ராஜஸ்தான்: சச்சின் பைலட், அசோக் கெலாட் இடையே என்ன பிரச்சனை? காங்கிரஸ் அரசுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், தில்னவாஸ் பாஷா,
- பதவி, பிபிசி இந்தி சேவை
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டு கோஷ்டிகளாகப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு ஆட்சி ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக, முதல்வர் அசோக் கெலாட் உடனான கருத்து வேறுபாடு அதிகரித்ததை அடுத்து, துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தில்லி சென்றுள்ளார்.
பதவி மோதல்
முதல்வர் பதவிக்கு இவர்களிடையே போட்டி நிலவியது அனைவரும் அறிந்ததே. 2018-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதே இந்த பதவி மோதல் இருவரிடையே தொடங்கியது.
காங்கிரஸ் தலைமை அசோக்கெலாட்டுக்கு முதல்வர் பதவியும் சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும் கொடுத்துச் சமாதானப்படுத்தியது.
தற்போது சச்சின் பைலட் மாநில காங்கிரஸ் தலைவராகவும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் உள்ளார்.
ஆனாலும், முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பனிப்போர் தொடர்ந்துகொண்டிருந்தது.

பட மூலாதாரம், Nur Photo
மாநில காவல் துறையின் சிறப்புப் படை தரப்பில், அரசைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை செய்ய இருப்பதாக, முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து நிலைமை உச்சத்தை அடைந்தது.
மாநிலத்தில் எம் எல் ஏக்கள் ஆதரவைப் பெற நடந்து வரும் குதிரை பேரம் குறித்த விசாரணைக்காகவே முதல்வர், துணை முதல்வர், கட்சியின் கொறடா, இதர அமைச்சர்கள், எம் எல் ஏ-க்கள் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் அசோக் கெலாட், இந்த நோட்டீஸ் சாதாரண விளக்கம் கேட்பதற்காகவே அனுப்பப்பட்டது என்றும் ஊடகங்கள் இவற்றைப் பெரிது படுத்திவிட்டதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
ராஜஸ்தானில் நடப்பது என்ன?
200 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் 107 எம் எல் ஏ-க்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதில் கட்சி தாவி காங்கிரஸுக்கு வந்த பஹுஜன் சமாஜ் கட்சி எம் எல் ஏ-க்களும் சிலர் உள்ளனர். இதைத் தவிர, 12-13 சுயேச்சை எம் எல் ஏ-க்களும் கெலாட் அரசுக்கு ஆதரவளித்துள்ளனர்.

பட மூலாதாரம், Alamy
பெரும்பான்மை அடிப்படையில் கெலாட் அரசு வலுவாகவே உள்ளது. 2018 தேர்தலில் பாஜக 73 இடங்களை வென்றது. இப்போதுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் பாஜக-வைக் காட்டிலும் 48 எம் எல் ஏ-க்கள் அதிகம் உள்ளனர்.
ஜெய்ப்பூரின் பிரபல பத்திரிக்கையாளர் நாராயண் பாரோட் கூறுகிறார், "சச்சின் பைலட்டுடன் 25 எம் எல் ஏ-க்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், இப்போதுள்ள நிலையில் கெலாட் அரசுக்கு ஆபத்து இல்லை."
மேலும், அவர், "ராஜஸ்தானில் மத்தியப் பிரதேசம் போன்ற நிலை இல்லை. அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் எம் எல் ஏ-க்கள் எண்ணிக்கையில் வித்தியாசம் குறைவாக இருந்தது. தனது ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் விலகினாலும் கூட, அரசு கவிழும் நிலை இல்லை." என்று கூறுகிறார்.
பாஜகவில் இணைகிறாரா சச்சின் பைலட்
சச்சின் பைலட் பாஜகவில் இணைவது குறித்த செய்திகளைக் குறிப்பிட்ட நாராயண் பாரோட், "சச்சின் பைலட் பாஜகவுடன் தொடர்பில் இருக்கலாம். ஆனால், அவர்களுடன் என்ன பேச்சுவார்த்தை நடக்கும் என்பதுதான் கேள்வி. அவர் முதல்வராக விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எண்ணிக்கையில் அடிப்படையில் அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சூழல், காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம் போலத் தான் தெரிகிறது. சச்சின் பைலட்டுக்கு அவரது சரியான இடத்தைக் காட்ட கட்சி விரும்புவதாகவே தெரிகிறது.
அரசைக் கவிழ்க்கும் முயற்சியா?
ராஜஸ்தான் காவல் துறையின் எஸ் ஓ ஜி, அரசைக் கவிழ்க்க சதி என்ற குற்றச்சாட்டின் மீதான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், முதல்வர், துணை முதல்வர், பல எம் எல் ஏ-க்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டு பிரதேச தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ் ஓ ஜி தலைவர் அசோக் ராத்தோர், பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த இருவர் கைது குறித்து உறுதி செய்தார்.
அசோக் சிங், பரத் மலாணயீ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் மேலும் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க சொல்வது என்ன?
கைதான இருவரும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுவதை அக்கட்சி மறுத்துள்ளது.
பிபிசிக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, இந்த இருவரும் கட்சியுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும் முன்பு எப்போதோ கட்சியில் இருந்திருக்கலாம், இப்போது இல்லை என்றும் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் அரசைக் கவிழ்த்தது போலவே ராஜஸ்தானிலும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததால், முதல்வர் கமல்நாத் பெரும்பான்மை இழந்து பதவி விலக நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோதிராதித்ய சிந்தியா ட்வீட்
இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பகிர்ந்த ட்வீட்டில், "எனது முந்தைய சகாவான சச்சின் பைலட்டும் ராஜஸ்தான் முதல்வரால் ஓரங்கட்டப்பட்டுவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. காங்கிரஸுக்கு திறமையில் நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












