டெல்லி விவசாயிகள் போராட்டம்: 'விருதுகளை திருப்பி தருவோம்' முன்னாள் விளையாட்டு வீரர்கள் அறிவிப்பு

இன்றைய நாளேடுகளில் வெளியான சில முக்கியச் செய்திகள்:
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை திரும்பிப் பெறாவிட்டால், நாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பித் தருவோம் என்று முன்னாள் விளையாட்டு வீரர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.
அர்ஜுனா, பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களும் இதில் அடக்கம்.
சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பிப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருந்திரளாக டெல்லி மாநில எல்லைப் பகுதிகளில் போராடி வருகின்றனர்.
இது குறித்து தி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டத்துக்காக டெல்லி செல்லும் வழியில் விவசாயிகள் மீது போலீசார் வன்முறையைப் பிரயோகித்ததைக் கண்டித்து தாங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சில முன்னாள் விளையாட்டு வீரர்களை மேற்கோள்காட்டியுள்ளது தி ஹிந்து செய்தி.
அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்ற முன்னாள் மல்யுத்த வீரர் கர்த்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரர் சஜ்ஜன் சிங் சீமா, அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் ராஜ்வீர் கௌர் ஆகியோர் விருதுகளைத் திருப்பித் தரப்போவதாக கூறியுள்ளவர்களில் அடங்குவர்.
அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற ஐ.ஜி.
"நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக அவர்கள் நடத்திவந்த போராட்டங்களில் சிறு வன்முறைகூட இல்லை. இப்போது டெல்லி செல்லும் பேரணி மீது அரசு கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தாக்குகிறது. எங்கள் முதியவர்கள், சகோதரர்களின் டர்பன்கள் கழன்று விழுகின்றன. இதற்குப் பிறகு, இந்த விருதுகளால், கௌரவங்களால் எங்களுக்கு ஆகப்போவது என்ன?" என்று கேட்டுள்ளார் சஜ்ஜன் சிங் சீமா.
பஞ்சாப் போலீஸில் ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்றவர் இவர்.
விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால், அத்தகைய சட்டங்களை மத்திய அரசு ஏன் அவர்கள் மீது திணிக்கவேண்டும் என்று கேட்கிறார் இவர்.
டிசம்பர் 5-ம் தேதி டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகை முன்பு தங்கள் விருதுகளை வைத்துவிடப் போவதாகவும் இந்த விளையாட்டு வீரர்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிடுகிறது தி ஹிந்து செய்தி.
குடியிருப்புகளின் சாதிப் பெயர்களை அகற்ற மகராஷ்டிரா முடிவு

பட மூலாதாரம், Getty Images
மகாஷ்டிர மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை அகற்ற முடிவு செய்துள்ளது அந்த மாநில அரசு.
இது குறித்து தினத்தந்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அந்தந்த பகுதியில் வாழ்ந்து வரும் குறிப்பிட்ட சமூக உறுப்பினர்களது பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. வளர்ந்து வரும் மராட்டிய மாநிலத்தின் ஒரு பகுதியாக இதனை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இது பற்றி மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மகர்-வாடா, பவுத்-வாடா, மாங்க்-வாடா, தோர்-வாஸ்தி, பிராமன்-வாடா, மாலி-கல்லி ஆகிய பெயர்கள் பொது இடங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.
இதற்கு பதிலாக சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர் மற்றும் கிரந்தி நகர் என புதிய பெயர்கள் வழங்கப்படும்.
சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவை பேணப்பட இதுபோன்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்து உள்ளது, என்கிறது தினத்தந்தி செய்தி.
இதுபற்றி அமைச்சர் அஸ்லாம் ஷேக் கூறும்பொழுது, ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மக்களை பிரித்து ஆள்வதற்காக இதுபோன்று சாதி அடிப்படையிலான பெயர்கள் காலனிகளுக்கு சூட்டப்பட்டன.
அதனால், அவற்றுக்கு பதிலாக நாட்டுக்கு சேவையாற்றிய மக்களின் பெயர்கள் சூட்டப்படும் என கூறினார். இதன்படி, மராட்டியத்தில் அனைத்து குடியிருப்புகளின் சாதி அடிப்படையிலான பெயர்களை மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியதாக மேலும் தெரிவிக்கிறது தினத்தந்தி செய்தி.
சிலிண்டர் விலை அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்ந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினகரன்.
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ம் தேதியன்று இதன் விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில் தற்போது ரூ.610 லிருந்து ரூ.660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 மாதங்களாக சிலிண்டர் விலை ரூ.610 ஆக இருந்த நிலையில் ரூ.50 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்கிறது தினகரன் செய்தி.
பிற செய்திகள் :
- புரெவி புயல் நிலவரம்: பாம்பன், தனுஷ்கோடி, பாம்பனில் கடல் சீற்றம்
- "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
- விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் எங்கே? அய்யாக்கண்ணு என்ன செய்கிறார்?
- முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது - தொடரும் சர்ச்சை வரலாறு
- சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன் - அசத்தும் தமிழக வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












