'புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி பறிபோனதன் பின்னால் நாங்கள் இல்லை' - பாஜக

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்த முதல்வர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த நெருக்கடியைக் கடந்து ஆட்சியை செய்ததாகவும் நாராயணசாமி பேரவையில் பேசினார்.
தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத்தான் வாக்களிக்கும் உரிமை உண்டு என்றும் நியமன சட்டமன்றத்திற்கு உறுப்பினருக்கு வாக்குரிமை இல்லை என்று கூறி சட்டப்பேரவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரயினர் கூட்டத்தை புறக்கணித்தது வெளியேறினர். இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாகச் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதையடுத்து, தனது தலைமையிலான அரசின் அமைச்சர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, "இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில், நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ஆட்சியமைக்க உரிமை உள்ளது என்றோம். பின்னர் சட்டமன்றத்தில் சொன்ன கருத்தைச் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், நாங்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம். இதையடுத்து துணைநிலை ஆளுநர் சந்தித்து நான் உட்பட எங்களது அமைச்சரவையின் பதவி விலகல் கடித்ததை வழங்கியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது ஏன்? - என்.ரங்கசாமி பதில்

இதனிடையே சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, "இன்று சட்டமன்றத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானம் படுதோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் குறித்துப் பேசாமல், மத்திய அரசைப் பற்றிக் குறை கூறி பேசியிருக்கிறார். எங்களுடைய கேள்வி புதுச்சேரி மக்களிடையே நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை? அவைகளில் எத்தனையை நிறைவேற்றி இருக்கிறீர்கள்? எத்தனை திட்டம் புதிதாக இந்த அரசால் கொண்டுவரப்பட்டது என்பது தான் எங்களுடைய கேள்வியாக இருக்கிறது."
"அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. எனவே இந்த அரசு சரியாக செயல்படாத காரணத்தினால்தான், அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். இதனால் ஆளுகின்ற அரசிற்குப் பெரும்பான்மை குறைந்த பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வலியுறுத்தினோம். இதன் காரணமாக நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு படுதோல்வி அடைந்தது," என்றார் ரங்கசாமி.
அடுத்தகட்டமாக ஆட்சி கோருவது குறித்து எதிர்க் கட்சிகளிடையே பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, "அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், அந்தந்த கட்சித் தலைமையிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்," என்று அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
'நாங்கள் பின்னணியில் இல்லை' - பாஜக

மேலும் பாஜகவை சேர்ந்த நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கூறுகையில், "இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பேசிய அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. எதிர்வரும் காலங்களில் தேர்தலை எதிர்நோக்க மக்களைச் சந்திக்க முடியாத காரணத்தினால் தான் அனைவரும் அவரவர் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். இதற்கு பின்னணியில் பாஜக இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடைந்து ஆட்சியமைக்கும். காங்கிரஸ் கட்சியில் இந்தியாவின் கடைசி பிரதமர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடைசி முதல்வர் நாராயணசாமி. ஆளும் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்தது. மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி," என சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
'மக்களிடம் செல்வோம்' - காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமனிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிபிசி விளக்கம் கேட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தேர்தலுக்கு இன்னும் சிறிய காலங்களே உள்ளது. இதன்பிறகு இந்த ஆட்சியைப் பிடிக்க நேரத்தை செலவழிப்பதை விட, மக்களிடத்தில் சென்று ஜனநாயக படுகொலை நடந்திருப்பதாக கூறுவோம். தேர்ந்தெடுக்கப்படாத, மக்களால் புறக்கணிக்கப்பட்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த மூன்று உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு பயன்படுத்துகின்றர் என்று கூறுவோம். இதுவொரு மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசை மத்தியில் யார் வந்தாலும் இதனைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க முற்படுவார்கள்," என்றார் அவர்.
"வழக்காடு மன்றத்தில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை என்று முறையிடுவோம். குடியரசு தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே வாக்களிக்க உரிமை உள்ளது, நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. அந்த அடிப்படையில், இனி எந்த ஓர் ஆட்சியிலும் இதுபோல் நடைபெறாமல் இருக்க உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம்," என அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
- "தமிழ் வாழ வேண்டுமென்றால், இந்துத்வா வெல்ல வேண்டும்" - தேஜஸ்வி சூர்யா
- எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை: தொடர் தோல்விகள் முதல் திடீர் திருப்பங்கள் வரை
- நிதி நெருக்கடியால் பன்றி வளர்ப்பின் பக்கம் திரும்பிய சீன செல்பேசி நிறுவனம்
- 'நரேந்திர மோதிதான் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கினார்' - பாஜக தலைவர் பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













