இந்தியா - இலங்கை 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் ஆட்ட நிர்ணயம்? - என்ன சொல்கிறது இலங்கை

பட மூலாதாரம், Getty Images
2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அதனால், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் இந்திய அணியுடனான இறுதி போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
இந்த கருத்தானது இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறியது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான முறைப்பாடு கடந்த மாதம் 24ஆம் தேதி விளையாட்டு தொடர்பிலான தவறுகளை ஆராயும் விசேட விசாரணை பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதா? அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அல்லது அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெற்றதா என்பது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா, முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் உபுல் தரங்க ஆகியோரிடம் கடந்த சில தினங்களாக சாட்சியங்கள் போலீஸாரினால் பதிவு செய்யப்பட்டது.
இதன்படி, இன்று முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட போதிலும், இறுதித் தருணத்தில் விசாரணைகளுக்காக சமூகமளிக்க வேண்டாம் என அவருக்கு போலீஸார் அறிவித்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
விசாரணைகளுக்காக வேறொரு தினத்தில் அழைப்பு விடுப்பதாக மஹேல ஜயவர்தனவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் இன்று விசாரணை அதிகாரிகளிடம் முன்னிலையாகியிருந்தார்.
தான் தொடர்பில் தவறாக கருத்துக்கள் வெளியாகியமையினாலேயே தான் இன்றைய தினம் சமூகமளித்ததாக அவர் கூறினார்.
இந்த நிலையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, குறித்த போட்டியில் எந்தவொரு ஆட்டநிர்ணயமும் இடம்பெற்றமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் சாட்சியங்கள் கிடைக்கவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதன்படி, குறித்த விசாரணைகளை நிறுத்துவதற்கு விளையாட்டு தொடர்பிலான தவறுகளை ஆராயும் விசேட விசாரணை பிரிவினர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கையொன்றை விளையாட்டு தொடர்பிலான தவறுகளை ஆராயும் விசேட விசாரணை பிரிவு, பதில் போலீஸ் மாஅதிபருக்கு இன்று கையளித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்திருந்த பின்னணியிலேயே, போலீஸார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
அரசியல்வாதிகள், விளையாட்டு துறைசார்ந்தவர்கள் மாத்திரமன்றி, மக்களும் தங்களது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக நேற்றைய தினம் அமைதியான பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் நற்பெயரை பாதுகாத்த விளையாட்டு வீரர்களை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறத்தியே இந்த ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருந்தது.
அதேபோன்று விளையாட்டு வீரர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்த வேண்டும் என அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












