சந்திர சேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எப்படி?

பட மூலாதாரம், RAJKAMAL PRAKASHAN
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
1925ஆம் ஆண்டு. அஷ்ஃபாகுல்லா, சத்தீத்ரநாத் பக்ஷி மற்றும் ராஜேந்திர லஹிரி ஆகியோர் 8 டவுன்( EIGHT DOWN) பயணிகள் ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் சங்கிலியை இழுத்து ரயிலை நிற்க வைக்கும் பணி அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ராம்பிரசாத் பிஸ்மில், கேசவ் சக்ரவர்த்தி, முராரிலால், முகுந்திலால், பன்வாரி லால், மன்மத்நாத் குப்தா மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகிய ஏழு பேர் அதே ரயிலின் மூன்றாம் வகுப்பு பெட்டியில் இருந்தனர்.
அவர்களில் சிலருக்கு ரயிலின் கார்ட் மற்றும் ஓட்டுநரைக் கைதுசெய்யும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. மீதமுள்ளவர்களுக்கு ரயிலின் இருபுறமும் காவல் காத்தல் மற்றும் அதிலுள்ள கருவூலத்தை கொள்ளையடிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. வாகனத்தின் சங்கிலி இழுக்கப்பட்ட போது இருள் சூழ்ந்திருந்தது.
கார்டையும் ஓட்டுநரையும் தலைகுப்புறக் கிடத்தி, ரயிலில் இருந்த கருவூலத்தைக் கீழே தள்ளிவிட்டனர். மிகவும் கனமாகவும் வலுவாகவும் இருந்த அந்த பணப்பெட்டியைச் சுத்தியல் மற்றும் உளி கொண்டு, உடைக்க தொடங்கினர்.

பட மூலாதாரம், GOOGLE PHOTOS
காகோரி ரயில் கொள்ளையில் ஆசாத்தை தவிர மற்ற அனைவரும் பிடிபட்டனர்
அஷ்பாகுல்லா சுத்தியலால் அடித்த அடியில், அந்தப் பெட்டி திறந்து கொண்டது. அதில் நிறைய பணம் இருந்தது. அதை ஒரு மூட்டையில் கட்டி, அவர்கள், லக்னோ செல்லும் பாதையை கால்நடையாகவே கடந்தனர். நகரத்திற்குள் நுழைந்தவுடன் கருவூலம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த இடத்தில் அவர்கள் அன்று தங்கினர். ஆனால் சந்திரசேகர் ஆசாத் அன்றிரவு முழுவதும் ஒரு பூங்காவில் உட்கார்ந்திருந்தார்.
காலையில், இந்தியன் டெலிகிராப் செய்தித்தாள் விற்பனையாளர், "காகோரிக்கு அருகே பரபரப்பான ரயில் கொள்ளை" என்று கூச்சலிடுவது கேட்டது. இந்த ரயில் கொள்ளை பிரிட்டிஷ் ஆட்சியாளார்களை உலுக்கியது.
புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கையாகிப் புரட்சியாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் அனைவரையும் கண்காணிக்கத் தொடங்கினர். 47 நாட்களுக்குப் பிறகு, 1925 செப்டம்பர் 26 அன்று உத்தரபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் அரங்கேறின.
அவர்களில் 4 பேர் தூக்கிலிடப்பட்டனர், நான்கு பேருக்கு 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், 17 பேருக்கு நீண்ட கால தண்டனையும் விதிக்கப்பட்டது. சந்திரசேகர் ஆசாத், குந்தன் லால் ஆகிய இருவர் மட்டும் போலீசாரிடம் பிடிபடவில்லை. பிரிட்டிஷ் காவல்துறை ஆசாத்தை உயிருடன் பிடிப்பதில் இறுதி வரை வெற்றி பெறவில்லை.

பட மூலாதாரம், CHAMAN LAL
பகத் சிங்கை கைதிலிருந்து தப்ப உதவிய ஆசாத்
அவரது இலக்கு மிகவும் அருமையானது என்று ஆசாத் பாராட்டப்பட்டார். டிசம்பர் 17, 1927 அன்று, ஆங்கிலேய காவல் துறை டிஎஸ்பி ஜான் சாண்டர்ஸைக் கொன்ற பின்னர் பகத் சிங் மற்றும் ராஜ்குரு டிஏவி கல்லூரி விடுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு போலீஸ் சார்ஜென்ட் சனன் சிங் அவர்களைத் துரத்தினார்.
விடுதியில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகர் ஆசாத், பகத் சிங் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தங்கள் கைத்துப்பாக்கிகளின் தோட்டாக்கள் அனைத்தும் சாண்டர்ஸை கொல்ல தீர்ந்துவிட்டதால் எதுவும் மிச்சமில்லை என்று உணர்ந்தார்.
சந்திரசேகர் ஆசாத்தின் கூட்டாளியாக இருந்த சிவன் வர்மா தனது "Reminscenes of fellow revolutionaries" என்ற புத்தகத்தில், "இது வாழ்வா சாவா போராட்டமாக இருந்தது. இருவருக்கும் இடையிலான தூரம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. சனன் சிங் பகத்சிங்கைப் பிடிக்கும் தூரத்தில் வந்து விட்ட போது, அவ்வாறு நேர்ந்து விடாதபடி, ஒரு தோட்டா அவரது தொடையைத் துளைத்துச் சென்றது. அவர் சரிந்து விழுந்தார், பின்னர் அதிகப்படியான இரத்த இழப்பால் இறந்தார். இந்த தோட்டா, சந்திரசேகர் ஆசாத்தின் மவுசர் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்தது" என்று எழுதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆசாத் - நேரு சந்திப்பு
1931 ஆம் ஆண்டில் சந்திரசேகர் ஆசாத் ஆனந்த பவனில் ஜவஹர்லால் நேருவுடன் ரகசிய சந்திப்பு நடத்தினார்.
ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில் எழுதுகிறார், 'என் தந்தை இறந்த பிறகு, ஒரு அந்நியன் என் வீட்டில் என்னைச் சந்திக்க வந்தார். அவரது பெயர் சந்திரசேகர் ஆசாத் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் முன்பு அவரைப் பார்த்ததில்லை, ஆனால் ஒத்துழையாமை இயக்கத்தின் போது அவர் சிறைக்குச் சென்றபோது பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெயரைக் கேட்டேன். அரசாங்கத்துக்கும் காங்கிரசுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டால் அவரைப் போன்றவர்கள் நிம்மதியாக வாழ முடியுமா என்று அவர் தெரிந்து கொள்ள விரும்பினார். பயங்கரவாத வழிமுறைகளால் மட்டுமே சுதந்திரத்தை வெல்ல முடியாது என்று உணர்ந்திருந்த அவர், அமைதியான வழிகளின் மூலமாக மட்டுமே கூட அது சாத்தியமில்லை என்ற கருத்து கொண்டிருந்தார்"
அப்போது அலகாபாத்தில் இருந்த மற்றொரு சுதந்திர போராட்ட வீரரும் இந்தி எழுத்தாளருமான யஷ்பால், தனது சுயசரிதையான 'சிம்மாவிலோகன்' என்ற நூலில், 'இந்தச் சந்திப்பில் ஆசாத்துக்குத் திருப்தி இல்லை, காரணம், நேரு பயங்கரவாதத்தை ஒரு தீர்வாக அங்கீகரிக்கவில்லை. தவிர, எச்.எஸ்.ஆர்.ஏ அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். பின்னர் நான் நேருவை சந்தித்தேன், அவர் எனக்கும் ஆசாத்துக்கும் ரஷ்யா செல்ல பணம் கொடுக்க ஒப்புக்கொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், SUNIL RAI
நீ யார் எனக் கேட்ட ஆங்கிலேய அதிகாரி
தன்னையோ தான் இருக்கும் இடத்தையோ அறிந்தவர் எவரேனும் பிடிபட்டு விட்டால் உடனே தனது இருப்பிடத்தை, சில நேரங்களில் ஊரையே கூட மாற்றிவிடும் வழக்கம் ஆசாத்துக்கு உண்டு.
பலர் மூலமாகத் தகவல் கிடைத்தும் ஆசாத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கலாம். பிப்ரவரி 27, 1931 அன்று, நேருவைச் சந்தித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஆசாத் தனது கூட்டாளியான சுகதேவராஜுடன் அலகாபாத்தின் ஆல்பிரட் பூங்காவில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் ஒரு மோட்டார் வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரி நேட் பாவர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் வெள்ளை நிற ஆடையில் இறங்கினார்கள்.
சுக்தேவ்ராஜ் எழுதுகிறார், 'மோட்டார் நிறுத்தப்பட்டவுடன் எங்கள் தலை குறிவைக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரி கையில் ஒரு கைத்துப்பாக்கியுடன் நேரடியாக எங்களை நோக்கி வந்து, துப்பாக்கியைக் காட்டி ஆங்கிலத்தில், 'நீங்கள் யார், இங்கே என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்.
ஆசாத்தின் கை அவரது கைத்துப்பாக்கியிலும் என் கை என் துப்பாக்கியிலும் தயாராக இருந்தன. அவரது கேள்விக்கான பதிலை நாங்கள் தோட்டாக்களால் கூறினோம். ஆனால் வெள்ளை அதிகாரியின் கைத்துப்பாக்கி முந்திக்கொண்டதில், ஆசாத்தின் தொடையில் குண்டு பாய்ந்தது. ஆசாத்தின் குண்டு வெள்ளை அதிகாரியின் தோளைப் பதம் பார்த்தது. இருதரப்பும் தோட்டாக்கள் பறந்தன.
அதிகாரி பின்னால் ஓடி ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார். அவரது வீரர்கள் குதித்து வாய்க்காலில் ஒளிந்து கொண்டனர். நாங்களும் ஒரு நாவல் மரத்தின் பின் ஒளிந்து கொண்டோம். சண்டை ஒரு கணம் நின்றது. பின்னர் ஆசாத் தன் தொடையில் குண்டடிபட்டிருப்பதால் என்னைத் தப்பிச் செல்லச் சொன்னார்" என்று எழுதுகிறார்.
துப்பாக்கி முனையில் சைக்கிள் பறிமுதல்
சுக்தேவ்ராஜ் மேலும் எழுதுகிறார், 'ஆசாத்தின் உத்தரவின் பேரில், நான் தப்பிக்க வழி தேடினேன். இடதுபுறத்தில் ஒரு கோடை வீடு இருந்தது. மரத்திலிருந்து வெளியேறி, நான் கோடை வீட்டை நோக்கி ஓடினேன். பல தோட்டாக்கள் என் மீது வீசப்பட்டன, ஆனால் எதுவும் என்னைத் தாக்காமல் நான் தப்பினேன். ஆல்ஃபிரட் பூங்காவின் நடுவில் சாலையின் குறுக்கே வந்தபோது, ஒரு சிறுவன் சைக்கிளில் செல்வதைக் கண்டேன். நான் அவனுக்கு கைத்துப்பாக்கியைக் காட்டி அவனது சைக்கிளை எடுத்துச் சென்றேன். அங்கிருந்து சுற்றிச் சுற்றி வந்து 'சாந்த்' பத்திரிக்கை அச்சகத்தை அடைந்தேன். சாந்தின் ஆசிரியர் ரமர்க் சிங் சேகல் எங்கள் ஆதரவாளர்களில் ஒருவர். வருகைப் பதிவேட்டில் உடனடியாகக் கையெழுத்திட்டு என் இருக்கையில் அமருமாறு அவர் அறிவுறுத்தினார். '

பட மூலாதாரம், SM VIRAL IMAGE
ஆசாத் குறித்த தகவலுக்கு 5000 ரூபாய் வெகுமதி
சந்திரசேகர் குறித்து, அமர் ஷஹீத் சந்திரசேகர் ஆசாத் என்ற அதிகாரப்பூர்வ புத்தகத்தை எழுதிய விஸ்வநாத் வைஷம்பாயன், "முதலில் துணை கண்காணிப்பாளர் விஷேஷ்வர் சிங் ஒரு நபரை சந்திரசேகர் ஆசாத் என்று சந்தேகித்தார். ஆசாத் காகோரி மற்றும் பிற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். அவர் குறித்த துப்பு கொடுப்பவருக்கு 5000 ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. சிஐடியின் சட்ட ஆலோசகர் டால்சந்திடம் விஷேஸ்வர் சிங் தனது சந்தேகங்களை வெளிப்படுத்தினார். அவர் மீண்டும் கட்ரேயில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார், காலை எட்டு மணிக்கு டால்சந்த் தனது உதவியாளர் சர்நாம் சிங்குடன் தான் ஆசாத் என்று சந்தேகிக்கும் நபரை காணச் சென்றார். அவர்கள் இருவரும் தார்ன்ஹில் ரோட் கார்னரிலிருந்து பொது நூலகத்தை நோக்கி செல்லும் நடைபாதையில் அமர்ந்திருப்பதை கண்டார். அவர் ஆசாத்தான் என்று உறுதியாகத் தெரிந்த பின்னர், நம்பர் 1 பார்க் சாலைக்கு அருகில் இருந்த நேட் பாவரை அழைத்து வர, சர்நாம் சிங்கை அனுப்பினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷேஷ்வர் சிங்கின் கன்னத்தைக் கிழித்த ஆசாத்தின் துப்பாக்கி தோட்டா
பின்னர் நாட் பாவர் ஒரு செய்திக்குறிப்பில், "டாக்குர் விஷேஷ்வர் சிங்கிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது, அவர் ஆல்ஃபிரட் பூங்காவில் ஆசாத் போன்ற தோற்ற கொண்ட ஒருவரைப் பார்த்திர்ந்தார். முகமது ஜமான் மற்றும் கோவிந்த் சிங் ஆகிய கான்ஸ்டபிள்களை என்னுடன் அழைத்துச் சென்றேன். நான் காரை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி நகர்ந்தேன்.
பத்து கெஜம் தூரத்தில் இருந்து அவர் யார் என்று கேட்டேன். அதற்குத் துப்பாக்கியிலிருந்து பதில் வந்தது. என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். என் கைத்துப்பாக்கி ஏற்கனவே தயாராக இருந்தது. நானும் அவரைச் சுட்டேன். நான் தோட்டாவை நிரப்பிக்கொண்டிருந்தபோது, ஆசாத் என்னை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். அதனால் மேகசின், என் இடது கையிலிருந்து கீழே விழுந்தது. பின்னர் நான் ஒரு மரத்தை நோக்கி ஓடினேன்.
இதற்கிடையில், விஷேஷ்வர் சிங் புதருக்குள் ஊர்ந்து சென்றார். அங்கிருந்து ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதிலுக்கு ஆசாத் துப்பாக்கிச் சூடு நடத்தினார், இது விஷேஷ்வர் சிங்கின் தாடையைத் தாக்கியது. நான் கண்ணில் பட்ட போதெல்லாம் ஆசாத் என்னைச் சுட்டுக் கொண்டே இருந்தார். கடைசியில் அவர் மல்லாந்து விழுந்தார்.
இதற்கிடையில், ஒரு கான்ஸ்டபிள் தோட்டாக்கள் நிரம்பிய ஒரு கைத் துப்பாக்கியைக் கொண்டு வந்தார். ஆசாத் இறந்துவிட்டாரா அல்லது நடிக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் கான்ஸ்டபிளை ஆசாத்தின் கால்களை நோக்கிச் சுடுமாறு கூறினேன். அவர் சுட்ட பிறகு, நான் அங்கு சென்றபோது, ஆசாத் இறந்துகிடந்தார். அவரது தோழர்களில் ஒருவர் ஓடிவிட்டார்." என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹிந்து விடுதியின் வாயிலில் மாணவர்கள் கூட்டம்
சுதந்திரத் தியாகியான படுக்நாத் அகர்வால், அந்த நேரத்தில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி மாணவராக இந்து விடுதியில் வசித்து வந்தார். அவர் பிப்ரவரி 27 காலை, இந்து உறைவிடத்தின் வாயிலை அடைந்தபோது, துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டதாகவும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு பெரிய கூட்டமாக அங்கு கூடியிருந்ததாகவும் காவல் துறை உயரதிகாரி கேப்டன் மேஜர்ஸ் அங்கு வந்து சேர்ந்ததாகவும் பிற்காலத்தில் எழுதினார்.
மேலும் அவர், 'மாணவர்களை கலைந்து போகச் சொல்லியும் யாரும் அங்கிருந்து நகரவில்லை. கலெக்டர் மம்ஃபோர்டும் அங்கு வந்தார். கூட்டத்தை கலைக்க கேப்டன் மேஜர்ஸ் சுட அனுமதி கேட்டார், ஆனால் கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. அப்போதுதான் ஆசாத் உயிர்த்தியாகம் செய்தது எனக்குத் தெரிய வந்தது' என்றும் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், SUNIL RAI
நேட் பாவரின் காரில் மூன்று இடங்களில் ஓட்டைகள்
இதற்கிடையில், எஸ்பி மேஜர்ஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தி கிடைத்ததும், அவர் ஆயுத ரிசர்வ் காவல்துறையினரை ஆல்பிரட் பூங்காவிற்கு அனுப்பினார். ஆனால் இவர்கள் அங்கு சென்றடைந்த நேரத்தில், சண்டை முடிந்திருந்தது.
சந்திரசேகர் ஆசாத்தின் உடலைத் தேடி பிரேத பரிசோதனைக்கு அனுப்பவும், விஷேஷ்வர் சிங்கை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் நாட் பாவர் அறிவுறுத்தினார். ஆசாத்தின் உடலைத் தேடியபோது, அவரிடமிருந்து 448 ரூபாய் மற்றும் 16 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
யஷ்பால் தனது சுயசரிதையில் 'ஆசாத்தின் பாக்கெட்டில் நேரு கொடுத்த பணம் இருந்திருக்கலாம்' என்று எழுதுகிறார். இருதரப்பினரும் ஒளிந்திருந்த மரங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன. நேட் பாவருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரிலும் தோட்டாக்களின் தடயங்கள் இருந்தன. அதன் மீது மூன்று துளைகள் இருந்தன.
ஆசாத்தின் உடலின் பிரேத பரிசோதனையை சிவில் சர்ஜன் லெப்டினன்ட் கர்னல் டவுன்சென்ட் செய்தார். அப்போது அங்கு இரண்டு நீதிபதிகள் கான் சாஹிப் ரஹ்மான் பக்ஷ் காதரி, மகேந்திர பால் சிங் ஆகியோர் இருந்தனர். ஆசாத்தின் வலது காலில் இரண்டு புல்லட் காயங்கள் இருந்தன. அவரது காலில் திபியா எலும்பும் தோட்டாக்களால் முறிந்தது. வலது தொடையில் இருந்து ஒரு புல்லட் எடுக்கப்பட்டது. ஒரு புல்லட் மூளையில் நுழைந்து தலையின் வலது பக்கத்தில் உள்ள பேரியட்டல் எலும்பைத் துளைத்தது, மற்ற புல்லட் வலது தோள்பட்டையைத் துளைத்து வலதுபுறத்தில் பாய்ந்திருந்தது.
விஸ்வநாத் வைஷம்பாயன் எழுதுகிறார், 'ஆசாத்தின் உடல் கனமாக இருந்ததால், அதை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைக்க முடியவில்லை. சந்திரசேகர் ஆசாத் ஒரு பிராமணர் என்பதால், போலீஸ் தரப்பில் இருந்து ஒரு பிராமணர் பணியமர்த்தப்பட்டார். பிறகு, அவரது உடல் லாரியில் வைக்கப்பட்டது.

பட மூலாதாரம், UNIVERSAL HISTORY ARCHIVE
ஆசாத்தின் இறுதிச் சடங்கில், புருஷோத்தம் தாஸ் டான்டன் மற்றும் கமலா நேரு
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் புருஷோத்தம் தாஸ் டாண்டன் அங்கு வந்தார். ஆனால் அதற்குள் லாரி ஆசாத்தின் உடலுடன் புறப்பட்டிருந்தது. டான்டன் மற்றும் கமலா நேரு ரசூலாபாத் துறையை அடைந்த நேரத்தில், ஆசாத்தின் உடல் எரியூட்டப்பட்டிருந்தது.
ஆசாத்தின் அஸ்தியை அவரது உறவினர் சிவா விநாயக் மிஸ்ரா நகரத்திற்கு கொண்டு வந்தார். கதர் பண்டாரில் இருந்து ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மரப்பலகையின் மீது கருப்புத் துணி போர்த்தப்பட்டு, அதன் மீது அஸ்தி வைக்கப்பட்டது. நகரத்தைச் சுற்றிவந்த ஊர்வலம் புருஷோத்தம் தாஸ் டாண்டன் பூங்காவை அடைந்தது. நகரின் பல இடங்களில் மலர்கள் தூவப்பட்டன.
டான்டன் பூங்காவில், புருஷோத்தம் தாஸ் டாண்டன், கமலா நேரு, மங்கல்தேவ் சிங் மற்றும் சச்சீந்திர சான்யாலின் மனைவி பிரதிமா சான்யால் ஆகியோர் உரை நிகழ்த்தினர். அன்று நகரம் முழுவதிலும் வேலைநிறுத்தம் இருந்தது.
விஸ்வநாத் வைஷம்பாயன் தனது புத்தகத்தில், "ஆசாத் போன்று, குறி தவறாமல் துப்பாக்கிச் சுடும் நபர்கள் மிகச் சிலரையே தாம் சந்தித்துள்ளதாக சிஐடி கண்காணிப்பாளர் ஒப்புக்கொண்டார. குறிப்பாக அவர் மீது மூன்று பக்கத்திலிருந்துந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில். முதல் குண்டு ஆசாத்தின் தொடையில் தாக்கவில்லை என்றால், காவல் துறையினருக்கு மிகப் பெரிய சவாலாகவே ஆசாத் இருந்திருப்பார், காரணம், நேட் பாவரின் கை ஏற்கனவே காயமடைந்திருந்தது. " என்று எழுதுகிறார்.

பட மூலாதாரம், RAJKAMAL PRAKASHAN
நேட் பாவர் ஓய்வு பெற்ற பின், அரசாங்கம் ஆசாத்தின் கைத்துப்பாக்கியை அவருக்குப் பரிசளித்தது, அவர் அதை தன்னுடன் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றார். பின்னர், லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான அலகாபாத் கமிஷனர் முஸ்தாபி, பிஸ்டலைத் திருப்பித் தருமாறு பாவருக்கு ஒரு கடிதம் எழுதினார், ஆனால் அதற்கு பாவர் பதிலளிக்கவில்லை.
பின்னர், லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்ட முயற்சிக்குப் பின்னர், இந்திய அரசு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை வைத்தால் அதைத் திருப்பித் தர ஒப்புக் கொண்டார். அவரது நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது, 1972 ஆம் ஆண்டில், அந்தக் கைத்துப்பாக்கி இந்தியாவுக்குத் திரும்பியது. சச்சீந்திரநாத் பக்ஷி தலைமையில் ஒரு விழாவுக்குப் பிறகு 1973 பிப்ரவரி 27 அன்று லக்னோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அலகாபாத்தின் அருங்காட்சியகம் தயாரானபோது, அது அங்குள்ள ஒரு சிறப்பு அறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இரவோடு இரவாக வேரோடு பிடுங்கப்பட்ட மரம்
ஒவ்வொரு நாளும் ஆசாத் கொல்லப்பட்ட மரத்தின் அடியில் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. மக்கள் அங்கு பூக்கள் மற்றும் விளக்குகளை வைக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரே இரவில் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி, அந்த நினைவுச் சின்னத்தை அழித்தது.
அவரது விறகு வேறு இடத்தில் கொட்டப்பட்டது. பின்னர், ஆசாத்தின் அன்புக்குரியவர்கள் அதே இடத்தில் மற்றொரு நாவல் மரத்தை நட்டனர். நேட் பாவர் நின்று கொண்டிருந்த மரத்தில் ஆசாத்தின் தோட்டாக்களின் அடையாளங்கள் இன்னும் இருந்தன.
ஆசாத்தின் அஸ்தியில் ஒரு பகுதியை சோசலிச தலைவர் ஆச்சார்ய நரேந்திர தேவ், ஆசாத்தின் நினைவுச்சின்னத்தின் கல் வைக்கப்பட்டுள்ள வித்யாபீடத்தில் வைத்தார். ஆசாத்தின் முடிவில், இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கட்சி சிதைந்து போகத் தொடங்கியது.
ஒரு மாதத்திற்குள், மார்ச் 23, 1931 அன்று பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு குறுகிய காலத்தில் பல தலைவர்களின் மரணம் HRSAக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீளவே முடியாமல் போனது.
பிற செய்திகள்:
- "சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் பொதுவெளியிலிருந்து அகற்றப்பட வேண்டியவர்களா?" சர்ச்சையான கமல் பேச்சு
- கொரோனாவிலிருந்து மீண்ட தூத்துக்குடி செவிலியரை தாக்கிய அரிய நோய்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: வன்னியர் உள்ஒதுக்கீடு தி.மு.கவுக்கு பாதிப்பா?
- 'கஷோக்ஜி கொலைக்கு சௌதி இளவரசர் ஒப்புதல் அளித்தார்' - அமெரிக்க புலனாய்வு அறிக்கை
- பைடனின் முதல் ராணுவ நடவடிக்கை: இரானிய ஆதரவு போராளிகள் மீது தொடங்கியது வான் தாக்குதல்
- தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












