அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கட்சி பொறுப்பு

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கட்சி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். மார்ச் மாதம், குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம் தொடர்பாக அவர் கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக மார்ச் 22ம் தேதி வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. கட்சிப்பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதால், அவர் அமைச்சர் பதவியில் தொடர்ந்தார்.
தற்போது கட்சி பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்ட செயலாளராக ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்ட கழக பணிகளை கவனிப்பதற்கு பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தை விமர்சித்து ஊடகங்களில் பேசிவருவதாகவும், அவருடைய கருத்து சர்ச்சைக்குள்ளாவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சமயத்தில் கருதப்பட்டது.
கடந்த 2019ல்,''ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற நேரத்தில், ''பிரதமர் மோடிதான் எங்களுக்கு 'டாடி'யாக இருந்து வழிகாட்டுகிறார்'' எனக் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












