தமிழகத்தில் திறக்கப்படும் பள்ளிகள்: காத்திருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் என்ற அளவில் வகுப்புகள் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால், அது அந்த வகுப்புகள் எப்படி நடத்தப்படும் என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவுவுகிறது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், வழக்கமாக ஜூன் மாதம் நடக்க வேண்டிய மாணவர் சேர்க்கை, ஆகஸ்ட் மாதம்தான் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். வழக்குகளும் தொடரப்பட்டன.
இதற்குப் பிறகு பள்ளிக்கூடங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலும், பள்ளிகள் திறப்பு குறித்த சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.
"பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் பல அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில், மாணவர்கள் எப்படி பிரித்துக்கொள்ளப்படுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பனிடம் கேட்டபோது, "இது குறித்த கவலை தேவையில்லை. இப்போது பள்ளிக்கூடங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாணவர்கள் கூடுதலாக இருந்தால், வழிகாட்டு நெறிமுறைகளைப் பொறுத்து அந்தந்தப் பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்கள் முடிவு செய்வார்கள். விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துத்தநாகம் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை என்ன மாத்திரைகள் என்பது குறித்தும் சுகாதாரத்துறை விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, 50 பேருக்கு ஒரு குடிநீர் குழாய், 20 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர், மாணவியருக்கென அதிகபட்சமாக, தலா இரு கழிப்பறைகளே உள்ளன. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தலா 10 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வருகின்றன. ஆனால், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுவதால் தற்போதைய சூழலில் இது ஒரு பிரச்னையாக இருக்காது என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை காலையில் அறிவித்தார்.
பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், பள்ளிகள் திறப்பு குறித்த சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பினால்தான் நோய்த்தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்: ராணுவப் புரட்சி அல்ல என்கிறார் பிரதமர்
- ரஞ்சன் ராமநாயக்க: இலங்கை எம்.பிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
- பிராமண அர்ச்சகரை திருமணம் செய்தால் ரூ. 3 லட்சம் - கர்நாடகாவில் இப்படியும் ஒரு திட்டம்
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












