மருத்துவ கல்லூரிச் சேர்க்கை - அதிகரிக்கும் போட்டி: யாருக்கு சீட் கிடைக்கலாம்?

பள்ளி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சக்திவேல்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்க நவம்பர் 12ஆம் தேதி ஐந்து மணிக்குள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 16 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் முன்பே, எவ்வளவு மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது என்பது குறித்து அலசல்கள் துவங்கியிருக்கின்றன.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கென நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 99,610 பேர் தேர்வெழுதினர். இதில், 57,215 பேர் தகுதி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் இரண்டு மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்ணும், 50 மாணவர்கள் 705க்கும் அதிக மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து நீட் தேர்வை எழுதிய மாணவர்களில் 11,978 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

4,211 மாணவர்கள் 500க்கும் அதிகமான மதிப்பெண்களையும் 1029 மாணவர்கள் 600க்கும் அதிகமான மதிப்பெண்களையும் 205 மாணவர்கள் 650க்கும் அதிகமான மதிப்பெண்களையும் ஏழு மாணவர்கள் 700க்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

இதனால், இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு அதிக போட்டி நிறைந்ததாக மாறியுள்ளது.

மருத்துவ படிப்பில் எவ்வளவு இடங்கள் உள்ளன?

தமிழக அரசு நடத்தும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் மொத்தமுள்ள இடங்கள் 5400. இதில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் 3300. தனியார் மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் 2100.

அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு (15 சதவிகிதம்) போக மீதமுள்ள இடங்கள் 2784. தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 1050. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 1050 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களாகும்.

இந்த இடங்ளுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்தினாலும் கல்விக் கட்டணம் பெரிய அளவில் வேறுபடும். மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில்தான் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர் என்பதால், மாணவர்கள் பெரும்பாலும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 3834 இடங்களில் சேரவே விரும்புகின்றனர்.

மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் எவ்வளவு?

அரசு மருத்துவ கல்லூரியில் கட்டணம் 13,610 ரூபாய் மட்டுமே. அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்குக் கட்டணம் 4 லட்சம் ரூபாய். இதுவே, தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக 12.5 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வில், பொதுப்பிரிவில் 520 மதிப்பெண், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 470 மதிப்பெண், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவில் 458 மதிப்பெண், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 435 மதிப்பெண், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 360 மதிப்பெண், அருந்ததியினர் பிரிவில் 301 மதிப்பெண், பழங்குடியினர் பிரிவில் 267 மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

பள்ளி

பட மூலாதாரம், Getty Images

2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலந்தாய்வில் பொதுப் பிரிவில் நீட் மதிப்பெண் 429வரை பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 361 மதிப்பெண்வரை பெற்றவர்களுக்குச் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் 375 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் நீட் மதிப்பெண் 344 பெற்றவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு 4211 மாணவர்கள் 500க்கும் அதிகமான நீட் மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதால் பெரும்பாலான இடங்கள் இவர்களுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது.

''இந்த ஆண்டு கலந்தாய்வு மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும்" என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

''கடந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை நீட் தேர்வை எழுதி அதிக மதிப்பெண் பெற்றவர்கள். இந்த ஆண்டு கலந்தாய்விலும் இவர்களின் சேர்க்கையே அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டில் ஒவ்வொரு பிரிவிலும் ஒதுக்கீடு பெற்ற மதிப்பெண்ணை விட 70 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாகப் பெற்றவர்களுக்கே இந்த ஆண்டு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 250 முதல் 300 பேர் இடம்பெறுபவர்கள். இவர்களில் எவ்வளவு மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது தரவரிசைப் பட்டியல் வெளியான பின்பு தெரிய வரும்" என்கிறார் அவர்.

கடந்த கல்வியாண்டில் (2019 -20) தமிழக அரசு நடத்திய பயிற்சி வகுப்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,132 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 6,692 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 1,633 பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 747 பேர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 'Tamil Nadu Admission to Undergraduate Courses in Medicine, Dentistry, Indian Medicine and Homeopathy on preferential basis to the students of Government Schools Bill 2020' என்ற சட்டத்தை இயற்றி உள்ளது.

இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் 40 முதல் 50 சதவிகிதம் பேருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது.

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் நடக்கும் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு தொடங்கும்போது மூன்று முறை மட்டுமே எழுதலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் நீட் தேர்வு எழுதலாம் என்று மாற்றி இருப்பதால் பள்ளிக் கல்வி முடித்த பின்பு நீட் தேர்வுக்கு ஒன்றிரண்டு வருடங்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களே தற்போது அதிகளவில் உள்ளனர்.

மருத்துவ கலந்தாய்வு எப்படி நடக்கும்?

இந்த ஆண்டு கலந்தாய்வு எப்படி நடக்கும் என்பது குறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் செயலர் மருத்துவர் செல்வராஜிடம் கேட்டபோது, "மாணவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் தங்களுடைய சான்றிதழ்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான உதவி மையத்தை நாடலாம். தரவரிசை வெளியிட்ட பின்பு நேரிடையாக மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் வகையிலேயே நடக்கும். இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முதலிலேயே நடத்தப்படும். அதன்பின்னரே பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும். தமிழகத்தில் புதிதாகத் தொடங்க திட்டமிட்ட கல்லூரிகளில் ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வுக்குப் பின்னர் மத்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி கிடைத்தவுடன் கூடுதல் இடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆண்டில் உள்ளது போலவே கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: