கஃபீல் கான்: தேசத்துக்கு அச்சுறுத்தலா அல்லது அடக்குமுறையின் அடையாளச் சின்னமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா
இளம் இந்திய டாக்டர் ஒருவர் தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளின் பேரில் 200 நாட்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருந்தார். தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசு கருதினால், அந்த நபரை கைது செய்வதற்கு தேசப் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.
சர்ச்சைக்குரிய புதிய குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சமாக இருக்கிறது என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் மாணவர்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றியதைத் தொடர்ந்து 38 வயதான குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கஃபீல் கான் குறித்து புகார்கள் எழுந்தன.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த அந்தக் கூட்டத்தில் பேசிய டாக்டர் கான், ஆளும் பாஜக அரசு, ``உண்மையான பிரச்சனைகளைப்'' புறந்தள்ளிவிட்டு, பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார். குழந்தைகளின் ஆரோக்கியம் குறைந்து வருவது, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது, தள்ளாடிக் கொண்டிருக்கும் பொருளாதாரம் பற்றி அவர் பேசினார்.
``நீங்கள் எந்த அளவுக்கு மிரட்டினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். நீங்கள் எந்த அளவுக்கு அடக்கி வைத்தாலும், அப்போதெல்லாம் நாங்கள் மீண்டு எழுந்திருக்கிறோம்'' என்று அப்போது அவர் கூறினார். அந்தக் கூட்டத்தில் சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
டாக்டர் கான் ஆற்றிய உரை உணர்வுகளைத் தூண்டக் கூடிய வகையில் கெடுதலானதாக உள்ளது என்று, முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைப் பேசுவதற்குப் பெயர் பெற்ற சர்ச்சைக்குரிய இந்து மதத் தலைவர் தலைமையிலான ஆட்சி நடைபெறும் உத்தரப் பிரதேச காவல் துறை கூறியது.
அந்த உரையாற்றி 45 நாட்களுக்குப் பிறகு டாக்டர் கான் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
``கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் மாணவர்களிடம் மத உணர்வுகளைத் தூண்டிவிட அவர் முயற்சித்தார். இந்து சமுதாயத்தினருக்கு எதிராக வெறுப்பு, பகைமை, நல்லிணக்கமின்மை, உணர்வுகளை அதிகரிக்கும்படி பேசினார்'' என்று நீதிமன்றத்தில் காவல் துறை கூறியது.
இந்த வாதத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. டாக்டர் கான் ``பகைமை அல்லது வன்முறையைத் தூண்டவில்லை'' என்று செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் நீதிமன்றம் கூறியது. உண்மையில் ``குடிமக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும்'' என்று டாக்டர் கான் அழைப்பு விடுத்தார் என்றும், அதிகாரிகள் அவருடைய உரையில் சில வரிகளை மட்டும் படித்திருக்கிறார்கள் என்றும் இரண்டு நீதிபதிகள் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
``முதலில் அவர் பலிகடா ஆக்கப்பட்டார். இப்போது அரசின் பகைவனாக ஆக்கப்பட்டுள்ளார்'' என்று அவருடைய சகோதரரும், வணிகருமான அடீல் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வெவ்வேறு சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதிலேயே டாக்டர் கானின் காலம் கழிந்துள்ளது. டெல்லியில் இருந்து 800 கிலோமீட்டர் கிழக்கில் உள்ள கோரக்பூரில் 2017 ஆகஸ்ட் மாதம் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தபோது, பணியில் அலட்சியம் காட்டியதாகவும், உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்ததாகவும் கூறி கைது செய்யப்பட்ட அவர், விசாரணை ஏதுமின்றி ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார்.
அப்போது அவர் அங்கு இளநிலை மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதே குற்றச்சாட்டுகளின் பேரில் மருத்துவமனையின் முதல்வர் உள்பட எட்டு அலுவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு லட்சம் டாலருக்கும் மேல் பில் தொகை வராததால், மருத்துவமனைக்கான ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழந்தனர். ஆனால் இந்தப் புகாரை அரசு இதுவரை மறுத்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டாக்டர் கானுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் பணியில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என்று அதிகாரிகள் விசாரணையில் செப்டம்பர் 2019ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்காக அரசுத் தரப்பில் மன்னிப்பு எதுவும் கோரப்படவில்லை.
அரசின் அலட்சியத்தை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் என்பதற்காகவே கான் குறிவைக்கப்பட்டார் என அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கோரக்பூரில் 1,000 படுக்கை வசதிகள் கொண்ட பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் இளநிலை மருத்துவப் பணியாற்றி வந்த டாக்டர் கானின் வாழ்க்கை அன்றிரவு முற்றிலுமாக மாறிவிட்டது. திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த மாற்றம் அமைந்தது.
ஆக்சிஜன் சப்ளை காலியானதாலும், ஆபத்து கால பயன்பாட்டுக்கான 50க்கும் மேற்பட்ட சிலிண்டர்களும் காலியாகிவிட்டதாலும் குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள். அடுத்த 54 மணி நேரத்தில், தன்னுடைய முயற்சியால் மிகுந்த சிரமங்களுக்கு இடையே டஜன் கணக்கில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தாம் ஏற்பாடு செய்ததாக டாக்டர் கான் தெரிவித்தார்.
ஏ.டி.எம். மூலம் தன் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, மருத்துவமனைகள் மற்றும் கடைகளுக்கு அவர் ஓடியிருக்கிறார். துணை ராணுவப் படையினரின் முகாம்களுக்கும் கூட சென்று, உபரியாக இருக்கும் சிலிண்டர்களை வாங்கியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். இரண்டு இரவுகள் கழித்து, மருத்துவமனைக்கு குழாய் மூலமான ஆக்சிஜன் சப்ளை திரும்பவும் அளிக்கப்பட்டது.
தங்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தீர்ந்துவிட்டது என்பதை அறிந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு பிச்சைக்காரனைப் போல அவர் கெஞ்சிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
``24 மணி நேரத்தில் நான் 250 சிலிண்டர்களைக் கொண்டு வந்தேன். இருநூற்றி ஐம்பது! எத்தனை குழந்தைகள் உயிர் பிழைத்தார்கள் அல்லது இறந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னால் ஆன வரையில் நான் முயற்சி செய்தேன்'' என்று டாக்டர் கான் கூறினார்.
அன்றைய நாள் இரவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வருவதில் மற்ற டாக்டர்களும் உதவியதாக கோரக்பூரில் பலர் கூறுகின்றனர். ஆனால், சிலிண்டருக்காக கெஞ்சும் வீடியோ வைரலானதால் டாக்டர் கான் பற்றி அதிகம் பேசப்பட்டது என்கிறார்கள் அவர்கள்.
சில தினங்கள் கழித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த மருத்துவமனைக்குச் சென்றார். முதல்வருடன் நடந்த தனது உரையாடல் தான் தன்னுடைய வாழ்வை ``தலைகீழாக மாற்றிவிட்டது'' என்று டாக்டர் கான் கூறுகிறார்.
சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தது பற்றி ஆதித்யநாத் விசாரித்ததாக டாக்டர் கான் தெரிவித்தார். ஆம் என்று டாக்டர் கூறியபோது, ஆதித்யநாத் ``கோபம் அடைந்து'' பேச்சை பாதியில் நிறுத்தி, ``சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் ஹீரோவாக ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்களா'' என்று கேட்டதாக டாக்டர் கான் கூறுகிறார்.
இதுகுறித்து ஆதித்யநாத் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. டாக்டர் கானை விடுவிக்கக் கோரி பின்னர் சில முறை அவரது குடும்பத்தினர் ஆதித்யநாத்தை சந்தித்தபோது ``நியாயம் கிடைக்கும்'' என்று மட்டும் கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், SURESH SAINI
``இந்த விஷயம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகிவிட்டதால் முதலமைச்சர் கோபம் அடைந்தார்'' என்று டாக்டர் கான் சிறையில் இருந்து எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஓராண்டு கழித்து அவர் ஜாமீனில் விடுதலை ஆகியிருந்தபோது, பஹ்ராய்ச் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்தார் என்று மீண்டும் கைது செய்து 45 நாட்கள் சிறையில் அடைத்தது உத்தரப்பிரதேச காவல்துறை.
மூளை அழற்சி நோயால் ஏற்பட்ட இறப்புகள் பற்றி கூடுதல் தகவல்களை சேகரிக்கச் சென்றதாக டாக்டர் கான் தெரிவிக்கிறார். ``தொடர்ந்து விசாரணையில் இருக்கும் நபராக'' டாக்டர் கான் இருக்கிறார் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பருவமழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று 100க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளதாக டாக்டர் கான் தெரிவித்தார்.
பல பகுதிகளில் காணப்படும் ஆட்கொல்லி நோயாக உள்ள மூளை அழற்சி பாதிப்புக்கு அவர் சிகிச்சை கொடுத்துள்ளார். வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கும் குணம் கொண்ட, கிரிக்கெட் பிரியராக, புத்தகங்களில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் நல மருத்துவராக இருந்த டாக்டர் கான், வெளிப்படையாகப் பேசக் கூடிய, உறுதியான குரலில் பேசும் டாக்டராக, குறிப்பிட்ட விஷயத்துக்கு ஆதரவு திரட்டக் கூடியவராக மாறி இருக்கிறார் என்று அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் டாக்டர் கானை டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஹர்ஜித் சிங் பாட்டி சந்தித்தபோது, எப்படி இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டன என்று கேட்டிருக்கிறார்.
``சிறையில் ஏற்பட்ட அனுபவம் தன்னை இப்படி மாற்றியதாக டாக்டர் கான் என்னிடம் கூறினார். பயத்தை விட்டொழித்துவிட்டதாகத் தெரிவித்தார். என் மக்களுக்காக, என் நோயாளிகளுக்காக இப்போது நான் குரல் கொடுப்பேன் என்று கூறினார்'' என்று டாக்டர் பாட் தெரிவித்தார்.
சக கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்த போது, சிறையில் இருந்த டாக்டர் கான் கடிதங்கள் அனுப்பினார். அவர் எழுதிய ஐந்து கடிதங்களில், இரண்டு கடிதங்கள் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதப்பட்டவை.
``நான் ஒரு டாக்டர். கோவிட்-19 என்ற பெரும் நோயை எதிர்த்துப் போராட நமக்கு நிறைய டாக்டர்கள் தேவை. தயவுசெய்து என்னை விடுதலை செய்யுங்கள். நோயைக் கட்டுப்படுத்துவதில் என்னால் சிறிது உதவிகள் செய்ய முடியும் என்று கருதுகிறேன்'' என்று மோதிக்கு அவர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
டாக்டர் கான் ஓரளவுக்கு கவனத்தை ஒன்று திரட்டும் நபராக மாறிவிட்டார். மோதியின் ஆட்சியில் ``அரசாங்க மற்றும் மத அடக்குமுறையின்'' வாழும் அடையாளச் சின்னமாக டாக்டர் கான் மாறிவிட்டார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களுடன் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார், அவருக்கு அரசியல் நோக்கங்கள் உள்ளன என்று அவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.
``செய்து முடிக்கும் ஒரு போராளியாக அவர் இருக்கிறார். இப்போது மிகவும் உறுதியான நோக்கம் கொண்டவராக இருக்கிறார்'' என்று அவருடன் முன்பு பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவமனை துயர சம்பவத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 4 டாக்டர்கள் உள்ளிட்ட 8 பேரில், டாக்டர் கான் மட்டும் இன்னும் மீண்டும் பணியில் சேர்க்கப்படவில்லை. அரசிடம் இருந்து இன்னும் பாதி சம்பளம் மட்டுமே பெற்று வருகிறார். ``எங்கள் குடும்பத்தை குறிவைத்து அடக்குமுறை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். நாங்கள் அமைச்சர்களை சென்று சந்தித்தோம். செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி இருக்கிறோம்'' என்று அடீல் கான் தெரிவித்தார்.
டாக்டர் கான் குடும்பத்தில் 2 சகோதரிகள் உள்பட மொத்தம் ஆறு பிள்ளைகள் உள்ளனர். காலஞ்சென்ற அவருடைய தந்தை அரசுப் பொறியாளராகப் பணியாற்றினார். பட்டதாரியான அவருடைய தாயார் இல்லத்தரசி.
ஒரு சகோதரர் டாக்டராக உள்ளார், ஒருவர் பொறியாளராக உள்ளார், இன்னொருவர் வியாபாரம் செய்து வருகிறார். சகோதரிகள் வேதியியல் பட்டம் பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் ஓமனில் ஆசிரியையாக உள்ளார்.
டாக்டர் கான் இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு விருந்தினர் விடுதியில் இருக்கிறார். பல் மருத்துவரான அவருடைய மனைவியும், 4 வயது மகள், 18 மாத குழந்தையாக இருக்கும் மகன் ஆகியோரும் அவருடன் வந்து சேரவுள்ளனர். புதன்கிழமை அதிகாலை அவருடைய குடும்பத்தினர் கோரக்பூரில் இருந்து 840 கிலோ மீட்டர் தொலைவுக்கான பயணத்தை காரில் தொடங்கினர்.
``இந்தியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று, மக்களுக்கு சிகிச்சை அளிக்க, தொற்று நோய்களைத் தடுக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்'' என்று விடுதலையான நாளன்று இரவு செய்தியாளர்களிடம் டாக்டர் கான் கூறினார். தீர்க்கமான, தைரியமான போராளி டாக்டர் திரும்ப வந்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - 7 பேர் பலி
- இலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து
- சீனா-பாகிஸ்தான் இணைந்து இந்திய எல்லையில் நடவடிக்கை எடுக்கும் ஆபத்து: பிபின் ராவத் கருத்து
- சுஷாந்த் சிங் வழக்கு: போதைப் பொருள் தடுப்பு பிரிவு ரியா வீட்டில் சோதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












