கொரோனா வைரஸ்: மூச்சுத் திணறும் இந்தியா - மருத்துவமனைகளின் நிலை இதுதான்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் நகருக்கு தெற்கு 80 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது சேவக்ரம் என்னும் அந்த கிராமம். இலவச மருத்துவம் பார்க்கப்படும் இந்த மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
தீவிர சிகிச்சை அறை உள்பட இங்குள்ள பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளுக்குக் குழாய் வழி ஆக்சிஜன் வசதி தேவைப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளரான எஸ்.பி. கலந்த்ரி, "இது மிகவும் சவாலானது. கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பதற்கு ஆக்சிஜன் குழாய் வசதி மிகவும் அவசியம். எனவே, வரும் காலங்களில் கூடுதலான படுக்கைகளை ஏற்படுத்தும்போதே அதற்கு தேவையான ஆக்சிஜன் குழாய் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் சுமார் 15 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரல் செயலிழப்பு ஏற்படுவதாகவும், எனவே அவர்களுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சுவாச கோளாறு அறிகுறியே இல்லாத சில கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் குறைந்த அளவு ஆக்சிஜன் அளவே இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான நிலையிலுள்ள ஒரு பகுதியினருக்கு வெண்டிலேட்டரின் உதவி தேவைப்படுகிறது.
"கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு இந்தியாவில் ஆக்சிஜனுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறுகிறார் மும்பையில் தனது நிறுவனம் இருந்த இடத்தை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையமாக மாற்றிய மருத்துவர் முசாபல் லக்தவாலா.

பட மூலாதாரம், Reuters
இதே அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தால், உலகிற்கு ஒரு நாளைக்கு சுமார் 6,20,000 கன மீட்டர் ஆக்சிஜன் அல்லது 88,000 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் சந்தையின் 80 சதவீதம் ஒருசில நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும், பல்வேறு நாடுகளில் உற்பத்தியை விட தேவையின் அளவு அதிகமாக உள்ளதாகவும் அது கூறுகிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

இதுவரை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள இந்தியாவில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு கொரோனா பரவலுக்கு முன்பு ஒரு நாளைக்கு 900 டன்கள் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், தற்போது அது 1,300 டன்களாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள 500 தொழிற்சாலைகளில் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன், பொதுவாக ஒட்டுமொத்த ஆக்சிஜன் விநியோகத்தில் 15 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள ஆக்சிஜன் பெரும்பாலும் எஃகு மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் பயன்பாட்டிற்கு செல்கிறது.
இந்த நிறுவனங்கள் ஆக்ஸிஜனை திரவ வடிவில் டேங்கர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றன. பின்னர் அவை குழாய் மூலம் நேரடியாக படுக்கைகளுக்கு அனுப்பப்படுகின்றன. எஃகு மற்றும் அலுமினிய சிலிண்டர்கள் மூலமாகவும் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுகிறது. செறிவூட்டிகள் எனப்படும் சிறிய இயந்திரங்கள் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை வடிகட்ட பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் இப்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடங்கிய பிறகே மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் குறித்த தரவுகள் சரிவர தொகுக்கப்படாதது குறித்து தெரியவந்தது.
"சிலிண்டர்கள் மற்றும் டேங்கர்கள் மூலமாக எவ்வளவு ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று எங்களுக்கு தெரியாது. எங்களிடம் எவ்வளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருந்தன என்றுக்கூட எங்களுக்கு தெரியாது" என்று கூறுகிறார் அகில இந்திய தொழில்துறை வாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாகேத் டிக்கு.
இந்த பிரச்சனைகளை களைவதற்காக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் வாயு உற்பத்தி நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுதான், ஜம்மு & காஷ்மீரிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் ஒரு திரவ ஆக்சிஜன் தொழிற்சாலைகள் கூட இல்லை என்பதும், வடகிழக்கு மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தியில் உள்ள பிரச்சனைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்படக்கூடியது அல்ல என்பதை உணர்ந்த அரசு, தொழில்துறைகளுக்காகத் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மருத்துவ தேவைக்குப் பயன்படுத்த விரைந்து முடிவெடுத்தது. இருப்பினும், தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனுக்கும், மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனுக்கும் உற்பத்தித்துறை மற்றும் தரக்கட்டுப்பாட்டில் சிறிய வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனைகளின் தேவைக்கேற்றவாறு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் உறுதிசெய்ய இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை நிறுவின.
இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் பிரச்சனை தொடர்கிறது.
ஆக்சிஜனை மொத்த அளவில் கொள்முதல் செய்யும் அரசு மருத்துவமனைகள் அதற்கான பணத்தைச் சரிவர வழங்குவதில்லை என்று சிறிய அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. உதாரணமாக, வடகிழக்கு மாநிலமான அசாமில் அரசு மருத்துவமனைகளுக்காக வாங்கப்பட்ட ஆக்சிஜனுக்கான தொகை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வழங்கப்படவில்லை என்று கூறுகிறார் டிக்கு.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை செலுத்தப்படாததால், ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதையடுத்து, 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 30 குழந்தைகள் உயிரிழந்தன என்பது நினைவுகூரத்தக்கது.
"ஒருபுறம் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிசெய்யுமாறு அரசு எங்களிடம் கேட்கிறது. ஆனால், மறுபுறம் கொள்முதல் செய்யப்படும் ஆக்சிஜனுக்கான பணத்தைச் சரிவர வழங்குவதில்லை" என்கிறார் டிக்கு.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் உள்ள சுமார் 1,30,000 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளதாக அரசு கூறுகிறது. இதுமட்டுமின்றி, நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஐம்பதாயிரம் வெண்டிலேட்டர்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
முதலில் இந்தியாவின் பெருநகரங்களில் பரவிய கோவிட்-19 நோய்த்தொற்று தற்போது கிராமப்புற பகுதிகளில் பெருகி வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலும் ஒழுங்கற்ற கட்டமைப்பை கொண்டுள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் குழாய் வழி ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்றால் பல உயிர்களை இழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
"உண்மையில் நமக்கு இன்னும் வெண்டிலேட்டர்கள் வேண்டியதில்லை. தற்போதைய சூழ்நிலையில், கிராமப்புற பகுதிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதே முக்கியமான பணி" என்று கூறுகிறார் பீகாரில் 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை நடத்தி வரும் மருத்துவர் அத்துல் வர்மா.
இந்தியாவில் தற்போதைய ஆக்சிஜன் தேவையை விட ஐந்து மடங்கு அதிக உற்பத்தியை மேற்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்பு இருப்பதால், தட்டுப்பாடு குறித்த கவலைகளுக்கு அவசியமில்லை. இதற்கு காரணமென்னவென்றால் வியப்பளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக மற்ற நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டு அறுவை சிகிச்சைகளை தள்ளிப்போட்டதே இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. "தனியார் மருத்துவமனைகளில் பிற நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், மருத்துவமனைகளுக்கான எங்களது ஆக்சிஜன் விநியோகம் ஒட்டுமொத்தமாக இருபது சதவீதம் குறைந்துள்ளது" என்று கூறுகிறார் முன்னணி வாயு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைவரான அனிர்பன் சென்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், அடுத்த சில மாதங்களுக்குக் கிராமப்புற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை ஏற்படுத்துவதே சவாலான பணியாக இருக்கும்.
"சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு ஆக்ஸிஜனைத் கொண்டுசெல்வது எளிதான பணியல்ல. ஏனெனில், அதற்கான வசதிகள் சரிவர ஏற்படுத்தப்படவில்லை. கிராமப்புற பகுதிகளில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அல்லது குழாய்வழி ஆக்ஸிஜனுக்கான வசதி இல்லை என்பதுடன் அங்கு திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியும் இல்லை" என்று கூறுகிறார் சென்.
"இது மிகவும் கடினமான பணியாக இருக்கும். அதற்கு இப்போதே நாம் தயாராக வேண்டும்."
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












