கொரோனா தடுப்பூசி: இந்திய தயாரிப்பாளர்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், EPA/DIVYAKANT SOLANKI

    • எழுதியவர், உண்மை கண்டறியும் குழு
    • பதவி, பிபிசி செய்தி

உலக அளவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 சதவிகிதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. ஆனால் அமெரிக்காவிற்குப் பிறகு, கோவிட் -19 தொற்றின் அதிக பாதிப்பும் இந்தியாவில்தான் ஏற்பட்டுள்ளது.

இந்தியா தனது மக்களுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமல்லாமல் உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதான தனது உறுதிப்பாட்டையும் நிறைவேற்ற வேண்டும். இது சாத்தியமா?

இந்தியா எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்?

இந்தியாவில் இப்போது இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் அஸ்ட்ராசெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின்.

இந்தியாவில் வேறு சில தடுப்பூசி தயாரிப்புகளும் பரிசோதனை அளவில் உள்ளன.

இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் உற்பத்தியை அதிகரித்துள்ளன. ஒவ்வொரு மாதமும் 6 கோடி முதல் 7 கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகளை தங்களால் தயாரிக்க முடியும் என்று இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஒரு ஆண்டில் 20 கோடி தடுப்பூசிகளை தன்னால் தயாரிக்க முடியும் என்று பாரத் பயோடெக் கூறுகிறது. இருப்பினும் தற்போது அந்த நிறுவனத்திடம் 2 கோடி டோஸ் கோவேக்சின் மட்டுமே உள்ளது.

வேறு பிற நிறுவனங்கள் தயாரித்துவரும் தடுப்பூசிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுள்ள நிலையில் அந்த நிறுவனங்களும் இந்திய அதிகாரிகள் மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனால் தடுப்பூசி தயாராகும்போது அதை எளிதில் வழங்க முடியும். ஆனால் அவை தொடர்பான அதிக தகவல்கள் தற்போது இல்லை .

இந்தியாவின் தேவை எவ்வளவு?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

ஜூலை இறுதிக்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசிகளை போடப்போவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்கல் திட்டம் ஜனவரி 16 ஆம் தேதி துவங்க உள்ளது. ஆரம்பத்தில் முன்னணி மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். பிறகு ஏழு மாதங்களில் 60 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட திட்டம் வரையப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 8.5 கோடி டோஸ்.

இந்தியாவின் பங்கு என்ன?

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, உலக சுகாதார அமைப்பால் ஆதரிக்கப்படும் கோவேக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நடுத்தர வருமான நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம்.

இந்த திட்டத்தின் கீழ் 20 கோடி டோஸை வழங்குவதாகக கடந்த ஆண்டு செப்டெம்பரில், சீரம் நிறுவனம் கூறியது . இது ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி அல்லது அமெரிக்காவின் நோவேக்ஸ் மருந்தாக இருக்கலாம்.

இந்த ஒப்பந்தத்தை 90 கோடி டோஸாக உயர்த்தும் வாய்ப்பு உள்ளது என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா பிபிசியிடம் தெரிவித்தார்.

இது நடந்தால், இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 100 கோடி டோஸாக இருக்கும்.

உற்பத்தியை மாதத்திற்கு 1 கோடியாக உயர்த்துவது தனது முயற்சி என்று அந்த நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்தது.

கோவேக்ஸ் திட்டத்துடன் கூடவே ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை வழங்குவதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா பல நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது.

தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இந்த மாத தொடக்கத்தில் பூனாவாலா கூறினார். ஆனால் இது சாத்தியம்தானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வங்கதேசம் கவலை தெரிவித்த பின்னர், ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று இந்திய அரசு பின்னர் தெளிவுபடுத்தியது.

வங்கதேசத்துடன் 3 கோடி பூர்வாங்க டோஸ்களை வழங்கும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

"உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக விளங்கும் இந்தியா, அண்டை நாடுகளுக்கும் உலகின் பிற பகுதிகளுக்குமான தனது கடமைகளை முழுமையாக அறிந்திருக்கிறது," என்று வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

கொரோனா

பட மூலாதாரம், EPA

இது தவிர சீரம் நிறுவனம் , செளதி அரேபியா, மியான்மர் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுடனும் ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. ஆனால் அந்த நாடுகளுக்கு எவ்வளவு தடுப்பூசி, எப்போது தேவை என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நேபாளம், பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை பெற ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தனது முன்னுரிமை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும் என்று பூனாவாலா கூறியுள்ளார்.

"ஆரம்ப தேவைகளை நாங்கள் பூர்த்திசெய்தவுடன், விரைவில் அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்குவோம்,"என்று அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் இந்திய அதிகாரிகள் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளதாக கோவேக்ஸ் திட்டத்தை இயக்க உதவுகின்ற உலகளாவிய தடுப்பூசி கூட்டணி (Gavi) யின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.

கோவேக்ஸ் திட்டத்திற்கான உறுதிப்பாட்டில் எந்த தாமதமும் ஏற்படாது என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோவேக்ஸ் திட்டம் ஒரு சர்வதேச கடமையாகும் என்று வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹீத் ஜமீல் விளக்குகிறார். இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே மற்ற நாடுகளுடன் செய்து கொண்ட இருதரப்பு ஒப்பந்தங்களை தடைசெய்தால் அது நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

"தற்போதைய நிலையைப்பார்க்கும்போது இந்தியாவில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஏற்படும் என்ற கவலை எனக்கு இல்லை," என்று அவர் கூறினார்

உண்மையில் மக்களுக்கு எவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுகிறோம் என்பதில்தான் சிக்கல் ஏற்படும் என்று தான் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசிகளுக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடி குப்பிகளைப் பெறுவது மற்றொரு சாத்தியமான இடையூறாகும். குப்பிகளின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று உலகம் முழுவதும் கவலை உள்ளது. இருப்பினும், இதுபோன்ற எந்த ஒரு பொருளின் பற்றாக்குறையை, தான் இதுவரை எதிர்கொள்ளவில்லை என்று இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: