பிராமண அர்ச்சகரை திருமணம் செய்தால் ரூ. 3 லட்சம் - கர்நாடகாவில் இப்படியும் ஒரு திட்டம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
கர்நாடகாவில் பிராமண அர்ச்சகரை திருமணம் செய்து கொள்ளும் ஏழைப் பிராமண பெண்ணுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில பிராமணர் மேம்பாட்டு வாரியம் முடிவு செய்திருப்பது, அரசியல் மற்றும் அரசியல் அல்லாத வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மூன்று ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அளிக்கப்படும் இத்தொகை இப்போது சிறியதாகத் தெரியலாம். ஆனால், பிராமணர்களுக்கான இத்திட்டம், கர்நாடகாவில் மட்டும் இருக்கும் திட்டம் அல்ல. ஏற்கெனவே ஆந்திர பிரதேசத்தில் கூட உள்ளது, கேரளா போன்ற தென் மாநிலத்தின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
``நிரந்தர வருமானம் இல்லை என்பதால் அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மணமகள் கிடைப்பதில்லை. நகர்ப்புரங்களில், அவர்கள் வாழ்க்கையை சமாளிக்க முடியும். கிராமப் பகுதிகளில் அப்படியில்லை. இந்த ரூ. 3 லட்சம் என்பது கூட அவர்களுக்கு பெரிய தொகை ஆக இருக்கும்'' என்று கர்நாடக பிராமணர் வாரியத்தின் தலைவர் எச்.எஸ். சச்சிதானந்த மூர்த்தி பிபிசியிடம் கூறினார்.
``நிரந்தர வருமானம் இல்லை என்பது மட்டுமல்ல. அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மணமகள் கிடைக்காததற்கு சமூக காரணங்களும் உள்ளன'' என்று கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷாம்பூ நம்பூதிரி பிபிசி இந்தி பிரிவிடம் தெரிவித்தார்.
திட்டத்தின் மூலம் என்ன கிடைக்கும்?
கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட கர்நாடக வாரியம், `அருந்ததி' மற்றும் `மைத்ரேயி' என்ற பெயர்களில் பெண்கள் நலனுக்கான இரு திட்டங்களை செயல்படுத்துகிறது. அருந்ததி திட்டத்தின் கீழ், திருமணத்தின்போது மணமகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இதற்கான தகுதிகள்: பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்; பிராமணராக இருக்க வேண்டும்; கர்நாடகாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்; அவர்களின் ``முதலாவது திருமணம்'' ஆக இருக்க வேண்டும்.
``சில நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க இது உதவியாக இருக்கும். இதுவரை 500 பயனாளிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்'' என்று மூர்த்தி தெரிவித்தார்.
அருந்ததி திட்டத்தின் கீழ், தம்பதியினருக்கு, திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.3 லட்சம் அளிக்கப்படும்.
இதற்கான தகுதிகள்: இருவருமே பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தினராக இருக்க வேண்டும்; அவரக்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்; அவர்களுக்கு ``முதல் திருமணம்'' ஆக இருக்க வேண்டும்.
மூன்று ஆண்டு காலத்திற்குள் அவர்கள் விவாகரத்து செய்தால், பணத்தை யாருக்குத் தருவீர்கள்?
``நாங்கள் பணமாகத் தருவதில்லை என்பது முதல் விஷயம். வங்கியில் அவர்களின் பெயர்களில் வாரியம் நிரந்தர வைப்பு நிதி செலுத்தும். மூன்று ஆண்டு நிறைவடையும்போது, வட்டியுடன் சேர்த்து அவர்களின் பெயர்களில் உள்ள கணக்கிற்கு நாங்கள் பணத்தை மாற்றித் தந்துவிடுவோம்'' என்றார் மூர்த்தி.

பட மூலாதாரம், Getty Images
``இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏற்கெனவே நாங்கள் இப்போது 25 பயனாளிகளைத் தேர்வு செய்திருக்கிறோம்'' என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, ஆந்திர பிரதேசத்தில் பூசாரிகள் அல்லது அர்ச்சகர்களுக்குத் திருமணம் நடக்கும்போது மணமகளுக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது.
``பெரும்பாலான பூசாரிகளுக்கு மாதந்தோறும் நிரந்தரமான அளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை'' என்று ஆந்திர பிரதேச பிராமணர் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் சீனிவாஸ் ராவ், பிபிசி இந்திப் பிரிவிடம் கூறினார்.
பிராமணர்களில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு பல்வேறு கல்வி வகையில், பல்கலைக்கழகத்துக்கு முந்தைய நிலையில் தொடங்கி, டிப்ளமோ வகுப்புகள், தொழிற் கல்விகள் போன்றவற்றுக்கு இரண்டு வாரியங்களுமே நிதி உதவி அளிக்கின்றன.
இந்த இரு மாநிலங்களும், தெலங்கானாவும் தான் தென்னிந்தியாவில் சாதி அடிப்படையிலான கார்ப்பரேஷன் அல்லது வாரியம் மூலம், தொழில்முனைவோர் சிறு தொழில்கள் தொடங்க மானியத்துடன் முதலீட்டு வசதியை அளிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன.
``பிராமணர் சங்க்சேம பரிஷத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தெலங்கானா முதல்வர் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.சிகள் மற்றும் பிறரைப் போல பிராமணர்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் சில வசதிகளைப் பெறுவதற்கான முயற்சியாக இது உள்ளது'' என்று தெலங்கானா பிராமணர் சங்க்சேம பரிஷத் துணைத் தலைவர் வி.ஜே. நரசிம்ம ராவ் தெரிவித்தார்.
கர்நாடகாவில், 2018-ல் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்குத் தலைமை ஏற்றிருந்த முதல்வர் எச்.டி. குமாரசாமி காலத்தில், பிராமணர் மேம்பாட்டு வாரியம் அமைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பி.எஸ். எடியூரப்பா முதல்வரான பிறகு அதற்கு அதிக நிதி கிடைத்தது.

பட மூலாதாரம், Getty Images
ஏன் ஆச்சரியம் எழுகிறது?
பிராமண அர்ச்சகர்களின் நிலைமை அல்லது அவர்களின் பணிச் சூழல் பற்றி யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
``அர்ச்சகர் தொழில் செய்பவருக்கு அதிக சுதந்திரம் இருக்காது. அரசுப் பணியில் இருந்தால், விடுமுறை எடுத்துக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும். அப்படி இல்லாதவர்களுக்கு, நிறைய பிரச்னைகள் உண்டு. தங்கள் மனைவியுடன் சந்தைக்கோ திரைப்படத்துக்கோ செல்வதற்குகூட அவர்களுக்கு நேரம் இருக்காது. அவர்கள் கோயிலுடன் கட்டுப்பட்டவர்களாக அல்லது பூசை வேலைகளில் கட்டுண்டவர்களாக இருப்பார்கள். அப்படி உள்ள பிராமண அர்ச்சகரை திருமணம் செய்து கொள்ள யார் விரும்புவார்கள்'' என்று நம்பூதிரி கேள்வி எழுப்பினார்.
அது மட்டும் அல்ல. ``அர்ச்சகர் பயிற்சியின் போது, அவர்கள் வேறு எதுவும் செய்ய முடியாது என்பது எதார்த்தமான உண்மை. குறைந்தபட்சம் கேரளாவில், தேர்வுக் கொள்கை மற்றும் நடைமுறைகளை கவனிக்க ஒரு தேவசம் வாரியம் இருக்கிறது. அங்கு அர்ச்சகர் அனைவரைப் பற்றிய தகவல்களும் இருக்கும். அவர்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்க அந்த வாரியத்தின் மூலம் ஒரு திட்டம் அமல்படுத்தப் படுகிறது'' என்று குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு இன்ஸ்டிட்யூட் முன்னாள் இயக்குநர் டாக்டர் டி. நாராயணா பிபிசி இந்தி பிரிவிடம் தெரிவித்தார்.
``நகரப் பகுதியைச் சேர்ந்த எந்தப் பெண்ணும், அர்ச்சகரை திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. பெங்களூராக இருந்தால் மட்டும் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மையில், கர்நாடகாவில் மலநாடு பகுதியில் பாக்குமரம் வளர்ப்பவர்களைக் கூட திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா மற்றும் இதர வட மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ராமச்சந்திரபுரம் மடத்தின் சுவாமியை அணுகும் அளவுக்கு பிராமண ஆண்களின் நிலைமை மோசமாக உள்ளது'' என்று கர்நாடக ராஜ்ய அர்ச்சகர் சங்கத்தின் தலைவர் டி.எஸ். ஸ்ரீகாந்த் மூர்த்தி பிபிசி இந்தி பிரிவிடம் தெரிவித்தார்.
``பிரச்னையை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு, இந்த வாரியத்துக்கு ஒதுக்கும் நிதி மிகக் குறைவாக உள்ளது'' என்கிறார் ஸ்ரீகாந்த் மூர்த்தி.
``தென் மாநிலங்களில் முக்கியமான மற்றும் பெரிய கோயில்களில் வேலை பார்க்கும் சில அர்ச்சகர்களைத் தவிர, மற்றவர்கள் ஏழைகளாக உள்ளனர். யாராவது உதவி செய்ய முடியுமானால் நல்லது. ஆனால், வரதட்சிணை, நிலம், சொத்து அல்லது பணம் என்ற ஊக்கப்படுத்தும் விஷயங்கள் மூலமாக திருமணம் நடக்கக் கூடாது என்று விரும்புகிறேன். திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையிலான ஒப்பந்தம்'' என்று சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான இன்ஸ்டிட்யூட் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஆர்.எஸ். தேஷ்பாண்டே கூறுகிறார்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
- கமல் கட்சியின் வாக்குறுதி: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் நடைமுறையில் சாத்தியமா?
- சிகாகோவில் உலக நாடுகளை வியக்க வைத்த விவேகானந்தரின் உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












