சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் ரேவதியுடன் முதல்கட்ட விசாரணை நிறைவு

பட மூலாதாரம், Twitter
சாத்தான்குளம் கொலை வழக்கில் பிரதான சாட்சியான காவலர் ரேவதியிடம் முதல் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலக வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சங்கர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுவரை, சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுப்பதற்காக நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காவலர் ரேவதி உடனான விசாரணை குறித்த கேள்விகள் எழுந்த போது முதல் கட்ட விசாரணை நேற்று நிறைவு பெற்றது என்றும் மேலும் விசாரணை தொடரும் என்றும் தெரிவித்தார்.
''சாத்தான்குளம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சாட்சிகளின் வாக்குமூலம் தடயங்கள் ஆவணங்களை ஆராய்ச்சி செய்த பிறகு சி.பி.சி.ஐடி. விசாரணைக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். இந்த கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தொடர் விசாரணை நடத்தி வருவதால் உடனே இறுதி முடிவுக்கு வர இயலாது விசாரணையின் முடிவில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வழக்கின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Twitter
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.
ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.
இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
இந்த மரணங்களால் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவில் காவல்துறை அத்துமீறல்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்தன.
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வந்தது. எனினும், அவர்கள் விசாரணையைத் தொடங்கும் வரை சிபிசிஐடி இந்த வலக்கை விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறையினர் ஐவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












