அசாம் வெள்ளம்: காணுமிடமெல்லாம் தண்ணீரும், மக்களின் கண்ணீரும் - கொரோனாவுக்கு மத்தியில் வடகிழக்கின் பெருந்துயர்

அசாம் வெள்ளம்: காணுமிடமெல்லாம் தண்ணீரும், மக்களின் கண்ணீரும் - வடகிழக்கின் பெருந்துயர்

பட மூலாதாரம், DILIP SHARMA

    • எழுதியவர், திலிப் குமார்
    • பதவி, பிபிசி, அசாமின் ஜேலேங்கி டூப் கிராமத்திலிருந்து

அசாமின் ஜெலங்கி டூப் கிராமத்திற்கு செல்லும் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.

சாலைகள் மட்டும் அல்ல கிராமம் முழுவதும், பார்க்கும் இடத்தில் எல்லாம் தண்ணீர் மயம். வீடுகள் அதில் மூழ்கி இருக்கின்றன.

ஜெலங்கி டூப் கிராமத்தில் ஏழு அரசுப் பள்ளிகள், ஒரு மருந்தகம் மற்றும் தபால் அலுவலகம் உள்ளன. ஆனால் தற்போது அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு ரேஷன் பாக்கெட்டுகளை விநியோகிக்க அரசு சாரா அமைப்பினர் சில வந்திருந்தனர், ஆனால் அங்கு மழை மற்றும் வெள்ள நீர் நிரம்பியிருப்பதைக் கண்டு, அவர்கள் கிராமத்திற்குள் செல்லவில்லை..

பின்னர், அந்த அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரணப் பொருட்களை வாங்கிக்கொள்ளக் கிராமத்திற்கு வெளியே அழைத்தது.

பல நாட்களாக

"எங்கள் கிராமம் கடந்த பல நாட்களாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது" என்று வாழை மரங்கள் மற்றும் மூங்கில் (அசாமி மொழியில் பூர் என்று அழைக்கப்படுகிறது) ஆகியவற்றால் செய்யப்பட்ட படகில் நிவாரணப் பொருட்களைப் பெற வந்த 13 வயது ரிட்டமோனி (பெயர் மாற்றப்பட்டது) பிபிசியிடம் கூறினாள்.

அசாம் வெள்ளம்

பட மூலாதாரம், DILIP SHARMA

"அதனால்தான் நாங்கள் எங்கும் செல்ல இந்தப் படகைப் பயன்படுத்துகிறோம். எனக்குத் தண்ணீரைப் பற்றி பயம் உள்ளது. அதனால் அதிக நீர் இருக்கும் இடத்தில், எனது படகை எடுத்துச் செல்வதில்லை. "

அவள்,"பள்ளி இப்போது மூடப்பட்டுள்ளது. எங்கள் ஆசிரியர்கள் பலர் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள், ஆனால் வீடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால், என்னால் சரியாகக் கல்வி கற்க முடியவில்லை," என்கிறாள்.

மூன்று கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு

நிவாரணப் பொருட்களைச் சேகரிக்க அங்கே நிற்கும் டூப் கிராமத்தைச் சேர்ந்த நிரு பருவா, "வீடுகளும் கிராமமும் வெள்ள நீரில் மூழ்கியிருப்பதை நீங்கள் காண விரும்பினால், நாங்கள் கிராமத்திற்குள் செல்ல வேண்டும். எங்கள் வீட்டில் இடுப்பு வரை தண்ணீர் உள்ளது. கொரோனா காரணமாக கடந்த மூன்று மாதங்கள் தொழில் பாதிக்கப்பட்டு வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஒரு மாதமாக வெள்ளம். ரேஷன் என்ற பெயரில் மூன்று கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு மட்டுமே அரசாங்கம் வழங்கியுள்ளது. வீட்டில் ரேஷன் இல்லை. யாரோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரேஷன்களை விநியோகிப்பதாகச் சொன்னார்கள், எனவே நான் இங்கு படகு மூலம் ரேஷன் வாங்க வந்தேன்." என்கிறார்.

47 வயதான நிரு தனது பொருளாதார நிலையைக் குறிப்பிடுகையில், "ஒரு மர படகு வாங்க எங்களிடம் பணம் இல்லை. ஐந்து பேர் பயணம் செல்லும் ஒரு சிறிய மர படகு 20 ஆயிரம் ரூபாய்க்கு வருகிறது. அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே போவது? எனவே, வாழை மரங்கள் மற்றும் மூங்கில் ஆகியவற்றால் ஆன படகில் வந்து செல்கிறோம். ஒருபுறம் கொரோனா பயம், இப்போது வெள்ளம் எங்கள் வாழ்வைக் கடினமாக்கியுள்ளது, " என்று கூறுகிறார்.

காணுமிடமெல்லாம் தண்ணீரும், கண்ணீரும்

அசாம் வெள்ளம்:

பட மூலாதாரம், DILIP SHARMA

நிருவுடன் பேசிய சிறிது நேரத்தில், கிராமத்தின் ஒரு பகுதியை ஒரு நாட்டுப் படகில் அடைந்தேன், அங்கு கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கியிருந்தன. அந்த நேரத்தில், சில குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் தண்ணீர் நுழைவதைத் தவிர்ப்பதற்காக அதிக மூங்கில் தட்டிகள் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த ரேஷன் பொருட்கள் எப்படிப் போதும்?

வீட்டிற்குள் இருந்து பேசிய 51 வயதான ரோமா பாச்சோனி, "நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக வெள்ளத்தின் பிடியில் இருக்கிறோம். மழை காரணமாக, வெள்ள நீர் மட்டம் குறைவதாகத் தெரியவில்லை. இந்த மூங்கில் தட்டிகளை இரவு தூங்குவதற்காகத் தயார் செய்கிறோம். இந்த வெள்ள நீரில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. " என்று கூறுகிறார்.

அசாம் வெள்ளம்: காணுமிடமெல்லாம் தண்ணீரும், மக்களின் கண்ணீரும் - வடகிழக்கின் பெருந்துயர்

பட மூலாதாரம், DILIP SHARMA

வீட்டினுள் இடுப்பிற்கும் மேல் வரை தண்ணீரைக் காண்பிக்கும் பாச்சோனி, "தண்ணீர் காரணமாக மரச் சாமான்கள் சேதமடைந்துள்ளன. மீதமுள்ளவற்றைக் காப்பாற்றுவதற்காக, மூங்கில் தட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற கடினமான நேரத்தில் எங்களைப்பற்றிக் கவலைப்படவும் யாருமில்லை. அரசாங்கத்தின் நிவாரணம் என்ற பெயரில், எங்கள் ஆறு பேரின் குடும்பத்திற்கு ஒரு முறை ஆறு கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு கிடைத்தது. தொழிலும் இல்லாத நிலையில், இந்த உணவுப் பொருட்கள் எப்படிப் போதுமானதாக இருக்கும்? கிராமத்திலிருந்து தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் உதவ வேண்டும்." என்று கோருகிறார்.

தண்ணீரில் மூழ்கிய ஜெலங்கி டூப் கிராமத்திற்கு சிறிது தூரம் தாண்டிச் செல்லும்போது, படகில் சென்று கொண்டிருந்த பினோந்தோ சந்திர பருவாவை சந்தித்தேன்.

வெள்ள நிலைமை குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்த பருவா, "ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் வருகிறது, ஆனால் இந்த முறை மழை காரணமாகத் தேங்கிய நீரால் நிலைமை மிகவும் மோசமடைந்தது. நாங்கள் விவசாயத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்தோம், ஆனால் இப்போது நிவாரணத்தை நம்பி. இந்த நிலைமை இன்னும் பல நாட்கள் வரை தொடரும் என நினைக்கிறேன்," என்கிறார்.

ஒருவரும் தப்பவில்லை

அசாமின் டியோக் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள ஜெலங்கி டூப் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் மீன்வளத்தை நம்பியிருக்கிறார்கள். ஆனால் வெள்ளம், வயலையும் வாய்க்காலையும் பாழாக்கிவிட்டது.

இந்த நேரத்தில், படகு மட்டுமே கிராமத்தை அடைய ஒரே வழி. வீடுகளில் தயாரிக்கப்பட்ட படகுகள் உள்ளவர்கள் அவசரக் காலங்களில் அங்கிருந்து வெளியேறலாம். பொருளாதார ரீதியாகப் பலவீனமானவர்கள், ஆபத்தான வாழை மரம் மற்றும் மூங்கில் படகு உதவியுடன் தப்ப முயல்கிறார்கள்.

உண்மையில், ஜெலங்கி டூப் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து பிரம்மபுத்ரா மற்றும் குறிப்பாக மிதோங் நதியை விட அதிகம் என்கிறார் அரசு பள்ளி ஆசிரியர் சுஷில் சைக்கியா.

"வெள்ளம் எங்களுக்குப் புதிதல்ல. சுமார் 400 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராமம் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தில் மூழ்கும். ஆனால், இந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசம். ஒரு வீடு கூட வெள்ளத்திலிருந்து தப்பவில்லை," என்கிறார்.

ஜெலங்கி டூப் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியின் உதவி ஆசிரியர் சைக்கியா கூறுகையில், "மிதோங் ஆற்றின் நீர் அபாய மட்டத்திற்கு மேலே பாய்கிறது. பிரம்மபுத்திராவும் தண்ணீரால் நிரம்பியுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் உள்ள நீர் வெளியேறவில்லை. வெள்ள நிலைமை மேம்படுவதற்கு அதிக காலம் பிடிக்கும். அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் இப்படித் தான் வாழ வேண்டியிருக்கும். மிதோங் ஆற்றின் நீர் குறைவாக இருக்கும்போது கிராமத்திலிருந்து தண்ணீர் வெளியேற சுவிஸ் கேட் திறக்கப்படும்." என்கிறார்.

நூறு ரூபாய்க்காக துயரடையும் மக்கள்

கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயிகள், அடுத்த ஒரு மாதத்திற்கு அவர்கள் வெள்ளத்திலேயே வாழ நேர்ந்தால் அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?

அசாம் வெள்ளம்:

பட மூலாதாரம், DILIP SHARMA

இது குறித்து 54 வயதான சைக்கியா, "இப்போது நிலைமை என்னவென்றால், மக்கள் உணவுப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் பார்த்திருப்பீர்கள், மூன்று கிலோ அரிசியை நிவாரணமாகப் பெற, மக்கள் வாழை மரப் படகில் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக, தொழிலாளர்கள் கூட வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் கடன் வாங்கி வாழ்கின்றனர். சில நேரங்களில் மக்கள் எங்கள் வீட்டிற்கு 100-200 ரூபாய் கேட்க வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது," என்று மனம் நொந்து கூறுகிறார்.

முன்னதாக, 1987 இல் ஜெலங்கி டூப் கிராமத்தில் ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டது, ஆனால் அந்த நேரத்தில் கூட இப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை.

வெள்ள நீர் வெளியேறிய பின்னர், தொற்று நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. அதைக் கையாள வேண்டியிருக்கும் என்றும், நிலைமை முற்றிலும் இயல்பான நேரத்தில், இப்பகுதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் நேரம் வரும் என்றும் கிராம மக்களும் கவலைப்படுகிறார்கள்.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அசாமின் 20 மாவட்டங்களில் 1295 கிராமங்கள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 10,62,764 பேர் இன்னமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின்படி, அரசு திறந்த 206 நிவாரண முகாம்களில் 29,220 பேர் தஞ்சம் புகுந்தனர். முன்னதாக, இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

நிர்வாகம் என்ன கூறுகிறது?

நிவாரணப் பொருட்கள் குறித்த ஜெலங்கி டூப் கிராமவாசிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஜோர்ஹாட் மாவட்ட துணை ஆணையர் ரோஷ்னி கோராதி பிபிசியிடம்,"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் எங்கள் வட்ட அதிகாரிகள் எந்தெந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என்று மதிப்பீடு செய்கிறார்கள். ஜெலங்கி டூப் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்வாகம் இருமுறை நிவாரணப் பொருட்களை விநியோகித்துள்ளது. மூன்றாவது அலைக்குப் பிறகு, அந்த கிராமத்தில் மீண்டும் வெள்ளம் புகுந்துள்ளது," என்று கூறுகிறார்.

ரோஷ்னி மேலும் கூறுகிறார், "சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே அரிசி-பருப்பை நிவாரணப் பொருட்களாக விநியோகிக்கின்றன, ஆனால் பல முறை அதே நபருக்கு மீண்டும் மீண்டும் நிவாரணம் கிடைக்கிறது. மேலும் சிலர் விடுபட்டுப் போகிறார்கள். அதனால்தான் அனைத்து அரசு சாரா நிறுவனங்களையும் அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பொருட்களை விநியோகிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம், இதனால் அனைத்து மக்களுக்கும் சரியான முறையில் நிவாரணம் கிடைக்க முடியும்."

ஜெலங்கி டூப் கிராமத்தில் பணிபுரியும் வட்ட அலுவலர் ஆகாஷி துவாரா கூறுகையில், "இதுவரை இந்த கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு இரண்டு முறை நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண விநியோக விதிகளின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மூன்று நாட்களுக்கு ஒரு கிலோ 800 கிராம் அரிசி, 300 கிராம் பயறு மற்றும் 90 கிராம் உப்பு வழங்கப்படுகிறது. " என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: