எம்.ஜே. அக்பர் மீது பிரியா ரமணி பாலியல் புகார்: பாஜக முன்னாள் அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு #MeToo

பட மூலாதாரம், Getty Images
இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி சுமத்திய பாலியல் புகார் தொடர்பான அவதூறு வழக்கில் டெல்லி பெருநகர நடுவர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே இன்று, புதன்கிழமை (பிப்ரவரி 17) தீர்ப்பு அளிக்கவிருக்கிறார்.
மத்தியில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014இல் அமைந்தபோது அதில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் எம்.ஜே. அக்பர்.
அதுவரை பிரபல பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் அறியப்பட்ட இவர் பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.
இந்தியாவில் 'மீ டூ' ஹேஷ்டேக்
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் உலக அளவில் வைரலான 'மீ டூ' என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் பாலியலுக்கு உள்ளானதாக புகார் பதிவிடும் விவகாரம், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த இயக்கத்தில் இணைந்த பெண்கள் பலரும் தங்களுடைய வாழ்காலத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவங்களை பொது சமூக தளங்களில் பகிரத் தொடங்கினார்கள். பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு அனுபவங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பிரபல பத்திரிகையாளரான பிரியா ரமணி, எம்.ஜே. அக்பரின் கீழ் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
''இந்த நபரால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்வார்கள்,'' என பிரியா ரமணி கூறியிருந்தார். அது போலவே, டஜன் கணக்கான பெண்கள், தாங்களும் எம்.ஜே. அக்பரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறினார்கள். ஆனால், அவர்கள் சட்டபூர்வமாக வழக்காடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் பிரியா ரமணியின் புகார், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து, தமது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஜே. அக்பர்.
அவதூறு வழக்கு தொடர்ந்த எம்.ஜே. அக்பர்
பிறகு தனக்கு எதிரான பிரியா ரமணியின் குற்றச்சாட்டால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மீது பிரியா ரமணி சுமத்திய குற்றச்சாட்டுகள் போலியானவை என்று அவர் தொடர்ச்சியாக மறுத்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்கள், பிப்ரவரி 1ஆம் தேதி நிறைவடைந்த வேளையில், வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூடுதல் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே தெரிவித்தார்.
ஆனால், தீர்ப்பு வழங்கப்படும் நாளில் பிரியா ரமணி மற்றும் எம்.ஜே. அக்பர் சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 17ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.
முன்னதாக, 2018ஆம் ஆண்டில் பிரியா ரமணி பகிர்ந்த ட்விட்டர் இடுகை தொடர்பாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபேக்கா ஜான், "பணி இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் ஆண்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மதிக்கப்படக்கூடியவர்கள் அல்ல," என வாதிட்டார்.
பொது நல நோக்கத்திலேயே பிரியா ரமணி, எம்.ஜே. அக்பர் தொடர்பான இடுகையை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாக வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் இறுதிவாதத்தை பதிவு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
எம்.ஜே. அக்பர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீதா லூத்ரா, "அக்பரின் நன்மதிப்புக்கு பிரியா மணி தனது ட்விட்டர் இடுகை மூலம் ஏற்படுத்திய களங்கம் மன்னிக்க முடியாதது. பிரியா ரமணியின் கட்டுரை புனையப்பட்ட கற்பனை. அது உண்மையற்றது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை," என்று வாதிட்டார்.
எப்படி தொடங்கியது இந்த வழக்கு?
வோக் இந்தியா என்ற இதழில் பிரியா ரமணி 2017ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் பிரபல நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் தன்னை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டில் மீ டூ இயக்கம் சர்வதேச அளவில் வைரலானதையடுத்து, தனது ட்விட்டர் பக்கம் மூலம் தான் முன்பு குறிப்பிட்ட பாலியல் தொந்தரவை செய்தவர் அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர்தான் என்று பிரியா ரமணி கூறினார். இந்த விவகாரம் மத்திய அமைச்சரவையில் சலசலப்பை ஏற்படுத்தியதால் எம்.ஜே. அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
பிறகு அவர் பிரியா ரமணிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரியா ரமணிக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. அதன் பேரில் ஆஜரான பிரியா ரமணி, ரூபாய் 10 ஆயிரத்துக்கான தனிப்பட்ட ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றார்.
ஒரு விடுதி அறையில் தன்னை எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவு செய்ததாக பிரியா ரமணி குறிப்பிட்ட இடத்தில் அவரை சந்திக்கவேயில்லை என்று 2019ஆம் ஆண்டு மே மாதம் நடந்த வழக்கு விசாரணையின்போது அக்பர் மறுத்தார்.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவதூறு வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாலியல் தொந்தரவு பற்றி பிற பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே பேச வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனேயே தமது அனுபவத்தை பகிர்ந்ததாக பிரியா ரமணி சார்பில் விளக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பரஸ்பரம் மத்தியஸ்தம் செய்து கொள்ளுமாறு அதே ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால், பிரியா ரமணியும் எம்.ஜே. அக்பரும் அதை ஏற்கவில்லை.
இதன் பிறகு அந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாஜிஸ்திரேட் விஷால் பஹூஜாவை டெல்லி உயர் நீதிமன்றம் இடமாற்றம் செய்து உத்தரவிட்ட பிறகு இந்த வழக்கை கூடுதல் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே விசாரித்து வருகிறார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













