இந்தியா - சீனா எல்லை விவகாரம்: படைகளை விலக்கும் சீன ராணுவம் - ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா

பட மூலாதாரம், North Command, Indian army via Ani
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
சீனப் படைகள் விலகும் காணொளி - வெளியிட்டது இந்திய ராணுவம்
ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி இந்திய மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
இந்தக் காணொளிகள் பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியிலும், அந்த ஏரியின் தெற்குக் கரையை ஒட்டியுள்ள கைலாஷ் மலைத்தொடர் பகுதியிலும் எடுக்கப்பட்டவை என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இந்திய ராணுவத்தால் மொத்தம் ஐந்து காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மலைப் பகுதிகளில் தாங்கள் அமைத்த கூடாரங்களை சீனப் படையினர் அகற்றுவது, தாங்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த மலைப் பகுதிகளில் இருந்து இறங்கி வாகனங்களை நோக்கிச் செல்வது, சீனப் படையினர் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட காணொளிகள் ஆகியவை இந்திய ராணுவத்தால் செவ்வாயன்று பகிரப்பட்டுள்ளன.
சீனப் படைகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள் மற்றும் தற்காலிக அரண்களை அவர்கள் அகற்றுவதை இந்திய ராணுவத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 11-ஆவது பட்ஜெட்

பட மூலாதாரம், Getty Images
தமிழக சட்டப் பேரவை வரும் 23ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்கிறது தினமணி செய்தி.
இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 23ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் கூட்ட பேரவைத் தலைவா் பி.தனபால் ஒப்புதல் அளித்துள்ளாா்.
அன்றைய தினம் காலை 11 மணிக்கு, வரும் 2021-22-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பட உள்ளது என்று தனது அறிவிப்பில் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா். அவரது 11-ஆவது நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் அப்போது நிதித்துறையை கவனித்து வந்த ஜெயக்குமாா், 2017ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தாா். அந்த வகையில் 2017ஆம் ஆண்டை தவிா்த்து 2011 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா்.
'2021-2022இல் 10% பொருளாதார வளர்ச்சி'
இந்திய உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியானது அடுத்த நிதியாண்டில் (2021-2022) 10 சதவீதமாக இருக்கும் என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது என இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.
இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு நாட்டின் வேளாண் துறையின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருப்பதும், அரசு செலவீனம் அதிகமாக இருப்பதும், நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதும் அவசியம் எனவும் கூறியுள்ளது அந்த நிறுவனம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெரிய அளவில் முடங்கின. எனினும், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ஜிடிபி 11 சதவீதமாக இருக்கும் என இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













