சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: ஐ.நா சபையில் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்"
சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்துத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தங்களது கடையைக் கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அது தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
நியூயார்க்கில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "ஒவ்வொரு மரணத்தையும், அதுசார்ந்த அனைத்து வழக்குகளையும், முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படுமா?"

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு தருவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரானாக்கு பலியான மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்வரிசை பணியாளர்களின் உயிரிழப்பை ஈடு செய்ய சரியான இழப்பீட்டு திட்டம் ஒன்றை உருவாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டுள்ளது.
ஒரு இந்திய குடிமகனின் மரணம், அவரது சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல, அவரை சார்ந்திருந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது, அப்படிப்பட்ட நிலையில், ஒரு குடும்ப உறுப்பினரின் மரணமும், கொரோனாவால் உலகளவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான வேலை இழப்பும், குடும்பத்தினர் உயிர்வாழ்வதற்கான நிதி இல்லாமல் செய்து விடுகிறது எனவும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீபக் பிரகாஷ் என்ற வழக்கறிஞர் தொடுத்துள்ள இந்த பொது நல வழக்கு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - "43 ஆயிரம் பல்ஸ் - ஆக்ஸி மீட்டா்கள் கொள்முதல்"

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பாதித்த நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதற்காக 43 ஆயிரம் பல்ஸ்-ஆக்ஸி மீட்டா்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அதை சரிவர கவனிக்காவிடில், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து நோயாளிகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனவே பல்ஸ் - ஆக்ஸி மீட்டா் கருவியின் உதவியுடன் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாநிலத்தில் கரோனா பாதிப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43,000 பல்ஸ் - ஆக்ஸி மீட்டார்களைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 23,000 கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ஓரிரு நாட்களில் பெறப்படும்.
தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான கருவிகள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












