சாத்தான்குளம் சம்பவம்: “காவல் சித்ரவதை தொடர்பாக ஒரு சட்டம் தேவை” – ஹென்றி திஃபேன்

பட மூலாதாரம், Getty Images
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தேசிய அளவில் விவாதமாகியிருக்கும் நிலையில், காவல்துறையினரின் அத்துமீறல்கள், அதற்கான காரணங்கள், மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள், அத்துமீறல்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் மதுரையிலிருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். பேட்டியிலிருந்து.
கே. சாத்தான்குளத்தில் நடந்திருக்கக்கூடிய காவல்துறை அத்துமீறல்கள் எதைக் காட்டுகின்றன?
ப. தமிழ்நாட்டில் குற்றங்களுக்கான தண்டனை மறுப்பு இருக்கிறது. அதாவது impunity இருக்கிறது என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது. அதன் உச்சகட்டம்தான் சாத்தான்குளம். 2018ஆம் ஆண்டிலிருந்து, எந்த ஒரு அத்துமீறல் வழக்குகளிலும் தண்டனை கிடைக்கவில்லை. காவல் துறையில் கீழ் நிலையில் உள்ளவர்களை நம்பித்தான் மேலே உள்ள அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கையில், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தெனாவட்டு கீழ்நிலைக் காவலர்களுக்கு வந்திருக்கிறது. குறிப்பாக, உயர் காவல் அதிகாரிகளின் கவனக் குறைவுதான் இதற்குக் காரணம். ஒரு காவல் நிலையம் இவ்வளவு மோசமாக செயல்பட முடியாது. அந்தக் காவல்நிலையத்தில் இருக்கக்கூடிய சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர், அந்த நிலையத்திற்குப் பொறுப்பான காவல் துறை துணை கண்காணிப்பாளர் இவர்கள் யாருக்கும் அந்தக் காவல் நிலையத்தின் மீது கட்டுப்பாடே இல்லை.
307வது பிரிவின் கீழ் வழக்கை எதிர்கொண்டிருக்கும் ஒரு அதிகாரியை (ஆய்வாளர் ஸ்ரீதர்), எப்படி சட்டம் - ஒழுங்கிற்குப் பொறுப்பான அதிகாரியாக பணியாற்ற அனுமதிக்க முடியும்? அந்த அதிகாரி இன்னும் தண்டிக்கப்படாதவர் என்பது உண்மைதான். ஆனால், மக்களோடு சம்பந்தமுடைய ஒரு துறையில் எதற்கு அவரைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்? கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றச் செய்யலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு துறையில் பணியாற்றச் செய்யலாம்.
இது ஏதோ தனித்த சம்பவம் இல்லை. தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. 13ஆம் தேதிதான் இம்மாதிரி தாக்குதலில் ஒருவர் இறந்து போயிருக்கிறார். இது எல்லோருக்கும் தெரியும். ஜூன் 16ஆம் தேதியன்று சடலத்தை எரித்து, சாட்சிகளைக் கலைத்து வெற்றிபெற்றதால்தான் இனி யாரும் தொட முடியாது என்ற தைரியத்தில் மறுபடியும் இவ்வளவும் நடக்கிறது.
மார்ச் 24ஆம் தேதி முதல் பல காவல்துறை அத்துமீறல்களைப் பார்க்கிறோம். காவலர்கள் மிக மோசமான சூழலில் பணியாற்றுவதால் அது குறித்து இப்போது பேசக்கூடாது என நண்பர்கள் சொன்னார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். அன்றைக்கு கேள்வியெழுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இந்த நிகழ்வு நடந்திருக்காது.
ஒரு நீதித்துறை நடுவரிடம் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் எல்லோரையும் உருக்கியிருக்கிறது. ஆனால், 40 ஆண்டுகளாக நாம் எல்லோருக்கும் இதுதானே நடந்தது? காவல்துறை கட்டுப்பாட்டில் நிகழும் மரணங்களை விசாரிக்கச் செல்லும்போது நம்மை ஒவ்வொரு முறையும் இப்படித்தானே நடத்தினார்கள்? நீதித்துறை நடுவரைப் பார்த்து "உன்னால் என்ன புடுங்க முடியும்" என்று கேட்டார்கள். எங்களைப் பார்த்து தேசத் துரோகிகள் வந்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவில் சமூகப் பரவல் வந்துவிட்டதா குறித்துப் பேசுகிறார்கள் அல்லவா, அதுபோல இந்த தண்டனை மறுப்பு என்பது சமூகப் பரவலாகிவிட்டது. இதைத் திருத்துவது அவ்வளவு சுலபமல்ல.
கே. சாத்தான்குளம் விவகாரத்தில் ஜாதி என்ற ஒரு கோணம் இருப்பதாக விவாதிக்கப்பட்டது. காவல்துறையின் நடவடிக்கைகளில் ஜாதிக்கு ஏதும் பங்கிருக்கிறதா?
ப. எப்படி இல்லாமல் இருக்கும்? சமூகத்தில் ஜாதி இருக்கும்போது காவல்துறைக்குள்ளும் இருக்கும். ஜாதி, மத வெறி காவல்துறைக்குள் வளர்க்கப்படுகிறது.
கே. இந்த விவகாரத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஊர்க் காவல் படை போன்ற அமைப்புகள் இருக்கும்போது ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போன்ற அமைப்புகள் தேவையானவைதானா?
ப. காவல்துறையின் சிறந்த மனிதர்களில் ஒருவர் பிரதீப் ஃபிலிப். அவர் தற்போது டிஜிபி அந்தஸ்தில் இருக்கிறார். அவர் எஸ்பி அந்தஸ்தில் இருக்கும்போது சமூகத்தையும் காவல் பணியில் ஈடுபடுத்த நினைத்தார். அது ஒரு நல்ல எண்ணம். அதற்காகத்தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதனைச் சட்டரீதியாகச் செய்ய வேண்டும். தற்போது உள்ள காவல்துறை 1861ஆம் ஆண்டின் காவல்துறைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். அப்படியில்லாமல் ஒரு அதிகாரி தனியாக உருவாக்கிய அமைப்பை எப்போதும் எப்படி பயன்படுத்த முடியும்?
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற கருத்துருவாக்கம் சிறப்பான ஒன்று. அதை சட்டரீதியாக செய்யாவிட்டால் தவறான நபர்கள் உள்ளே வரக்கூடும். இப்போது ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸில் உள்ள நபர்களுக்கு சட்ட மீறல் எது எனத் தெரியாது. காவல்துறைக்குள் சென்றால் லத்தியை எடுத்து நான்கு பேரை அடிக்க தமக்கு உரிமை இருப்பதாக நம்புகிறார்கள். உயரதிகாரிகள் அந்த நம்பிக்கையை அளிக்கிறார்கள். அதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
உயரதிகாரிகள் சொல்லும்படி செய்தால், காவல்துறைக்குள் எளிதில் நுழைந்துவிடலாம் என ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸில் இருப்பவர்கள் கருதுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் காவல்துறைக்குள் எத்தனை பேர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மூலம் நுழைந்திருப்பார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் எல்லோரும் இதுபோன்ற பார்வையோடுதான் இருப்பார்கள். தவறான எண்ணத்தோடு உள்ளே வந்து, இதைத் தொடர்கிறார்கள்.
மகேந்திரனுடைய உடலை எரித்த பிறகு, ஏற்பட்ட பயத்தில் அவர்கள் பேசிய உரையாடல்தான் நமது காதுகளுக்கு வந்தது. "அந்த நபர் அடிக்கப்பட்டு, மருத்துவமனையில் கிடந்தார், அவர் இறந்துவிட்டார், பிரேதப் பரிசோதனையே செய்யாமல் எரித்துவிட்டோம்" என்றெல்லாம் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
இப்போதாவது காவல்துறை தலைவர் தலையிட்டு, இந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை மூட வேண்டும். காவல்துறையினருக்கு உதவியாளர்கள் வேண்டுமென்றால் என்எஸ்எஸ், ஊர்க்காவல் படையினரை வைத்துக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு, இம்மாதிரியான ஒரு கும்பலைத் திரட்டுவது சரியல்ல. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்தாறு பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றால், அவர்கள் இனி எந்த அரசுப் பணியிலும் சேர முடியாது. அவர்கள் வாழ்க்கையே வீணாகிவிடும்.

பட மூலாதாரம், Getty Images
கே. வாச்சாத்தி, சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலைய சித்ரவதை போன்ற பல விவகாரங்கள் பூதாகரமாக வெடித்திருக்கின்றன. சில சம்பவங்களில் தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் எப்படி இம்மாதிரி சித்ரவதைகள் தொடர்கின்றன?
ப. இல்லை. சமீப காலத்தில் இம்மாதிரி யாருக்கும் தண்டனைகள் அளிக்கப்படவில்லை. சம்பவங்கள் நடக்கும் அளவுக்கு தண்டனைகள் வருவதில்லை.
ஆறு மாதத்திற்கு முன்பாக மதுரையில் ஒருவர் போலீஸ் காவலில் இறந்துவிட்டார். அதை எங்களைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஒருவர் கையில் எடுத்தார். தீபாவளியன்று அந்த மரணம் நடந்தது. நீதிமன்றத்தை அணுகி பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதற்குப் பிறகு அந்த வழக்கை நான் எடுத்துக்கொண்டேன். இந்த வழக்கை நாங்கள் எடுத்துக்கொண்டோம் என்று தெரிந்தவுடனேயே, வக்காலத்தை மாற்றிவிட்டார்கள். வேறொரு சிறிய வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டு நாங்கள் நீதிமன்றத்திற்குப் போனபோது, காலையிலேயே வழக்கை அவர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.
இந்த வழக்கில் இறந்தவருடைய தந்தையார்தான் மனுதாரர். அவரை 17 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதை வெளிப்படையாகவே பேசினார்கள். முடிவில், நீதிமன்றத்தில் என்னைக் குற்றவாளியாகப் பார்த்தார்கள். இறந்தவருடைய குடும்பமே இதில் கவலைப்படாதபோது நீங்கள் எதற்காக பேசுகிறீர்கள் எனக் கேட்டார்கள். லாக் - அப் மரணம் என்பது ஒரு தனி நபர் சார்ந்த விவகாரமா? அரசே நடத்த வேண்டிய வழக்கல்லவா அது? இப்போது பென்னிக்ஸ் வழக்கை யாராவது அந்தக் குடும்பம் தொடர்பான வழக்காகப் பார்க்கிறார்களா? இல்லையே.
எல்லா லாக் அப் - மரணங்களிலும் இதுதான் நடக்கிறது. சமீப காலத்தில் எந்த ஒரு லாக் - அப் மரணத்திலும் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. காவல் சித்ரவதை தொடர்பாக நமக்கு ஒரு சட்டம் தேவை.
எல்லா காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராவைப் பொறுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது? காவல்நிலையத்தின் ஒரு பகுதி, கேமராவில் தெரியாதபடி அதனைப் பொறுத்துகிறார்கள். ஆய்வாளர் மேல் மாடியில் போய் அமர்ந்து கொள்கிறார். ஒரு நிலையப் பொறுப்பாளர் எப்படி மேலே போய் உட்கார்ந்துகொள்ளலாம்? அந்த முதல் மாடியில் சிசிடிவி கேமராவும் கிடையாது. அங்கே வைத்துத்தான் அடிக்கிறார்கள்.
இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகும் வீடியோக்களை யாராவது சோதிக்க வேண்டும் என ஏதாவது சுற்றறிக்கை இருக்கிறதா? இல்லை.
மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரி என ஒரு அமைப்பு இருக்கிறது. மிக அற்புதமான கட்டமைப்பு. தாலுகா மட்டத்தில் இருந்து இருக்கிறது. எல்லா காவல் நிலையங்களையும் இந்த அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தினமும் மூன்று தடவைகள் சென்று பார்க்க வேண்டும். இந்த வழக்கறிஞரின் பெயரும் மொபைல் எண்ணும் காவல் நிலையத்தின் சுற்றுச் சுவரில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இம்மாதிரி நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து அங்கே அனுப்ப வேண்டும். யாராவது காவல்நிலையத்தில் அடைபட்டிருந்தால், அவர்கள் மாவட்ட சட்டப் பணிகள் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அந்த அமைப்பு வேறொரு வழக்கறிஞரை அனுப்பி அவர் முறைப்படி கைதுசெய்யப்பட்டிருக்கிறாரா என்பதைக் கேட்க வேண்டும். இப்படி நடந்தால், ஒரு சட்டவிரோத நடவடிக்கையும் காவல்நிலையத்தில் நடக்காது. இதுபோல சின்னச் சின்ன சீர்திருத்தங்களின் மூலம் சித்ரவதைகளைக் குறைக்க முடியும்.
கே. காவல்துறை அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதில் மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு எப்படியிருக்கிறது?
ப. மாநில மனித உரிமை ஆணையம் தற்போது தலைவர் இல்லாமல், பொறுப்பு தலைவருடன் செயல்படுகிறது. ஒரு வகையில் நல்லது என நாங்கள் நினைக்கிறோம். அங்கே தலைவர் இருந்ததுதான் இடைஞ்சலாக இருந்தது. தலைவர் இருக்கும்போதுதான் தூத்துக்குடி சம்பவம் நடந்தது. அப்போது மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி வருவதற்கு டிக்கெட்டையெல்லாம் புக் செய்துவிட்டார்கள். ஆனால், தலைவர் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யச் சொல்லிவிட்டார்.
ஆனால், இப்போது உள்ள இரு உறுப்பினர்களும் வெகு நாட்களுக்குப் பிறகு செயல்பட ஆரம்பித்துள்ளனர். மனித உரிமை ஆணையம் பல உத்தரவுகளை பிறப்பிக்கிறது. ஆனால், அவற்றுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த வழக்குகள் அனைத்தையும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். அந்த அமர்வு உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்துவிட்டது. ஆகவே அவை அப்படியே கிடக்கின்றன.
தற்போது மனித உரிமை ஆணையத்தில் 34 காலியிடங்கள் இருக்கின்றன. இப்போதுதான் ஆணையத்திற்கான டிஜிபி மட்ட அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தைப் பொறுத்தவரை அவர்கள் செயல்படவேகூடாது என சபதம் எடுத்திருக்கிறார்கள். தூத்துக்குடி விவகாரத்தில் ஒரு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், ஒரு விசாரணைக் குழுவை அனுப்பினார்கள். அது குழுவினர் சிறப்பாக செயல்பட்டார்கள். நல்ல அறிக்கையும் கொடுத்தார்கள். ஆனால், இப்போது அந்த அறிக்கை இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. அக்டோபர் 2018ல் இந்த வழக்கே மூடப்பட்டுவிட்டது. ஆக, தூத்துக்குடி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை நடத்தவில்லை. அருணா ஜெகதீசன் ஆணையம் இன்னும் இரண்டு ஆண்டுகள் விசாரிப்பார்கள். தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கை மூடிவிட்டது. இதிலிருந்து அந்தக் காவலர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? அதனால்தான் உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது என்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
கே. இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் வணிகர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதுபோலத் தெரிகிறது. இதற்குக் காரணம் என்ன?
ப. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது எனத் தெரிந்த பிறகு, அவர்கள் ஏன் அத்துமீற மாட்டார்கள்? மதுரையில் ஒரு ஏடிஜிபி மட்டத்திலான அதிகாரி ஆணையராக இருக்கிறார். நாம் பார்க்கும் வீடியோவை அவரும் பார்க்கிறார். அவர் ஏதாவது ஒரு காவலரைக் கூப்பிட்டு இது தொடர்பாக கேட்டிருக்கிறாரா? இதுபோல வீடியோக்கள் வரும்போது அந்தந்த ஐஜிக்களுக்கு நான் அனுப்பிக்கொண்டேயிருக்கிறேன். ஏதும் நடப்பதில்லை. இந்த விவகாரத்தில் மூத்த அதிகாரிகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் சாயம்பட்ட பலர் இருக்கும் காரணத்தால், மற்றவர்கள் அமைதியாகப் போகிறார்கள்.
கே. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். ஏனென்றால் காவல்துறையினருக்கு உள்ள மன அழுத்தம் குறித்தும் பேசப்படுகிறது...
ப. எல்லோருக்கும் மன அழுத்தம் இருக்கும். நம்முடைய மன அழுத்தத்தை மற்றவரைக் கொடுமைப்படுத்த பயன்படுத்தலாமா? சாத்தான்குளம் சம்பவம் போன்ற ஒரு நிகழ்வு எங்கேயாவது மன அழுத்தத்தின் காரணாக நடந்ததாகச் சொல்ல முடியுமா? அவர்கள், இந்தக் கொடூரத்தை ரசிக்கிறார்கள்.
நிம்ஹாம்ஸ் பல லட்ச ரூபாயைச் செலவழித்து, காவல்துறையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குகிறது. ஆனால், அவ்வளவும் முடிந்த பிறகும் காவல்துறையினர் நன்றாக மக்களை அடிக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது.
திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், 80 காவலர்களை அடையாளம் கண்டு இவர்கள் மக்களோடு செயல்பட தகுதியற்றவர்கள் என முடிவுக்கு வந்து, அவர்களை மக்களோடு சம்பந்தப்படாத பதவியில் நியமித்திருக்கிறார். இதெல்லாம் நல்ல உதாரணங்கள்.
சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சப் - இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு இருக்கிறது. சாதாரண மனிதர்கள் மீது வழக்கு இருந்தால் அவர்களை பட்டியல் குற்றவாளி என்கிறார்கள். காவல்துறையினருக்கு இப்படி ஒரு பட்டியல் கிடையாதா? ஒரு காவல்துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை பாக்கியிருந்தால், மனித உரிமை ஆணைய வழக்கு பாக்கியிருந்தால், குற்ற வழக்கு பாக்கி இருந்தால் அவர்களை பொருத்தமான இடத்தில் நியமிக்க வேண்டாமா? இதெல்லாம் காவல்துறைக்குள்ளேயே செய்ய வேண்டிய சின்னச் சின்ன சீர்திருத்தங்கள். ஆனால், பெரும் விளைவுகள் இருக்கும்.
ஆனால், இம்மாதிரி நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பாக மூத்த அதிகாரிகள் எது சரி என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கீழே உள்ள காவலர்கள் அடி என்றால் அடிப்பார்கள். அடிக்கக்கூடாது என்றால் நிறுத்திவிடுவார்கள். ஆகவே மேலே இருக்கும் அதிகாரிகள்தான் இதற்குப் பொறுப்பு. அவர்கள் மிக மோசமான உதாரணமாக இருப்பதால்தான் கீழே இருக்கும் காவலர்கள் மோசமாகச் செயல்படுகிறார்கள்.
சாத்தான் குளத்தில் நீதித் துறை நடுவரைப் பார்த்து, அவ்வாறு சொல்லும் தைரியத்தைக் கொடுத்தது யார்? அங்கு வந்த ஏஎஸ்பியும் டிஎஸ்பியும்தான். அவர்கள் இருவருக்கும் இப்போது வேறு இடங்களில் பதவிகள் வழங்கப்பட்டுவிட்டன. பேசிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். இதுதான் தமிழ்நாடு காவல்துறை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












