சர்ச்சை யூட்யூப் விஷமிகளை எச்சரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் - "கடும் நடவடிக்கை பாயும்"

பட மூலாதாரம், DCP ADYAR
- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
யூட்யூப் போன்ற சமூக ஊடக தளங்களை சர்ச்சைக்குரிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று சென்னை நகர காவல்துறை ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் புதன்கிழமை பேசிய மகேஷ் குமார் அகர்வால், "பெண்களின் மதிப்பைக் குலைக்கும் வகையிலும் பாலியல் ரீதியிலான உணர்வுகளை தூண்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் செயலை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற குழுக்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்போம்," என்று கூறினார்.
"சென்னை டாக்ஸ்" யூட்யூப் குழுவினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பானதாக அமையும் அந்த சேனல் குழுவினரின் செயல்பாடு குறித்து யூட்யூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதுவோம். இதுபோன்ற செயல்பாடு யூட்யூப் பயன்பாட்டு கொள்கைகளுக்கும் புறம்பானது. எனவே, அவர்களே இந்த செயலை ஏற்க மாட்டார்கள். இதுபோன்ற சேனல்களை யூட்யூப் முடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Mahesh Kumar Agarwal
ஆனால், பாலியல் உணர்வைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்ட நபர்களின் செயலுக்காக யூட்யூப் சேனலை முடக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்று பிபிசி தமிழ் கேட்டபோது, "காவல்துறைக்கு அத்தகைய அதிகாரம் கிடையாது. அதே சமயம், சட்டவிரோத செயல்பாடுகளில் ஒரு தனி நபரோ, குழுவோ, நிறுவனமோ ஈடுபட்டால், அவர்கள் சார்ந்த சமூக ஊடக தளத்தின் பக்கத்தை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் அதை முடக்கவும் நடவடிக்கை எடுக்க எங்களால் முடியும்," என்று மகேஷ் குமார் பதிலளித்தார்.
"யூட்யூப் மட்டுமல்ல, எந்தவொரு தளத்தை பயன்படுத்தியும் பெண்களுக்கு எதிரான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம். எங்களுடைய நடவடிக்கை பாரபட்சமின்றி கடுமையாக இருக்கும். சர்ச்சை காணொளிகளை பதிவேற்றியவர்கள், அவர்களாகவே அவற்றை நீக்கி விட்டால் நல்லது, இல்லையென்றால் காவல்துறையின் நடவடிக்கை பாயும்," என்றும் தெரிவித்தார் மகேஷ் குமார் அகர்வால்.
எப்படி ஆரம்பித்தது பிரச்னை?
"'Chennai Talks'" என்ற பெயரில் 2019இல் இருந்து நடத்தப்பட்டு வரும் யூட்யூப் சேனலை 7.10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பொது இடங்களில பல்வேறு தலைப்புகளில் இளைஞர்களிடம் கருத்துகளைப் பெற்று அதை இயன்றவரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் எடிட்டிங் செய்து தங்களுடைய யூட்யூப் பக்கத்தில் வெளியிடுவது இந்த சேனலின் வழக்கம்.
குடிபோதையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் பேசுவது போன்ற காணொளி, யாரு நிறைய Sight அடிப்பாங்க?!? Love Break Up ஆன பசங்க தான் பிடிக்கும்", Bike இருந்தா Girls தானா வந்து விழுவாங்க" Girls Kiss கொடுத்தாதான் Accept பண்ணுவிங்களா? என அந்த சேனலில் இடம்பெற்ற காணொளிகளுக்கு வைக்கும் தலைப்பே அதில் பேசுவோர் வெளிப்படுத்தும் கருத்துகளை பார்க்கத்தூண்டும் - இந்த ஆர்வத்தை தூண்டி பார்வையாளர்களின் எண்ணிக்கையை பெருக்குவதே இந்த சேனலின் நோக்கம்.
இப்படியாக, நூற்றுக்கணக்கான காணொளிகளை பதிவேற்றியிருக்கும் இந்த சேனலின் உச்சமாக, சமீபத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் பெண்கள் பாலியல் உறவு மற்றும் பாலியல் உணர்வை ஏற்படுத்தும் வகையிலான கேள்விகளை பேட்டி எடுப்பவர் கேட்பதும் அதற்கு பதிலளிக்கும் பெண் வெளிப்படையாக பேசுகிறேன் என்ற பெயரில் மிகவும் ஆபாசமாக பேசுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.
இந்த காணொளியின் வெட்டப்பட்ட காட்சிகள், வாட்சாப் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அந்த காணொளிக்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் சமூக ஊடக பயனர்களும் பதிவிடத் தொடங்கினார்கள்.
பெசன்ட் நகரில் வாக்குவாதம்

பட மூலாதாரம், DCP ADYAR
இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரை சாலையில் இந்த சேனலை சேர்ந்தவர்கள் அங்கு வருவோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செல்போன், மைக்ரோபோன்கள் சகிதமாக பேட்டி எடுக்க வற்புறுத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து அங்கு ரோந்துப்பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் சண்முக சுந்தரம் ஆகியோருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் நிகழ்விடத்துக்கு சென்றனர். அப்போது மூன்று இளைஞர்கள் மைக் மற்றும் கேமிராவை கொண்டு பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை நேர்காணல் எடுப்பது மற்றும் அதை தட்டி கேட்கும் பொதுமக்களை ஆபாசமான வார்த்தைகளால் மிரட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதை பார்த்து அவர்களை விசாரணைக்காக சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்களின் பெயர் தினேஷ் (31), ஆசின் பாத்சா (23), அஜய் பாபு (24) என தெரிய வந்தது. இதில் தினேஷ் சேனலை நடத்தி வருபவராகவும், ஆசின் தொகுப்பாளராகவும், அஜய் பாபு ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளனர்.
"இந்த குழுவினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு வரும் காதலர்கள் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து கேளிக்கையாக பேசி விடியோ பதிவு செய்வது வழக்கம். பெண்களை ஆபாசமாக காட்டும் வகையில் காணொளியை பதிவு செய்வதும், பிறகு அந்த காணொளியில் அந்த பெண்கள் ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் பேசும் வார்த்தைகளை மட்டும் கோர்வை செய்து தங்களுடைய யூட்யூப் சேனலில் பதிவேற்றி வருவதும் தெரிந்தது. இவ்வாறு சுமார் 200 க்கும் அதிகமான காணொளிகளை இந்த குழுவினர் யூட்யூப் சேனலில் பதிவேற்றியிருக்கிறார்கள்," என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கும்பல் பொதுமக்களிடம் பேச்சு கொடுப்பதற்கு முன்பாக, தங்களுக்கு தெரிந்த பெண்களையும் இளைஞர்களையும் யதார்த்தமாக அங்கு செல்வோர் போல அனுப்பி வைப்பார்கள். காதலர்கள் அல்லது இளைஞர்கள் முன்னிலையில் சேனல் குழுவினர் முதலில் தாங்கள் ஏற்பாடு செய்த நபர்களிடம் நேர்காணல் எடுத்து சகஜமாக பேசுவது போல காணொளியை பதிவு செய்வார்கள்.
இதை பார்க்கும் காதலர்கள் அல்லது பெண்கள் அல்லது இளைஞர்களிடம் "இது பிராங் ஷோ, நீங்களும் பேசுங்கள்" என்று ஆசை காட்டி அவர்களிடம் பேச்சு கொடுப்பார்கள். அப்போது ஆபாசமான கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில்களைப் பெற்று பிறகு அந்தப் பகுதியை மட்டும் வெட்டிக்கோர்த்து அந்த காணொளியை பதிவேற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளதால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாலியல் தொடர்பாக பெண் பேசும் சர்ச்சைக்குரிய காணொளி தற்போது அந்த பக்கத்தில் இருந்து அழிக்கப்பட்டிருக்கிறது.
"நடிக்க பணம் கொடுத்தார்கள்"
இந்த விவகாரம் தொடரபான தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், சர்ச்சைக்குரிய காணொளியில் பேசிய பெண், தான் ஒரு பிரபலமான நபர் என்றும் ஏற்கெனவே எழுதி வைத்த ஸ்கிரிப்டின்படி நடிக்க தனக்கு ரூ. 1,500 கொடுத்து சேனல் குழுவினர் பேச வைத்ததாகவும் கூறியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
மேலும், கிறிஸ்துமஸுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த காணொளியில் ஆபாசமாக தான் பேசியதற்கு பார்வையாளர்கள் கருத்துகளை பதிவிட்டிருந்தால் அதை நீக்குமாறு நிபந்தனை விதித்ததாகவும் ஆனால், அவ்வாறு அந்த குழுவினர் செய்யாததால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியதாக அந்த ஊடக தகவல்கள் தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல் குறித்து தானே காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக அந்த பெண் கூறியதாக சில ஊடக தகவல்கள் மேலும் கூறின.
ஆனால், இந்த தகவலை மறுக்கும் காவல்துறையினர், பெசன்ட் நகர் பகுதியில் உள்ள பெண்கள் சிலர் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரிலேயே அந்த குழுவினரை விசாரணைக்கு அழைத்து வந்ததாக தெரிவித்தனர். அந்த காணொளியில் இடம்பெற்ற பெண்ணை விசாரணைக்கு அழைக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வருவாய் தரும் யூட்யூப் சேனல்கள்
யூட்யூப் சமூக ஊடகத்தில் அதிகம் பார்வையாளர்கள் இருந்தால், அந்த பக்கத்தில் விளம்பரத்தை வெளியிடும் யூட்யூப் நிறுவனம், தனது தளத்தில் சேனலை நடத்துவோருக்கும் பணம் கொடுக்கிறது. இதனால் இது சிலருக்கு தொழிலாகவே மாறியிருக்கிறது.
அந்த வகையில், பல இல்லத்தரசிகள் சமையல் குறிப்புகளுக்காக பக்கம் நடத்துவது, தொழில்முனைவோர் தங்களின் தொழில் தேவைக்காக யூட்யூப் பக்கத்தை நடத்துவது, அரசியல் தலைவர்கள் தங்களுடைய பிரசார நடவடிக்கைக்காக பக்கத்தை நடத்துவது என எல்லா தரப்பினரின் தேவைக்கான தளமாக யூட்யூப் உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தியே குறுக்கு வழியில், அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்குடன் சர்ச்சைக்குரிய காணொளிகளை பதிவேற்றி அதன் மூலம் பணம் சம்பாதிக்க சிலர் முயல்கிறார்கள்.
"சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி யூட்யூப் சேனல் நடத்துவோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதே சமயம், பாலியல் ரீதியிலான உணர்வுகளை தூண்டும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்படியும் நடவடிக்கை எடுக்க முடியும்," என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













