DC vs SRH: டெல்லி கேபிட்டல்ஸ் முதல்முறையாக ஐபிஎல் இறுதியாட்டத்தில் நுழைந்தது எப்படி?

பட மூலாதாரம், BCCI / IPL
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொதுவாக பல போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கு காரணமாக இருப்பர்; சில போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் வெற்றியை ஈட்டித்தருவர். ஆனால், வெகு சில போட்டிகளில் ஃபீல்டிங்கால் ஆட்டத்தின் முடிவு முற்றிலும் மாறும்.
அபு தாபியில் நடந்த 2020 ஐபிஎல் இறுதியாட்டத்துக்கான தகுதி சுற்றுப்போட்டியில் ஹைதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றதற்கு முக்கிய காரணம் ஃபீல்டிங் தான்.
முதல் முறையாக ஐபிஎல் இறுதியாட்டத்தில் டெல்லி விளையாடவுள்ளதற்கு காரணம் தங்களின் அற்புதமான ஃபீல்டிங் மட்டுமல்ல எதிரணியின் மோசமான பீல்டிங்கும் காரணம்.
ரஷீத் கானின் தேவையில்லாத ஓவர் த்ரோ மற்றும் ஃபீல்டிங்கில் நடந்த பல தவறுகளால் ஹைதராபாத் அணியின் 2020 ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்தது.
ஹைதராபாத் அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்ததால் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியால் அதிக அளவில் ரன்கள் சேர்க்க முடிந்தது.
குறிப்பாக டெல்லி அணியின் ஷிகர் தவான் ஒரு ரன் எடுக்க வேண்டிய பல தருணங்களில் எளிதாக 2 ரன்கள் எடுத்தார். அதே போல் ஹைதரபாத் அணி வீரர்கள் சில கேட்ச்களை கோட்டை விட்டதும் டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்தது.

பட மூலாதாரம், BCCI / IPL
இதற்கு நேர்மாறாக டெல்லி அணியின் ஃபீல்டிங் மிக சிறப்பாக இருந்தது ஹைதராபாத்துக்கு மேலும் நெருக்கடியை அளித்தது.
3 விக்கெட்டுகளை இழந்து வில்லியம்சன் மற்றும் ஹோல்டர் ஆகிய இருவரும் ரன் குவிக்க கடுமையாக போராடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு சிறிதும் வாய்ப்பு அளித்திடாமல் மிக அருமையாக டெல்லி அணி வீரர்கள் களப்பணியாற்றினர்.
அதேபோல் பரபரப்பான இறுதி கட்டத்தில் அனைத்து கேட்ச்களையும் சிறப்பாக பிடித்தது அந்த அணியின் சிறப்பான களப்பணிக்கு சான்று.
ஃபீல்டிங் தவிர வேறு சில அம்சங்களும் இந்த போட்டியின் போக்கு மற்றும் முடிவை மாற்றியது.
புதிய தொடக்க இணையால் கை மேல் பலன்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த டெல்லி அணிக்கு, கடந்த போட்டியில் நடந்தது நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
பிரித்வி ஷா இந்த போட்டியில் அணியில் சேர்க்கப்படாத நிலையில், தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஸ்டாய்னிஸ் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இவ்விரு வீரர்களும் நன்கு அடித்தாட, ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் பெரிதும் தடுமாறினர். ஹோல்டர் வீசிய ஓவரில் ஸ்டாய்னிஸ் 18 ரன்கள் அடித்தார்.
8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது டெல்லி, இது 190 என்ற பெரும் இலக்கை நிர்ணயிக்க உதவியது.
ஷிகர் தவான் இந்த போட்டியில் மிக சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சிக்ஸர், பவுண்டரிகள் மட்டுமல்ல, துரிதமாக ஓடி ரன்கள் சேர்த்த தவான், 50 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இறுதி கட்டங்களில் தனது அதிரடி பேட்டிங் மூலம் ஹெட்மேயர் 42 ரன்கள் குவித்தார்.

பட மூலாதாரம், BCCI / IPL
பவர் ஃபிளேயில் விக்கெட்டுகளை பறிகொடுத்த ஹைதராபாத்
டெல்லி அணியின் தொடக்கத்துக்கு நேர்மாறாக ஹைதரபாத் அணியின் சேஸிங் இருந்தது எனலாம்.
ரபாடா வீசிய மிக அற்புதமான பந்தில் வார்னர் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அணியின் புதிய தொடக்க வீரரான பிரியம் கார்க் மற்றும் அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே ஆகியோர் நீண்ட நேரம் களத்தில் நிலைக்கவில்லை.
45 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதரபாத் அணி பெரிதும் தடுமாறியது.
இந்நிலையில் கேன் வில்லியம்சன் மற்றும் அப்துல் சமத் ஆகியோரின் பேட்டிங் சற்று நம்பிக்கை அளித்தது.
அடிப்பது தெரியாமல் அடிக்கும் தனது அசாத்திய பேட்டிங் பாணியை இந்த போட்டியிலும் வில்லியம்சன் வெளிப்படுத்தினார்.
வில்லியம்சனை விட ஆட்டத்தின் இறுதி கட்டங்களில் மிகவும் அசத்தியவர் அப்துல் சமத் தான். மிக இயல்பாக அதிரடி பேட்டிங் செய்த அவர் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 67 ரன்கள் குவித்தார்.
மிக பெரிய இலக்கை எட்டவேண்டும் என்ற அழுத்தத்தால், இறுதி கட்டத்தில் வரிசையாக ஹைதரபாத் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். ஒரே ஓவரில் ரபாடா 3 விக்கட்டுகளை எடுத்தார்.

பட மூலாதாரம், BCCI / IPL
ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டாய்னிஸ்
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டது டெல்லி அணியின் ஸ்டாய்னிஸ். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் இந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் ஜொலித்தார்.
38 ரன்களை குவித்த அவர், தனது பந்துவீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
மும்பை அணிக்கு எதிராக மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த இறுதியாட்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் மிக மோசமான பேட்டிங்கால் தோல்வியடைந்த டெல்லி இந்த போட்டியில் மிக அற்புதமாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கால் வென்று, மீண்டும் மும்பை அணியை 10-ஆம் தேதி நடக்கும் இறுதியாட்டத்தில் சந்திக்கவுள்ளது.
மும்பையின் மிக சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு மற்றும் டெல்லி அணியின் கணிக்க இயலாத அதிரடி பாணி கடும் சவாலை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
மிக சுவாரஸ்யமாகவும், திருப்பங்கள் நிறைந்ததாகவும் நடந்துவரும் 2020 ஐபிஎல் தொடர் மிக சிறந்த இறுதி போட்டியை பரிசாக அளிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












