டிபிஐ கட்சிக்கு ஆறு இடங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அமமுக, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சிக்கும் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்திய தொகுதி, பாளையங்கோட்டை ஆகிய ஆறு தொகுதிகள் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக வாசன் தகவல்

வாசன்

பட மூலாதாரம், G.K. VASAN FB

அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 இடங்களைக் கோரியிருந்த நிலையில், அக்கட்சிக்கு ஆறு இடங்களை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், தங்களுக்கு அ.தி.மு.க. ஆறு தொகுதிகளை ஒதுக்க முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரசின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டபோது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் காஷ்மீரில் பாந்தர் கட்சிக்கும் உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால் யாராவது நீதிமன்றத்திற்குச் சென்றால் என்ன ஆகும் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது; மேலும் சைக்கிள் சின்னம் தங்களுக்குக் கிடைக்குமா என்ற விவகாரம் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் இருப்பதாகவும் வாசன் தெரிவித்தார்.

கூட்டணிப் பேச்சு வார்த்தைகளின்போது தான் 12 தொகுதிகளைக் கேட்டதாகவும் அ.தி.மு.க. ஆறு தொகுதிகளைத் தர முன்வந்திருப்பதாகவும் தான் மீண்டும் கோரிக்கை வைத்திருப்பதகாவும் கூடுதல் தொகுதிகளை அளிப்பார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் வாசன் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :