சாத்தான்குளம் வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் கைது

முத்துராஜ்

சாத்தான்குளம் தந்தை - மகன் காவல் மரணம் தொடர்பான வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (வெள்ளிகிழமை) இரவு சாத்தான்குளம் காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார்.

காவலர் முத்துராஜை ஜூலை மாதம் 17ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ஹேமா அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சாத்தான்குளத்தில் தங்களுடைய மொபைல் போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு திறந்துவைத்திருந்ததாகக் கூறி, காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலான விவகாரமாக உருவெடுத்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களாக இருந்த ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன், மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ்

பட மூலாதாரம், Twitter

முதலில் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் முருகன் ஆகியோருடன் முத்துராஜும் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக வெள்ளிக்கிழமை காலை சிபிசிஐடி அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிகிழமை மதியம் காவலர் முத்துராஜ் தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் செல்பேசிக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிபிசிஐடி போலீசார் முத்துராஜ் கடைசியாக பேசிய செல்பேசி டவர் சிக்னலை வைத்து தேடியபோது அவர் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற சிபிசிஐடி போலீசார் காவலர் முத்துராஜைக் கைது செய்து தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கின் பின்னணி என்ன?

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.

file picture

பட மூலாதாரம், Getty Images

ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.

இந்த மரணங்களால் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவில் காவல்துறை அத்துமீறல்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்தன.

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வந்தது. எனினும், அவர்கள் விசாரணையைத் தொடங்கும் வரை சிபிசிஐடி இந்த வலக்கை விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறையினர் ஐவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: